டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு நியமனம்: ஆளுநர் மீண்டும் நிராகரிப்பு.

October 27, 2023

By இரா. தேவேந்திரன்.

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிக்கும் நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லை. எனவே, வேறொருவரை தலைவராக பரிந்துரைக்க வேண்டும்’ என்று தெரிவித்து, இதுதொடர்பான கோப்பை தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தமிழக டிஜிபியாக இருந்து கடந்த ஜூன் 30-ம் தேதி ஓய்வுபெற்ற சைலேந்திர பாபுவை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவராக நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. அத்துடன் அதன் உறுப்பினர்களாகவும் 8 பேரை புதிதாக நியமித்து, ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது.இதுதொடர்பான கோப்புகள் ஆளுநரிடம் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த கோப்புகளை தமிழக அரசுக்கே ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார்.

இந்த பதவிகளுக்கான விண்ணப்பம் குறித்து வெளியிடப்பட்ட விளம்பரம், பெறப்பட்ட விண்ணப்பங்கள், தலைவர் – உறுப்பினர் பதவிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் விவரங்கள், அவர்கள் இறுதி செய்யப்பட்டது எப்படி? நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பது உட்பட பல்வேறு விவரங்களை அதில் ஆளுநர் கோரியிருந்ததாக கூறப்பட்டது.இதையடுத்து, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதாகவும், நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டது உள்ளிட்ட தகவல்களுடன் தமிழக அரசு சார்பில் ஆகஸ்ட் மாத இறுதியில் மீண்டும் ஆளுநருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டன.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை தெரிவித்து, வேறொருவரை தலைவராக பரிந்துரைக்குமாறு சமீபத்தில் தமிழக அரசுக்கு அந்த கோப்பை ஆளுநர் மீண்டும் திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் அதிகரித்து வருகிறது.

Share:

இரா. தேவேந்திரன்.

October 27, 2023

Leave a Comment