chennireporters.com

ஒரு விருது என்ன செய்து விடும் என்பதற்கு, தங்கராசு அவர்களின் வீடே சாட்சி…

பரியேறும்பெருமாள் நெல்லை தங்கராசு.

பரியேறும்பெருமாள்’ நெல்லை தங்கராசு, இன்று புது வீட்டில் பால்காய்ச்சி குடியேறுகிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி ஐந்தாம் தேதி இரவு 8 மணிக்கு, த.மு.எக.ச நாட்டுப்புறக் கலைச்சுடர் விருது 2020 அவருக்கு வழங்க இருக்கும் செய்தியை சொல்வதற்காக, அவரைத்தேடிச் சென்றேன்.

செய்தியைச் சொன்னதும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அவரது வீடுதான் இருள்மண்டிக் கிடந்தது. 40 ஆண்டுகளாக கால்களில் சலங்கை கட்டி, பெண்வேஷமிட்டு ஆடிய மகத்தானதொரு தெருக்கூத்துக் கலைஞன் ஓலைக் குடிசையில், மின்வசதியின்றி வாழ்வது தெரிந்தது.

அன்று இரவே, நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு அவர்களுக்கு ஒரே ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினேன், தங்கராசு அவர்களின் வீட்டைச் சரி செய்து தர இயலுமா என்று. அவரது வீட்டு முகவரி அனுப்புங்க என்றார்.

அடுத்த 12 மணிநேரத்தில், சப் கலெக்டர், தாசில்தார், ரெவின்யு இன்ஸ்பெக்டர், கிராம அதிகாரி, தலையாரி உள்ளிட்ட அனைவரும் அவரது குடிசை வீட்டு முன் ஆஜர். காரியங்கள் மளமளவென நடந்தன.

குடிசை மாற்று வாரியம் மூலம், புதிய வீடு கட்டும் உத்தரவு.. நமது நண்பர்கள் பலரின் ஒத்துழைப்போடு துவக்க நிலை ஏற்பாடுகள், போர் தண்ணி, மோட்டார், பம்ப் என வீடு நிறைவு பெற்றுவிட்டது.

உதவிய நண்பர்கள் பட்டியல் மிகப் பெரியது. வீட்டின் ஒவ்வொரு செங்கலுமே நன்றியோடு அவர்கள் பெயரைச் சொல்லும். தமுஎகச பொதுச் செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யா Aadhavan Dheetchanya இடையில் ஒருமுறை வந்து, வீடு கட்டும் பணிகளைப் பார்த்துச் சென்றார்.

மின் இணைப்பு பெற மின்சார வாரிய உதவிப்பொறியாளர் முத்துராமலிங்கம் செய்த உதவி மிக முக்கியமானது. வட்டாட்சியர்கள் செல்வன், ரஹமதுல்லா, மயன் ரமேஷ்ராஜா, முத்தமிழ் பாபு ஆகியோரின் உதவியை தங்கராசு மறக்கவே மாட்டார்.

அவருடைய குடும்பத்திற்கு பலசரக்கு பொருட்கள் உள்ளிட்ட உதவி வழங்கிய நண்பர்கள் அதிகம் பேர்.

எல்லோரது பெயர்களையும் நோட்டுப் போட்டு எழுதி, அவர்களின் பங்களிப்பையும் குறிப்பிட்டு அவரிடம் தந்துள்ளேன். அவருக்கு வாடகைக்கு வீடு கொடுத்து உதவிய நண்பர் சூடாமணி (sbi manager, Retd) அவர்களுக்கும் நன்றி.

ஒரு விருது என்ன செய்து விடும் என்பதற்கு, தங்கராசு அவர்களின் வீடே சாட்சி. அவரை உலகிற்கு அறிமுகப்படுத்திய திரைப்பட இயக்குநர் திரு. மாரி செல்வராஜ் அவர்கள் நாளை புதுவீட்டைத் திறந்து வைக்கிறார்.

அவரது சகோதரர் துணை வட்டாட்சியர் மாரிராசா விழா ஏற்பாடுகளைக் கவனித்து வருகிறார்.மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் விழா நடக்க இருக்கிறது.

அனைவரையும் அன்புடன் வரவேற்க ஆசைதான். இடம் மிகச் சிறியது. ஆங்காங்கே இருந்தே, கூத்துக்கலைஞர் தங்கராசு அவர்களை வாழ்த்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இரா.நாறும்பூநாதன்
மாநில துணைச்செயலாளர், த.மு.எக.ச.

இதையும் படிங்க.!