காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஏற்கனவே எம்பி யாக வெற்றி பெற்ற செல்வம் மீண்டும் களம் காண்கிறார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் பெரும்பாக்கம் ராஜசேகர் என்பவரும் பாமக சார்பில் ஜோதி வெங்கடேஷ் என்பவரும் போட்டியிடுகின்றனர். இந்த மும்முனைப் போட்டியில் செல்வம் மாபெரும் வெற்றி பெறுவார் என்கின்றனர் காஞ்சிபுரம் தொகுதி உடன்பிறப்புகள்.
செல்வம் கடந்த முறை 6.84 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவின் மரகதம் 3.97 லட்சம் வாக்குகளை பெற்றார் நாம் தமிழர் கட்சியின் சிவரஞ்சனி 62,000 வாக்குகளை பெற்றார்.
எம்.பி. செல்வம்.
இந்த முறை கடந்த முறை வாங்கிய வாக்குகளை விட கூடுதலாக அதாவது 8 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்கின்றனர் தொகுதி மக்கள். காரணம் தொகுதியில் செல்வத்தின் அணுகுமுறை தான் காரணம். உதாரணத்திற்கு தனது தொகுதியில் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுராந்தகம், செய்யூர், மகாபலிபுரம், உத்திரமேரூர் இந்த ஆறு தொகுதியில் உள்ள பொதுமக்கள் அல்லது கட்சியினர் யாராவது இவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டு அண்ணா எங்கள் ஊரில் கோவில் திருவிழா வைத்திருக்கிறோம் நீங்கள் வரவேண்டும் என்று கேட்டு நீங்கள் எப்போது இருப்பீர்கள் எப்போது உங்களை நேரில் வந்து சந்தித்து அழைப்பிதழ் கொடுக்கலாம் என்று கேட்டால் இதற்கு செல்வம் நீங்கள் அவ்வளவு தூரத்திலிருந்து காஞ்சிபுரம் வரத் தேவையில்லை எனது whatsapp எண்ணுக்கு அழைப்பிதழை அனுப்பி விடுங்கள் நான் விழா அன்று கண்டிப்பாக வந்து விடுகிறேன் என்று சொல்லி சம்பந்தப்பட்ட நாளன்று அந்த விழாவுக்கு முன்னதாகவே சென்று விடுவார்.
அதே போல பிறந்த நாள், காதுகுத்து, வளைகாப்பு, திருமணம் என எந்த சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் நேரில் வந்து அழைப்பதை கொடுத்தால் தான் வருவேன் என்று அடம் பிடிக்காமல் சாதாரணமாக செல்போனிலோ வாட்ஸ் அப்பில் தகவல் சொன்னால் கூட சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிக்கு மறக்காமல் ஆஜராகி விடுவாராம் செல்வம். இது இது போன்ற செயல்களால் எளிய மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் எம்.பி. செல்வம்.
கடந்த முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஆறு தொகுதிகளுக்கும் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் உயர் கோபுர மின் விளக்கு, சமுதாயக்கூடம், பள்ளிக்கூடம், தார் சாலை, சிமெண்ட் சாலை என கட்சித் தொண்டர்கள் கூட்டணி கட்சியினர் அனைவருக்கும் எம்.பி. நிதியில் வேலை கொடுத்துள்ளார். அனைவரையும் அரவணைத்து சென்றிருக்கிறார் என்கிறார்கள் தொகுதி மக்கள்.
மேலும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் கூடுதலான புறநகர் ரயில்களை அதாவது செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்திற்கும் செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரத்திற்கும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறார்கள் மக்கள். அதேபோல அனைத்து நடைமேடைகளிலும் கழிப்பறைகள் அமைத்து தர வேண்டும் மேலும் திருப்போரூரில் உள்ள முருகன் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு தங்கும் விடுதிகளை அரசு சார்பில் கட்டி தர வேண்டும் கோயில் நகரமாக இருப்பதால் 24 மணி நேரமும் பேருந்து வசதிகளை செய்து தர வேண்டும் என்கின்றனர்.
எம்.பி. செல்வம்.
செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர் ஆகிய தொகுதிகளில் உள்ள கிராமப்புற பகுதிகளுக்கு கண்டிப்பாக மினி பஸ் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைத்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு தொகுப்பு வீடுகளை அமைத்து தர வேண்டும் என்கின்றனர். மகாபலிபுரம் சுற்றுலாத்தலமாக இருப்பதால் தமிழக அரசு சார்பில் தரமான உணவு விடுதியை ஏற்படுத்தித் தர வேண்டும். பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை அதிக இடங்களில் வைக்க வேண்டும். குற்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவலர்கள் பணியாற்ற வேண்டும் என்கின்றனர்.
மும்முனைப் போட்டியின் நிலவி வரும் இந்த தொகுதியில் இவரை எதிர்த்துப் போட்டியிடும் பெரும்பாக்கம் ராஜசேகர் அதிமுகவை சார்ந்தவர். அவர் இந்த முறை வெற்றி பெற்று விட வேண்டும் என்று பணத்தை வாரி இறைத்தாலும் கூட மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிற செல்வத்தை எளிதில் வீழ்த்த முடியாது என்கின்றனர் தொகுதி மக்கள். இருப்பினும் சொந்த கட்சியினரே மாவட்ட செயலாளராக இருக்கும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது பெரும் அதிருப்த்தியில் இருக்கின்றனர். அவர் கூட்டணி கட்சியினரை அரவணைத்து செல்ல மறுக்கிறார்.
அமைச்சர் தாமு அன்பரசன்.
தன்னை மீறி யாரும் வளர்ந்து விடக்கூடாது என்று சொந்த கட்சியினரையே மட்டம் தட்டி வைத்திருக்கிறார் என்கின்றனர் உடன்பிறப்புகள். அதனால் அன்பரசன் மீது உள்ள கோபத்தை இந்த தேர்தல் சமயத்தில் வஞ்சகம் செய்து வருகின்றனர். இதனால் செல்வத்திற்கு தேர்தல் பணியாற்றாமல் சில முக்கிய நபர்கள் தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டாமல் ஒதுங்கி உள்ளனர். கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் சம்பந்தப்பட்ட தொகுதியில் வாக்கு குறைந்தாலோ தேர்தல் வேலை சரியாக செய்யவில்லை என்று புகார் வந்தால் அந்த மாவட்ட செயலாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட செயலாளர் பதவி அமைச்சர் பதவி பறிக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார். அதனால் அன்பரசனின் எதிர் அணியினர் அவரால் பாதிக்கப்பட்ட சில முக்கிய கட்சி பிரமுகர்கள் சிண்டிகேட் அமைத்து செல்வத்திற்கு தேர்தல் வேலை செய்யாமல் அன்பரசனை வழித்து கட்ட ஒரு அணியில் திரண்டுள்ளனர்.
இருப்பினும் கூட அங்கு உதயசூரியன் வெளிச்சம் பிரகாசமாக இருக்கிறது என்றே சொல்லலாம். திமுகவில் சாதாரண பொறுப்பு வகிக்கிற கவுன்சிலர் நகர செயலாளராக இருப்பவர்கள் எல்லாம் கோடிகளில் புரண்டு கோபுரங்களில் வாழ்கின்றனர். ஆனால் செல்வம் இருக்கும் வீடு அரசு வழங்கிய தொகுப்பு வீடு அந்த வீட்டை இப்போது ஓரளவு மாற்றியமைத்து கட்டியுள்ளார்.
எம்.பி. செல்வம்.
மிகவும் எளிமையான மனிதர் எந்த பந்தாவும் இல்லாதவர் இயல்பானவர் தன்னை பார்க்க வருகிறவர்களுக்கு சாப்பாடுக்கு பணம் கொடுத்து அனுப்புவார். தன்னிடம் உதவி கேட்டு வரும் தனது கட்சியினராக இருந்தாலும் இல்லை பொதுமக்களாக இருந்தாலும் அவர்களை மதித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரும் எளிய மனிதர். தொகுதியில் இவர் மீது எந்த விதமான குற்ற பின்னணியோ பஞ்சாயத்து இல்லாத எளிய மனிதர் ஏறக்குறைய ஒரு கம்யூனிஸ்ட் தொண்டனைப்போல திமுகவில் இருப்பவர். இன்னும் ஒரு படி மேலே சொன்னால் செல்வம் திமுகவில் வாழும் கக்கன் என்று சொல்கின்றனர் தொகுதி மக்களும் உடன்பிறப்புக்களும்.