chennireporters.com

அரசியல் சட்டம் உருவாக அரும்பாடுபட்ட தாட்சாயிணி. கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழாரம்.

அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தில் ஒரு பெண்ணும் இடம் பெற்றிருந்தார் என்கிற செய்தி தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது .தாட்சாயிணி வேலாயுதன் அரசியல் சட்டத்தை உருவாக்கிய 299பேரில், இருந்த முதல் தலித் பெண்மணி என்ற பெருமைக்குறியவர்.

பொதுவாக, வரலாற்றில், அன்றாட அரசியல் நிகழ்வுகளில் பெண்களின் பங்களிப்பு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் பங்களிப்பு வரலாற்று வெளிச்சத்தில் காணப்படுவதில்லை. அப்படி, வரலாற்று வெளிச்சம் படராமல் மறக்கடிக்கப்பட்ட ஒரு ஆளுமை தான் தாட்சாயிணி வேலாயுதன் அவர்கள். 1912ம் ஆண்டு,,ஜூலை மாதம்4ம் தேதி எர்ணாகுளம் மாவட்டம், முளவுக்காடு என்ற சிறு கிராமத்தில் பிறந்தவர் தான் தாட்சாயிணிஅவர்கள்.

 

 

,நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு,1859ம் ஆண்டு, திருவாங்கூர் சமஸ்தானத்தில், பெண்களுக்கு தங்களது மார்புகளை மறைத்துக் கொள்ளலாம் என்ற உத்தரவு அப்போதைய மன்னர் உத்தரவிட்டடாலும் கூட, கொச்சி சமஸ்தானத்தில் நிலைமை அப்படி அல்ல. தாட்சாயிணி அவர்கள் பள்ளிப்பருவத்தில் பள்ளிக்கு செல்லும் போது மார்பை மறைத்துச் சென்ற முதல் தலித் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

 

பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு சென்று பட்டம் பெற்றவர், ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களை துடைத்தெறிய களமிறங்கினார் தாட்சாயிணி அவர்கள். அண்ணல் பாபாசாகிப் அம்பேத்கர், அண்ணல் காந்தியடிகள் ஆகியோரோடு தொடர்பு ஏற்பட்டது..

1940ம் ஆண்டு, காந்தியடிகளின் வார்தா ஆஸ்ரமத்தில் வைத்து, வேலாயுதன் அவர்களோடு திருமணம். காந்தியடிகளும், அன்னை கஸ்தூர்பா அவர்களும் சாட்சியாக, ஒரு தொழு நோயாளியான ஆஸ்ரமவாசி திருமணத்தை நடத்தி வைத்தார். வேலாயுதன் அவர்கள், முன்னாள் ஜனாதிபதி K.R.நாராயணன் அவர்களின் சித்தப்பா தான். 1945ம் ஆண்டு கொச்சி சட்டப்பேரவை உறுப்பினர்.

1946ம் ஆண்டு,டிசம்பர் மாதம் 6ம் தேதி, நமது நாட்டின் அரசியல் சட்டத்தை உருவாக்க டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை குழு உறுப்பினர்.

அரசியல் நிர்ணய சபையில்,1948ம் ஆண்டு, நவம்பர் மாதம்,29ம் தேதி தாட்சாயிணி வேலாயுதன் அவர்கள் நிகழ்த்திய வரலாற்று சிறப்பு மிக்க உரை மிகவும் புகழ்பெற்றது.
தீண்டாமை தொடர்பான அரசியல் சட்டத்தின் பிரிவு 17உருவானதில் தாட்சாயிணி வேலாயுதன் அவர்கள் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.


தீண்டாமை ஒழிப்பு குறித்த தாட்சாயிணி அவர்களின் உரையின் போது குறுக்கிட்ட சபையின் உதவி தலைவரான H.C.முகர்ஜி, “நீங்கள் ஒரு பெண் என்பதால் மட்டுமே இவ்வளவு நேரம் பேச அனுமதியளிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினர்கள் மொத்தம் 299பேரில்,15பேர் மட்டுமே பெண்கள்.  இவர்களில் ஒரே தலித் பெண்மணி தாட்சாயிணி வேலாயுதன் அவர்கள் மட்டுமே.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக, அரசியல் சட்டத்தை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவராக, சுதந்திர போராட்ட வீராங்கனையாக, பெருவாழ்வு வாழ்ந்த தாட்சாயிணி வேலாயுதன் அவர்கள்,1978ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி காலமானார்.

வரலாற்று வெளிச்சம் படாமல் இருக்கும் தாட்சாயிணி வேலாயுதன் அவர்களை எப்போதும் நினைவு கொள்ளும் வகையில், கேரள இடது முன்னணி அரசு, இந்த ஆண்டிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும், பெண்கள் மேம்பாட்டுக்கு போராடும் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தொகையும் விருதும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது..

கடந்த இடது முன்னணி ஆட்சியில்,கேரள, பெண்கள் மேம்பாடு/சுகாதாரத்துறை அமைச்சர் தோழர்.KK ஷைலஜா டீச்சர் அவர்கள் முறைப்படி இந்த அறிவிப்பை கடந்த சட்டமன்ற கூட்டத்தில் அறிவித்தார்.

சட்டமன்றத்தில் கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்கள்,குடியரசு நாளன்று தனது உரையில் தாட்சாயிணி வேலாயுதன் அவர்கள் குறித்து, அவரை நினைவு கூர்ந்து உரையாற்றிய பிறகு தான், பொது சமூகம், மறக்கடிக்கப்பட்ட தாட்சாயிணி வேலாயுதன் அவர்கள் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது.

இதையும் படிங்க.!