பட்டாபிராம் இந்து கல்லூரியில் சிறுதானிய உணவு விழிப்புணர்வு பேரணி மற்றும் கண்காட்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகள் கலர் கலந்து கொண்டனர்.
உணவுப்பாதுகாப்புத் துறை சார்பில் இந்துக் கல்லூரி – வணிகவியல் துறை, இந்திய தரநிலைகள் பணியகம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையம் ஆகியோருடன் இணைந்து சிறுதானிய உணவு விழிப்புணர்வு பேரணி, கண்காட்சி மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று பட்டாபிராம் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.இதில் பாரம்பரியச் சிறப்போடு, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவு வகைகளை உண்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக, சிறுதானிய உணவின் சிறப்பம்சங்களை எடுத்துரைக்கும் விதத்தில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணியில், கல்லூரி மாணவர்கள், கவுன்சிலர்கள் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.இந்த பேரணி, பட்டாபிராம் காவல் நிலையத்திலிருந்து தொடங்கி இந்து கல்லூரியை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து வணிகவியல் துறை மாணவர்கள் சிறுதானியங்களைப் பயன்படுத்தித் தயாரித்த, 102 உணவு வகைககளை காட்சிப்படுத்தப்படுத்தினர்.அதில் உலக உணவு வகைகளில் இருந்து உள்ளூர் சிறப்பு உணவு வகைகள் வரை சுவையில், புதுமையில், ஆரோக்கியத்தில் புத்துணர்வு படைத்திடும் வகையிலும், சிறுதானியங்களின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் சிறுதானிய உணவு விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. ஆரோக்கியம் விரும்புவோர்க்கும், நுகர்வோருக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் மக்களின் நுகர்வு கலாச்சாரம் உள்ளிட்ட ஏராளமான தரவுகள் விவாதிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆவடி மாநகராட்சி மேயர் ஜி. உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ், ஆவடி மாநகர பொறுப்பாளர் சண்பிரகாஷ், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள், இந்திய தரநிலைகள் பணியக அதிகாரிகள், இந்துக் கல்லூரி முதல்வர், வணிகவியல் துறைத் தலைவர், தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய நிர்வாகிகள், துறை சார்ந்த நிபுணர்கள், வல்லுநர்கள், பிரபல சமையல் கலை நிபுணர் பழனிமுருகன், தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத்தின் தலைவர் சடகோபன், பொதுச்செயலாளர் ஜெயக்குமார், நிகழ்வு மேலாளர் செழியன் குமாரசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.