ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்த ஆவணத்தை வழங்குவதற்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்ட ஆவடி பத்திரப்பதிவு துறையின் இணைப்பதிவாளர் அமல்ராஜ் மற்றும் புரோக்கர் தென்னரசு ஆகிய இரண்டு பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர் இந்த செய்தி ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆவடி பத்திரப்பதிவுத் துறையின் இணைப்பதிவாளர் அமல்ராஜ்.
ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன் இவர் ஆவடி அடுத்த மோரை பகுதியில் புதிதாக ஒரு நிலம் வாங்கி இருந்தார். அந்த இடத்தை ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தார். பின்னர் அந்த நிலத்துக்கான பத்திரத்தை பெறுவதற்காக ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சில தினங்களுக்கு முன்பு சென்றார். அப்போது அலுவலகத்தில் இருந்த இணை சார் பதிவாளர் செங்கல்பட்டை சேர்ந்த அமல்ராஜ் என்பவர் கோடீஸ்வரனிடம் நிலத்துக்கான பத்திரத்தை ஒப்படைக்க வேண்டுமானால் எனக்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.
மேலும் அந்த லஞ்சப் பணத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் தரகராக வேலை பார்க்கும் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த தென்னரசு என்பவர் மூலம் தனக்கு வழங்கும்படி கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கோடீஸ்வரன் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அந்த அடிப்படையில் நேற்று மதியம் அதாவது மார்ச் 21ம் தேதி ஆவடி பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீ சார் இணைப்பதிவாளர் அமல்ராஜி பணம் வாங்கிய போது கையும் களவுமாக பிடித்தனர் பின்னர் இரவு 10 மணி வரை ஆவணங்களை ஆய்வு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இரண்டு பேரையும் கைது செய்வதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர்.
அமல்ராஜ் பணம் வாங்கி கொடுக்கும் இடைத்தரகர் தென்னரசு.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்த கோடீஸ்வரனை நாம் தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்று விசாரித்தோம். அப்போது மோரை பகுதியிலுள்ள அன்பு நகர் அனெக்ஸ் என்ற இடத்தில் 700 சதுர அடி நிலம் வாங்கி இருந்தேன். அந்த நிலத்தை பதிவு செய்ய தென்னரசை தொடர்பு கொண்டு ஆவணங்களை தயார் செய்து கொடுக்குமாறு கேட்டேன்.
அவரும் தயார் செய்து கொடுத்தார். இடத்தை பதிவு செய்து விட்டேன் ஆவணத்தை கேட்கச் சென்றபோது இணைப்பதிவாளர் அமல்ராஜ் தனக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டார். என்னால் அவ்வளவு தர முடியாது என்று சொன்னேன். அப்படி என்றால் உன்னுடைய ஆவணத்தை திருப்பி தர முடியாது என்று மிரட்டும் தொணியில் பேசினார்.
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தேன். அதன் அடிப்படையில் நேற்று இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர் .என் ஆவணத்தில் எந்தவித முறைகேடும் இல்லை. நான் முறகேடான ஆவணத்தையும் பதிவு செய்யவில்லை என்று கோடீஸ்வரன் தனது தரப்பு விளக்கத்தை தெரிவித்தார். மேலும் அமல்ராஜ் இதுபோன்று பல பேரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார் பலரின் ஆவணங்கள் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஏற்கனவே பத்திரப்பதிவு துறையின் சார்பதிவாளராக இருந்த மல்லிகேஸ்வரி இதுபோன்ற அரசுக்கு சொந்தமான நிலங்களை முறைகேடாக லஞ்சம் பணம் பெற்றுக் கொண்டு பதிவு செய்துள்ளார். மோரை, வீராபுரம், பட்டாபிராம் ஆகிய பகுதிகளில் முஸ்லிம் தர்காவுக்கு சொந்தமான இடங்கள், இந்து கோயில்களுக்கு சொந்தமான இடங்கள் , அரசுக்குசொந்தமான இடங்கள் என பல இடங்களை மோசடி நபர்களுடன் கூட்டி சேர்ந்து மல்லிகேஸ்வரி லஞ்சம் பெற்றுக்கொண்டு பல இடங்களை பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக பட்டாபிராமை சேர்ந்த வழக்கறிஞர் ஜெயசந்திரன் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையின் டிஎஸ்பி ஆக இருக்கும் ஜாய் தயால் என்பவர் மல்லிகேஸ்வரி மிகவும் நெருக்கமானவராக இருந்து வருகிறார். அதன் அடிப்படையிலேயே கடந்த ஆண்டு ஆவடியில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் மல்லிகேஸ்வரி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் டிஎஸ்பி ஜாய் தயால் விட்டு விட்டார் என்கின்றனர் ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் சில ஊழியர்கள்.