chennireporters.com

தலித் மக்களுக்கு பட்டா வழங்க எதிர்ப்பு. கலவரம் செய்யும் மாற்று சமூகத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை அருகே ராஜா நகரம் என்ற பகுதியில் தலித் மக்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டது.

கடந்த இருபத்தி மூன்று ஆண்டு காலமாக தலித் மக்கள் வீட்டு மனைப்பட்டா கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

திமுக அரசே பதவியேற்றதும் தலித் மக்களின் நீண்டகால கோரிக்கையான வீட்டுமனைப்பட்டா வழங்க இடத்தை அளந்து தேர்வு செய்தனர்.

அந்த இடத்தில் 100 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து கலெக்டர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட்டார்.

இதற்கு அந்தப் பகுதியில் உள்ள
மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

பள்ளிப்பட்டு சாலையில் உள்ள மரங்களை வெட்டி போட்டு கிராம மக்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர்.

இந்த கிராமத்தை ஒட்டி உள்ள நிலத்தில் தலித் மக்களுக்கு 100 பேருக்கு அரசு சார்பில் இடம் ஒதுக்கப்பட்டது.

மேலும் சில நாட்களுக்கு முன்பு நிலத்தை அளந்து வருவாய்த்துறை அதிகாரிகள் எல்லை கற்களை நட்டனர்.

அப்போதே மாற்று சமூகத்தினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலத்தை தலித்துகளுக்கு ஒதுக்கியதற்கு அந்த கிராமத்தை சேர்ந்த மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிலர் மின்சாரத்தை துண்டித்து இரவோடு இரவாக தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் நடப்பட்ட அளவு கற்களை பிடுங்கி எறிந்துள்ளனர்.

இதனால் நேற்று காலை முதல் அந்த கிராமத்தில் பதற்றம் நிலவியது.

இதனால் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. பகேர்லா செபாஸ் கல்யாண், செங்கை சரக டி.ஐ.ஜி சத்திய பிரியா அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

 

போராட்டம் வெடிக்காமல் இருக்க டிஐஜி சத்தியபிரியா பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிட்டார்.

மேலும் அவர் எந்தவித கலவரமும் ஏற்படாமல் இருக்க இருபத்தி நான்கு மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இருப்பினும் பொதுமக்கள் நடத்திய கலவரத்தில் 10க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர்.

பெண் போலீசாருக்கு பெரும் காயம் ஏற்பட்டது.

இது குறித்து தலித் மக்கள் சார்பில் ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் ராஜாநகரம் கிழக்கு கிராமத்தை சேர்ந்த ஜெயராமன், விநாயகம், ரவி, கண்ணன் ஆகிய 4பேரை நேற்று போலீசார் கைது செய்தனர் .

இதை அறிந்த ராஜா நகரம் கிழக்கு பொதுமக்கள் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் தலித் மக்களுக்கு இடத்தை ஒதுக்குவதை கண்டித்தும் பள்ளிப்பட்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த கிராமத்திற்கு பிரதான சாலையில் இருந்த புளிய மரங்களை வெட்டி சாலைகளில் போட்டு சாலை மறியல் செய்தனர்.

இதனால் அங்கு வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

 

மேற்படி கிராமத்தில் பல ஏக்கர் நிலங்கள் தலித்துகளுக்கு சொந்தமானதாக இருந்து வருகிறது.

அந்த இடத்தை மாற்று சமூகத்தினர் தங்கள் வசப்படுத்தி வைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக பல ஆண்டுகளாக பொதுமக்கள் தலித் மக்கள் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் அரசு அவர்களுக்கு இடத்தை ஒதுக்கி தந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் தலித்துகளுக்கு சொந்தமான இடங்களை நிலத்தையும் மாற்று சமூகத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிரக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலங்களை மாற்று சமூகத்தினர் வசப்படுத்தி வைத்து வருகின்றனர்.

அதனை உடனடியாக கண்டறிந்து நிலமில்லாத தலித் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று முன்னாள் ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் மோகன் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இதையும் படிங்க.!