வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டையில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வெத்தன் விடுலி கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்.இவர் ஊரக வளர்ச்சித்துறையில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.இவரை திடீரென வேறு ஊருக்கு பணிமாறுதல் அளித்தனர்.அங்கு பணிக்கு செல்ல விருப்பம் இல்லாததால் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
தொடர்ந்து முருகானந்தம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளராக இருந்தவர்.அதிமுக ஆட்சியில் இருந்த போது உள்ளாட்சித் துறையில் பல்வேறு ஒப்பந்தங்கள் பெற்று பணி செய்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முருகானந்தத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்து வருகின்றனர்.குறிப்பாக முருகானந்தம் சகோதரர்கள் வீடுகளிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை லஞ்சஒழிப்புத்துறை டி.எஸ்.பி. இமயவர்மன் தலைமையில் திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் 6 குழுக்களாக பிரிந்து பல இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக கடந்த 5 ஆண்டுகாலத்தில் மட்டும் முருகானந்தத்தின் சொத்து மதிப்பு அதிரடியாக உயர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தை முருகானந்தம் வாங்கியுள்ளார்.தற்போது அந்த வணிக வளாகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.