chennireporters.com

சுங்கத்துறை வேலைகளுக்கான தேர்வில் மோசடி. பெ.மணியரசன் கண்டனம்..

சென்னை சுங்கத்துறை வேலைகளுக்கான தேர்வில் மோசடி செய்தோரையும், இதற்குத் துணைபோன அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


சென்னையில் உள்ள இந்திய அரசின் சுங்கத்துறை அலுவலகத்திற்கு உணவக உதவியாளர், எழுத்தர், மகிழுந்து ஓட்டுநர், சமயலர் போன்ற பணியிடங்களுக்கு 17 பேரைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு 14.10.2023 அன்று மேற்படி அலுவலகத்தில் நடந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதியுள்ளனர். அப்பொழுது, தேர்வு மண்டபத்தில் எலக்ட்ரானிக் கருவி வேலை செய்வது போன்ற ஒலியும், அறிகுறிகளும் தெரிந்திருக்கின்றன. அத்தேர்வெழுதுவோரைக் கண்காணிப்பாளர்கள் சோதித்தபோது, 30 பேர் காதுகளில் ப்ளு-டூத்துகள் பொருத்தப்பட்டிருந்திருக்கின்றன. அவற்றைச் சோதித்தபோது வெளியிலிருந்து ஒருவர் இங்குள்ள வினாக்களுக்கு விடைகளைச் சொல்லிக் கொண்டிருப்பதும் தேர்வர்கள் அதைக் கேட்டு விடை எழுதிக் கொண்டிருப்பதும் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டது.

இந்த 30 பேரில் 28 பேர் அரியானாக்காரர்கள், இரண்டு பேர் உத்திரப்பிரதேசக்காரர்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசுத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கான தேர்வுகளில் தமிழ்நாட்டில் இந்திக்காரர்கள் மிகை எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்று வேலைகளில் சேர்க்கப்படுவது கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் இந்திக்காரர்கள் ஆள்மாறாட்டம் செய்தும், விடைத்தாள் தில்லுமுல்லுகள் செய்தும் சிக்கிக் கொண்டு திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, ஆவடி படைக்கலத்தொழிற்சாலைகள் போன்றவற்றில் வழக்குகள் பதியப்பெற்றுள்ள செய்திகளை நாடறியும்.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் அஞ்சல் துறைக்கான வேலைவாய்ப்புத் தேர்வுகள் நடந்தபோது, தமிழ்த்தாளில் மொத்த மதிப்பெண் 25க்கு 25, 24, 23 என்று அரியானாக்காரர்கள் வாங்கியதும், தமிழ்நாட்டுத் தேர்வர்கள் மேற்படித் தாளில் 25க்குப் 17. 16 என்று வாங்கியதும் வெளிப்பட்டு, அத்தேர்வுகளில் நடந்த மோசடிகள் அம்பலமாயின. அத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.

இது போல் கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கான இந்திய அரசுப் பணிகளில் இந்திக் காரர்கள் மோசடி செய்து வேலை பெற்று வருகிறார்கள். இதனால்தான் இந்திய அரசின் வருமான வரித்துறை, ஜிஎஸ்டி வரித்துறை, கணக்குத் தணிக்கைத் துறை, துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், தொடர்வண்டித்துறை, போன்ற அனைத்துத் துறைகளிலும் 100க்குத் 95 விழுகக்காடு வேலைகளை இந்திக்காரர்கள் கைப்பற்றிக் கொள்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் (பாலிடெக்னிக்) ஆசிரியர் பணிக்கு நடந்த தேர்வில் நூற்றுக்கணக்கான இந்திக்காரர்கள் தேர்வில் வெற்றிபெற்று நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்லூரி ( பாலிடெக்னிக்) யில் நடக்கவிருந்த அந்நேர்காணலை எதிர்த்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் அந்நேர்காணல் நடக்கும் இடத்திலேயே மறியல் போராட்டம் என்று அறிவித்தது.

அதன் பின் குறிப்பிட்ட தேதியில் அந்நேர்காணல் நடத்தாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த மோசடியில் இந்திய அரசின் உயர் பொறுப்பாளிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பங்கிருக்கிறது. தமிழ்நாட்டு வேலைகளை இந்திக்காரர்கள் கைப்பற்றிக் கொண்டு தமிழ்நாட்டை இன்னொரு இந்தி மாநிலமாக்கக் கூடிய திட்டத்தில் இம் மோசடிகள் நடக்கின்றன என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து குற்றம்சாட்டி போராட்டங்கள் நடத்தி வருகின்றது.

ஆனால் தமிழ்நாட்டில் மாநில ஆட்சியாளர்களோ, பெரிய கட்சிகளோ இந்த மோசடிகளைக் கண்டுகொள்ளவே இல்லை. தடுத்து நிறுத்த முன்வருவதில்லை. இக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களையும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களையும் சட்டப்படி தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உரியவாறு எடுக்கவில்லை.

இந்த முறையாவது, சென்னை சுங்கத்துறை வேலைவாய்ப்புக்கான தேர்வில் மோசடி செய்து பிடிபட்டுள்ளவர்களின் மீதும், அவர்களுக்குத் துணைநின்றவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்துச் சிறையில் அடைக்க வேண்டும் என்றும், இத் தேர்வை செயலற்றதாக்கிட முன்வர வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசுப் பணிகளில் முதல் நிலை அதிகாரிகள் பணிகளில் 10 விழுக்காடு மட்டுமே வெளிமாநிலத்தவருக்கு வழங்கலாம் என்றும், 90 விழுக்காடு பணிகள் மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்றும், இரண்டு, மூன்று, நான்காம் நிலைப் பணிகளில் 100 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்றும் சட்டம் இயற்றுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இதையும் படிங்க.!