“எடையளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்து மோசடி, அதிகாரிகள் கூட்டுக் கொள்ளை”.
-தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல்.
கோவை, நெல்லை, தூத்துக்குடியை தொடர்ந்து சென்னையிலும் பாலில் கொழுப்பு சத்து அளவை குறைத்து நவீன முறையில் விற்பனை விலையை லிட்டருக்கு 8.00ரூபாய் மறைமுகமாக உயர்த்திய ஆவின் நிர்வாகம், முன்னறிவிப்பு ஏதுமின்றி கடந்த சில தினங்களுக்கு முன் தஞ்சை ஒன்றியத்தில் தயிர் விற்பனை விலையை கடுமையாக உயர்த்தியது.இந்த நிலையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஆவின் ஒன்றியத்தில் இருந்து பால் முகவர்களுக்கு இன்று அதிகாலை விநியோகம் செய்யப்பட்ட நிலைப்படுத்தப்பட்ட 500மிலி பச்சை நிற பால் பாக்கெட்டில் சுமார் 52மிலி அளவு குறைவான பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது 520கிராம் இருக்க வேண்டிய 500மிலி பால் பாக்கெட் 470, 480, 490கிராம் அளவுகளில் விநியோகம் செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது. இதே போல் சென்னை மாநகரில் கூட கடந்த ஆண்டு 450கிராம் எடை கொண்ட 500மிலி நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுகள் எடையளவு குறைவாக விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து தினமும் சுமார் 90ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு வேலூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் ஓரிரு பால் பாக்கெட்டுகளில் மட்டும் பேற்சொன்ன எடையளவு குறைவாக இருந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் இது பால் பண்ணையில் உள்ள தரக்கட்டுப்பாடு, மேற்பார்வை அதிகாரிகள் மற்றும் பொதுமேலாளர் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்திருக்கவும் வாய்ப்பில்லை எனும் போது மேற்கண்ட பகுதிகளில் தொடர்ந்து எடையளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி, விநியோகம் செய்து இதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.தமிழகத்தில் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கின்ற பாலுக்கான விலையை பால் உற்பத்தியாளர்களுக்கு உயர்த்தி வழங்காமல் ஆவினுக்கான பால் வரத்தினை வேண்டுமென்றே திட்டமிட்டு குறைத்து விற்பனை ஆகும் பால் தேவைக்கான பாலினை ஈடுசெய்ய மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வெண்ணெய் மற்றும் பால் பவுடர் கொள்முதல் செய்து அதன் மூலம் ஆதாயம் அடையும் ஆவின் மற்றும் பால்வளத்துறை அதிகாரிகளின் அகோர பணப்பசிக்கு மறைமுகமாக விற்பனை விலையை உயர்த்தி பொதுமக்கள் தலையில் மிகப்பெரிய அளவில் பாரத்தை சுமத்தியதோடு, பால் பாக்கெட்டுகளின் எடையளவையும் குறைத்து நவீன முறையில் கொள்ளையடிப்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.ஏற்கனவே பால்வளத்துறையிலும், ஆவினிலும் உள்ள ஊழல் அதிகாரிகள் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வரும் நிலையில் ஆவின் நிர்வாகச் சீர்கேடுகளால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதாலும் அதனால் அரசுக்குத் தான் அவப்பெயர் ஏற்படும் என்பதாலும் தமிழக முதல்வர் தாமதமின்றி பால்வளத்துறையிலும், ஆவினிலும் உள்ள ஊழல் அதிகாரிகளை களையெடுக்கவும், ஆவின் பால் பாக்கெட்டுகள் எடையளவு குறைவாக விநியோகம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வேலூர் ஆவின் உதவி பொது மேலாளர் சிவக்குமார் என்பவர்தான் அங்கு பொறுப்பில் இருக்கிறார். இந்த பால் எடை குறைவுக்கு முழுக்க முழுக்க இவரே காரணம் என்று கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே சென்னை சோழிங்கநல்லூரில் பணியில் இருந்த பொழுது முறைகேட்டில் சிக்கி பல லட்ச ரூபாய் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் வேலூருக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் தயாரித்து விநியோகிக்கும் பச்சை நிற பாக்கெட் பாலில் மட்டும் 100 மில்லி கிராம் அளவிற்கு எடை குறைவாக உள்ளது. இந்த எடை குறைவு ஏறக்குறைய 50 ஆயிரம் லிட்டராக இருக்கிறது. இந்த 50 ஆயிரம் லிட்டர் பாலின் விலை ஏறக்குறைய 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்.
நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பொதுமக்கள் பணத்தை ஆவின் நிர்வாக அதிகாரிகள் கொள்ளை அடிக்கிறார்கள். இந்த எடை குறைவு இன்று மட்டும் தான் நடந்ததா இல்லை நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவின் பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.தமிழக அரசு மக்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இது போன்ற அதிகாரிகள் சிதைத்து ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்கள் மீது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் ஆவின் பால் பயன்படுத்தும் பொதுமக்கள்.