chennireporters.com

மனைவி மற்றும் இரண்டு மகன்களை கொலை செய்த வங்கி அதிகாரி தற்கொலை.

சென்னை பெருங்குடி பகுதியில் மனைவி, மற்றும் 2 மகன்களை கொலை செய்துவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பெருங்குடியில் உள்ள பெரியார் சாலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த மணிகண்டன் என்பவர் மனைவி மற்றும் இரண்டு மகன்களை கொலை செய்துவிட்டு அவரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

துரைப்பாக்கம் காவல்துறையினருக்கு குடியிருப்புவாசிகள் கொடுத்த தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அதில் பாதுகாப்பு அதிகம் உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பில், மணிகண்டனை தேடி இரண்டு நபர்கள் காலையில் வந்துள்ளனர்.

குடியிருப்பை பொருத்தவரையில் சம்பந்தப்பட்டவர்களை பார்க்க வர வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட குடியிருப்புவாசிகள் அனுமதி அளித்தால் மட்டுமே உள்ளே வர முடியும்.

அந்த அடிப்படையில் மணிகண்டனை நேற்று இரவு முதல் தொடர்ந்து தொடர்பு கொண்டபோது செல்போன் எடுக்காததால் சந்திக்க வந்ததாக தெரிவித்துள்ளனர்.

குடியிருப்பின் காவலாளி தொடர்ந்து மணிகண்டனை தொடர்பு கொண்ட போதும் தொடர்புகொள்ள முடியாமல் இருந்தது.இதனையடுத்து அவர் இருக்கும் ஏழாவது மாடிக்குச் சென்று பார்த்துள்ளனர்.

வீடு உட்புறமாக தாழிடப்பட்டு இருந்தது.மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பின் வழியாக , மணிகண்டன் வீட்டை பார்க்கும் பொழுது மின்விசிறி மட்டும் சுற்றிக் கொண்டிருந்தது பார்த்துள்ளனர்.

நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் துரைப்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும் போது, மணிகண்டன் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

மணிகண்டனுக்கு தரங்க பிரியா என்ற மனைவியும், தரன் என்ற 10 வயது மகனும், தகன் என்ற ஒரு வயதுக் குழந்தையும் இருந்துள்ளனர்.படுக்கை அறையில் தரங்க பிரியா மற்றும் ஒரு வயது குழந்தை கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.

பத்து வயது மகன் தரன் கழுத்து நெரிக்கப்பட்டு பிணமாக ஹாலில் கிடந்ததையும் போலீசார் பார்த்தனர்.

குறிப்பாக மனைவியை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொலை செய்து விட்டு,ஒரு வயது குழந்தையை தலையணை வைத்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த மணிகண்டன், இரண்டு மாதம் வேலைக்குச் செல்லவில்லை.சுமார் ஒரு கோடி ரூபாய் வரை மணிகண்டன் கடன் வாங்கி இருப்பதும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்டமாக மணிகண்டன் மற்றும் அவரது மனைவி இரண்டு மகன்கள் உடல்களுடன் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.

மேலும் மணிகண்டனின் செல்போன் ஆய்வு செய்தபோது ஆன்லைன் கேம் கள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.ஆன்லைன் கேமில்(game) பணத்தை இழந்து கடன் சுமை ஏற்பட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளதா என்ற கோணத்தில் காவல்
துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணிகண்டன் குடும்பத்தை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட காரணம் என்ன என்பது குறித்து துரைப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க.!