chennireporters.com

நிலவில் தரை இறங்கியது சந்திராயன். உலகை திரும்பி பார்க்க வைத்த விஞ்ஞானிகள்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காகச் சந்திரயான் – 3 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை 14 ஆம் தேதி, எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தியது.
அதனைத்தொடர்ந்து புவி வட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்த விண்கலத்தில் சுற்றுவட்டப் பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு ஆகஸ்ட் 5 ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.

அதனைத்தொடர்ந்து, மீண்டும் படிப்படியாக நான்கு முறை நிலவின் சுற்று வட்டப் பாதையில் சந்திரயான் – 3 விண்கலத்தின் பாதை குறைக்கப்பட்டுக் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி உந்துவிசை கலனில் இருந்து லேண்டர் தனியாகப் பிரிக்கப்பட்டது. மேலும், உந்துவிசை கலன் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் தனித்து நிலவை சுற்றிவந்து புவியை ஆய்வு செய்யும் என்று இஸ்ரோ தெரிவித்தது.

உந்துவிசை கலனில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் தொடர்ந்து நிலவை சுற்றிவர ஆகஸ்ட் 18 மற்றும் ஆகஸ்ட் 20 ஆகிய தேதிகளில் de-boosting முறையில் மேலும் லேண்டரின் பாதை குறைக்கப்பட்டு நிலவிற்கு அருகில் கொண்டு செல்லப்பட்டது. இதன் மூலம் லேண்டர் நிலவிற்கு குறைந்தபட்சம் 25 கிமீ., மற்றும் அதிகபட்சமாக 134 கிமீ., தொலைவில் பயணித்துகொண்டு இருந்தது. மேலும் நிலவை லேண்டர் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது இஸ்ரோ வெளியிட்டு வந்தனர்.


லேண்டரை இறுதிக் கட்டத்தில் நகர்த்தும்போது, ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு தரையிறக்கத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தனர். பின்னர், தரையிறக்கும் நேரத்தை மாற்றி ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு தரையிறக்கப்படும் என்று தெரிவித்தனர்.


இன்று வெற்றிகரமாக இஸ்ரோ சரியாக 6.04 மணிக்கு விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கியுள்ளது. இதன் மூலம் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா திகழ்ந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கான இந்திய தூதரகம் இனிப்புகள் வழங்கி இந்த வரலாற்று நிகழ்வைக் கொண்டாடியுள்ளனர்.

இதையும் படிங்க.!