ஜாதி வன்கொடுமை காரணமாக மாணவர் அஜித் குமார் மரணம் !”
“உரிய விசாரணை நடத்தி மாணவர் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் !”
திராவிடர் விடுதலைக்கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் அறிக்கை !
ஜாதிய வன்கொடுமை காரணமாக தஞ்சை மருத்துவக் கல்லூரியில் நிகழ்ந்துள்ள கல்வி நிறுவனக் கொலை என்று சந்தேகிக்கப்படும் ஒரு மாணவரின் மரணம் குறித்து அனைவரின் கவனத்தை ஈர்க்கவும், உரிய தீர்வு கிடைக்கவும் இவ்வறிக்கையை முன்வைக்கிறேன்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பாபு குளம் என்ற ஊரைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் ஏ.அஜித்குமார். இவர் பத்தாம் வகுப்பில் மாவட்டத்தின் முதல் மாணவராக தேறியவர். அதுபோலவே பன்னிரண்டாம் வகுப்பிலும் பள்ளியின் முதல் மாணவர். மருத்துவக் கல்வி அனுமதிக்கான கட் ஆப் மதிப்பெண் 97.75 பெற்றவர்.
2014 ஆம் ஆண்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படித்து வந்த அவர் நான்காம் ஆண்டு படிக்கும் போது அப்போது நடந்த அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். இதன் காரணமாக கல்லூரி நிர்வாகம் அவரை ஓராண்டு காலம் இடைநீக்கம் செய்துள்ளது. அதனால் அவரது மருத்துவ படிப்பு 2020ஆம் ஆண்டில் தான் நிறைவு பெற்றுள்ளது.
இருப்பினும் நிலுவையில் உள்ள சில தாள்களை எழுதி தேர்ச்சி பெறுவதற்காக தொடர்ந்து கல்லூரி விடுதியிலேயே தங்கி தேர்வுகளை எழுதி வந்துள்ளார். அவர் பட்டியல் ஜாதியை சேர்ந்தவர் என்பதாலும், நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர் என்பதாலும் விடுதிக் காப்பாளர் முருகேசன்,கல்லூரியின் டீன் பாலாஜி நாதன்,பேராசிரியர் ஆர்.எம்.செல்வம் ஆகியோர் தொடர்ந்து இவர் மீது வன்மம் காட்டி வந்துள்ளனர்.
அந்த கல்லூரி விடுதிக் காப்பாளர் பல நேரங்களில் பிற மாணவர்களின் முன்பாகவே மாணவர் அஜித்குமாரின் ஜாதியை குறிப்பிட்டு இழிவாகப் பேசி, “நீ எல்லாம் மருத்துவராகி கிழிக்கப் போகிறாயா ?” என்று பேசி மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறார்.
மேலும் இவரது நிலுவைத் தேர்வுகளின் எழுத்து தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும், செய்முறை தேர்வுகளில் மிகக் குறைவான மதிப்பெண்களே அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து நான்காண்டுகளாக கல்வியை நிறைவு செய்ய முடியாமலும் மன உளைச்சலுக்கு திட்டமிட்டே ஆளாக்கப்பட்டிருக்கிறார்.இந்த செய்திகளை ஊருக்கு செல்லும் போது தன் பெற்றோர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். அது மட்டும் இன்றி அவர் எழுதியிருந்த நாட்குறிப்புகளில் பல பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தாலும் மடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு தாளில், அந்த கல்லூரி விடுதிக்காப்பாளரை அரக்கன் என்று சொல்லி அவர் மீது கடுமையான விமர்சனத்தை வைத்து கைப்பட எழுதி பதிவு செய்து வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் 16.3.2024 மாலை சுமார் 6:30 மணி அளவில் அவரது தம்பி அருண்குமாரை கைபேசியில் அழைத்து அஜித் குமார் உடல்நிலை சரியில்லாததால் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று ஒரு மாணவர் தகவல் கூறியுள்ளார். அடுத்த அரை மணி நேரத்தில் இரவு 7.00 மணி அளவில் அஜித்குமார் இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
பெற்றோரும் சகோதரரும் உடனே புறப்பட்டுப் போய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அஜித்குமாரின் சடலத்தை பார்த்துள்ளனர். அஜித்குமாரின் வலது புறங்கையில் Venflor (சிரை வழி) செருகப்பட்டிருந்ததையும் பார்த்துள்ளனர். உடன் பயின்ற மாணவர்களில் ஒருவர் 4.00 மணிக்கு இறந்து விட்டார் என்றும், மற்றொருவர் 7.00 மணிக்கு இறந்தார் என்றும், மருத்துவமனையில் இருந்த ஒருவர் உடலை நண்பர்கள் 2.00 மணி அளவில் மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர் என்றும் மாறிமாறி கூறியுள்ளனர். தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க வந்திருந்த அஜித் குமாரை சோதித்த மருத்துவர், மாலை 5.37 மணிக்கு இறந்த உடலே மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது என்றும், அதனால் உடலை சவக் கிடங்குக்கு அனுப்பி விட்டதாகவும் Accident Registerஇல் பதிவு செய்துள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த பதிவேட்டில் “மேற்கூறிய நபர் 16.3.2024, 5 05pm மணியளவில் மயக்க நிலையில் கிடந்ததால் அழைத்து வந்ததாக உடன் இருப்பவர் கூறினார்” என்ற சொற்றொடர் ‘தமிழில்’ இடைச்செருகலாக எழுதப்பட்டு உள்ளது.
உடற் கூராய்வு செய்த திருச்சி கி.ஆ.பெ.மருத்துவக் கல்லூரி தடயவியல் பேராசிரியர்கள் மூவரும் அளித்துள்ள உடற் கூராய்வு அறிக்கையில் குளிரூட்டப்பட்ட சவக்கிடங்கில் உடல் வைக்கப்பட்டதற்கும் ஏறத்தாழ 6 மணி நேரத்திற்கு முன்னதாக இறந்திருக்கலாம் என்று சான்று அளித்துள்ளனர். அவ்வாறானால் அஜித் குமாரின் சாவு 16.3. 2024 நண்பகல் 12.00 முதல் 1:00 மணிக்குள் நிகழ்ந்திருக்கலாம் என்று கருத வைக்கிறது. மேலும் உடற்கூராய்வு அறிக்கையிலும் வலது புறங்கையில் Venflon இருந்ததைக் குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து மருந்துகளை ஊசி வழியாக செலுத்தும் நிலையில்தான் Venflon வைக்கப்படும். சாவுக்கு முன்பாகவே ஏதேனும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதா அல்லது சாவுக்கு பின்னர் அது செருகப்பட்டதா ? என்னும் குழப்பமும் ஏற்படுகிறது.
செய்தியறிந்து தஞ்சை சென்ற அஜித்குமாரின் பெற்றோர்களிடம் கல்லூரி முதல்வர் (Dean) சமாதானம் பேசிக்கொள்வோம்; வழக்கெல்லாம் வேண்டாமே என்று சொல்லி அனுப்பியுள்ளார்.
இவ்வாறான பற்பல உறுதியான எதிர் சான்றுகள் உள்ள நிலையிலும் காவல்துறையிடம் 17.3.2024 காலை 7.00 மணிக்கு அளிக்கப்பட்ட புகாரை சந்தேக மரணம் (CrPc)174 என்ற பிரிவில் வழக்கைப் பதிவு செய்துள்ளனர். அதன் பிறகு பெற்றோர்களிடமோ மற்றவர்களிடமோ எவ்வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்பது, இவ் வழக்கின் பின்னணியில் ஏதோ அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்றே எண்ண வைக்கிறது.
மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் குறிப்பாக பட்டியல் பிரிவு மாணவர்கள் தொடர்ந்து மரணம் அடைவதும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 19,000 க்கும் மேலான பிற்படுத்தப்பட்ட/ பட்டியல் பிரிவினர் இடை நின்றுள்ளனர் என்ற அரசின் புள்ளி விவரமும் நடக்கும் கொடுமைகளை உறுதி செய்கின்றன.
2012 ஆம் ஆண்டிலேயே எல்லா கல்லூரிகளிலும் பாகுபாடுகளுக்கு எதிரான குழுக்களையும், பேராசிரியர்கள் தரத்திலான (குறிப்பாக பட்டியல் பிரிவு) அதிகாரிகளை பாகுபாடு களைவு அதிகாரிகளாக நியமித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.
ரோகித் வெமுலா
சந்தேக மரணம் அடைந்த ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா, மும்பை மருத்துவக் கல்லூரியின் முதுநிலை மருத்துவ மாணவி பாயல் தாத்வி ஆகியோரின் தாயார்கள் இவ்வாறான உயர்கல்வி நிறுவன மரணங்கள் நிகழாமல் தடுக்க உரிய நெறிமுறைகள், விதிகள், சட்டங்கள் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரியில் நடந்தேறியுள்ள பட்டியல் பிரிவு மாணவரின் சந்தேக மரணம் குறித்து உரிய அளவிலான விசாரணை கூட நடைபெறவில்லை என்பது பெரும் அவலமாகும்.
சமூக நீதிக்கு வழிகாட்டும் தமிழ்நாட்டில் நடந்துள்ள இந்நிகழ்வு குறித்து தமிழ்நாடு அரசும், மருத்துவக் கல்வித் துறையும் உரிய கவனம் செலுத்தி தீர்வுகளை விரைவில் அளிக்க வேண்டுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்
ஒன்றரை மாதம் கடந்தும் எந்த அசைவும் இன்றி கிடப்பில் கிடக்கும் இவ்வழக்கின் மீது உரிய விசாரணை நடத்தி காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளும், வன்கொடுமை சட்டம் கூறும் நிவாரணங்களை வழங்கவும், நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டியதும் மிகவும் அவசரமான ஒன்றாகும்
சமூக சமத்துவத்தின் மீது அக்கறையுள்ள தலைவர்களும், கட்சிகளும், அமைப்புகளும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியதும் அவசரக் கடமையாகும்.
கலந்து பேசுவோம்! இணைந்து போராடுவோம்! மாணவர் அஜித் குமாரின் மரணமே
கல்வி நிறுவனக் கொலைகளில் கடைசியாக இருக்கட்டும்! என்று திராவிடர் விடுதலைக் கழக தலைவர், “கொளத்தூர் மணி” தனது அறிக்கையில் கூறியுள்ளார்.