தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கடும் கண்டனம்.நீட் தேர்வில் விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் இணைந்து நிறைவேற்றியுள்ள சட்ட முன்வடிவை ஏற்க மறுத்து, ஆளுநர் திருப்பி அனுப்பியதின் மூலம் சட்டமன்றத்தை மட்டும் அவர் அவமதிக்கவில்லை.
மாறாக, இச்சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தத் தமிழ்நாட்டு மக்களை மதிக்க மறுத்திருக்கிறார். மக்களின் வரிப் பணத்தில் மாளிகையில் வாழும் ஆளுநரின் மக்கள் விரோதப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சமூகநீதிக் கொள்கையை முன்னெடுக்க அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பினை தொடங்குவது குறித்து ஆராயவும், ஒன்றிணைந்து செயல்படவும் பல்வேறு மாநில முதல்வர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருப்பது பாராட்டத்தக்க முயற்சியாகும்.
சமூகநீதியை முழுமையாக நிலைநிறுத்த வேண்டுமானால் மாநிலங்களுக்குத் தன்னாட்சி உரிமை இருக்கவேண்டும். எனவே, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கூட்டியுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் “தேசிய இனங்களின் தன்னுரிமையையும், உண்மையான கூட்டாட்சி முறையினையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியல் சட்டம் வகுக்கப்படவேண்டும்” என்ற தீர்மானத்தை நிறைவேற்றுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே நாடு; ஒரே அரசு என்ற திட்டத்துடன் செயல்படும் பா.ச.க. அரசுக்கு எதிரான மாற்றுத் திட்டம் என்பது, தன்னாட்சி உரிமைக்கொண்ட மாநிலங்களும், மாநிலங்கள் விரும்பி இணைந்த கூட்டாட்சி என்பதே ஆகும். இத்திட்டத்தின் அடிப்படையில் இணையும் கட்சிகளின் அணியே பா.ச.க.வுக்கு எதிரான வலிமைவாய்ந்த அணியாகத் திகழும்.
அன்புள்ள,
(பழ.நெடுமாறன்)
தலைவர்.