chennireporters.com

பத்திரிகையாளருக்கு மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகிகளுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கண்டனம்.

பத்திரிகையாளர் ஷபீர் அகமதுவுக்கு எதிராக மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகிகளை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியறுத்துகிறோம்.

கடந்த திங்கட்கிழமையன்று (04.12.23) சென்னை தாக்கிய மிக்ஜாம் புயல் கரையை கடந்து 5 நாட்கள் ஆன பிறகும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஓரு வாரமாக மின்சாரம் இல்லாமல் பல பகுதிகளில் மக்கள் தவித்துக்கொண்டிருக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களான பால் மற்றும் குடிநீர் கூட கிடைக்காமல் மிகப்பெரிய அவலத்தை சந்தித்து வருகின்றனர்.

UMPC (@CMPChange) / X

இதுபோன்ற பேரிடர் காலத்தில், மக்கள் படும் துயரத்தை அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கச் செய்வது பத்திரிகையாளர்களின் கடமை. இந்த கடமையை செய்யும் வகையில், பல ஆபத்துகளுக்கு மத்தியில், இடுப்பளவு தண்ணீரில் மிதந்து சென்று மக்கள் படும் துயரங்களை பத்திரிகையாளர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

இவ்வாறு வெள்ள பாதிப்புகளை தொடர்ந்து பதிவு செய்துவரும் ‘தி நியூஸ் மினிட்’ டிஜிட்டல் ஊடகத்தை சேர்ந்த பத்திரிகையாளர் ஷபீர் அகமதுவுக்கு எதிராக சமூக வலைதளத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் சிலர், அவரை அச்சுறுத்தும் வகையில் தெரிவித்துள்ள கருத்துகள் பத்திரிகையாளர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

எக்ஸ் தளத்தில் (Twitter Space) நடைபெற்ற உரையாடலில் கலந்து கொண்ட சில திமுக நிர்வாகிகள், பத்திரிகையாளர் ஷபீர் அகமதை குறிப்பிட்டு, “உன்னை ஒழித்துவிட வேண்டும்”… “உன்னை நிம்மதியாக வாழ விடக் கூடாது” என்று வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஷபீர் அகமது / Shabbir Ahmed

                                                             செய்தியாளர் ஷபீர் அகமது 

திமுக நிர்வாகிகள் வெளிப்படுத்தியுள்ள இந்த கருத்துகள், பல்வேறு ஆபத்துகளுக்கு மத்தியில் மக்கள் படும் துயரங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் பத்திரிகையாளர்களின் பணியை கொச்சைப்படுத்துவதுடன், கருத்துச் சுதந்திரத்திற்கும் எதிரானது.

 

ஆகவே, பத்திரிகையாளர் ஷபீர் அகமதுவுக்கு எதிராக தரக்குறைவாகவும், அச்சுறுத்தும் வகையிலும் பேசிய திமுக நிர்வாகிகளை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

அவர்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன் சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

இதையும் படிங்க.!