chennireporters.com

பத்திரப்பதிவு மாபியா மோசடி ஊழல் –அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்.

தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறையில் மாபியா மோசடி ஊழல் –அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளது.

அறப்போர் இயக்கம் இன்றைய தேதியில் பத்திரப்பதிவுதுறையில் மோசடியாக பத்திரப்பதிவு செய்த மாவட்ட பதிவாளர் (தற்பொழுது கன்னியாகுமரி)  பாலசுப்ரமணியன் மற்றும் பிறர் மீது லஞ்ச ஒழிப்பு துறையிலும், தலைமை செயலரிடமும், பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் செயலர் IAS ஜோதிநிர்மலாசாமியிடமும் தெளிவான ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளோம்.

பத்திர பதிவு துறை அதிகாரிகள் எப்படி ஒரு மாபியா போல செயல்பட்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலம் PACL நில பத்திரப்பதிவு மோசடி பரந்தூர் நில பத்திரப்பதிவு மோசடி போன்றவற்றை செய்தார்கள் என்று அறப்போர் இயக்கம் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக திருச்சி அம்மாபேட்டையில் உள்ள 9 ஏக்கர் நிலத்தை அதன் உரிமையாளருக்கு தெரியாமலே எப்படி காஞ்சிபுரம் வாலாஜாவில் வைத்து மோசடி பத்திரப்பதிவு செய்து உள்ளார்கள் என்பதைக் குறித்து இங்கு விவரித்து உள்ளோம்.
திருச்சி அம்மாபேட்டை கிராமத்தில் சர்வே எண்கள் 94/2, 95/1A மற்றும் 95/2B1 ஆகிய சர்வே எண்களில் அமைந்துள்ள 9 ஏக்கர் நிலத்தை 2009இல் டாக்குமெண்ட் எண் 2781/2009 மூலம் செல்வராஜ் என்பவர் பொன்னுசாமி என்பவருக்கு பத்திரப் பதிவு செய்கிறார்.

 

பொன்னுசாமி 17-12-2012 அன்று டாக்குமெண்ட் நம்பர் 7128/2012 மூலம் கணேசன் என்பவருக்கு பவர் ஆஃப் அட்டார்னி தருகிறார். பவர் ஆஃப் அட்டார்னியை 06-09-2019 ல் டாக்குமெண்ட் நம்பர் 5483/2009 மூலம் ரத்து செய்கிறார். பிறகு அதே நாள் 06-09-2019 அன்று இந்த நிலத்தை செட்டில்மெண்ட் டீட் வாயிலாக டாக்குமெண்ட் நம்பர் 5484/2009 மூலம் ஜேஜே எஜுகேஷனல் ஹெல்த் அண்டு சாரிட்டபிள் டிரஸ்ட் பெயரில் பதிவு செய்கிறார் பொன்னுசாமி.

மூர்த்தி பத்திரப்பதிவு துறை அமைச்சர்.

இது அனைத்தும் திருச்சி ஜாயின்ட் I சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது ஆனால் இதே நிலத்தை மோசடியாக ரிஜிஸ்டர் செய்ய 06-09-2019 வரை பவர் ஆஃப் அட்டார்னி ஆக இருந்த கணேசன் 26-12-2019 அன்று காஞ்சிபுரத்தில் உள்ள வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து திருச்சி அம்மாபேட்டை நிலத்தை தான் 02-09-2019 அன்று மோகன் என்பவருக்கு எழுதி கொடுத்து விட்டதாகவும் அதை பத்திரப் பதிவு செய்ய வேண்டும் என்றும் வாலாஜாபாத் சார்பதிவாளரிடம் தெரிவிக்கிறார்.

 

சார்பதிவாளர் இந்த ஆவணத்தை பரிசீலனைக்கு பெற்றிருக்கக் கூடாது. ஏன்? சம்பந்தமே இல்லாமல் திருச்சி ஜாயின்ட் I சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கீழ்வரும் நிலத்தை காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில் விற்க முனைவது ஏன் என்ற கேள்வி எழுப்பி அவரை முதலில் திருச்சியில் ஜாயின்ட் I சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி இருக்க வேண்டும் ஆனால் சார்பதிவாளர் அப்படி செய்யவில்லை.

மேலும் இந்த இடத்திற்கு ஏற்கனவே பொன்னுசாமி கணேசனிடம் கொடுத்த பவர் ஆஃப் அட்டார்னி ரத்து செய்துவிட்டு அவர் ஜேஜே எஜுகேஷனல் ஹெல்த் அண்டு சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற பெயருக்கு 06-09-2019 அன்று செட்டில்மெண்ட் செய்துவிட்டார். அப்படியிருக்கையில் அதே இடத்தை 26-12-2020 அன்று அந்த இடத்தின் மீது எந்த அதிகாரமும் இல்லாத ஒருவரிடம் இருந்து ஆவணம் வரும்பொழுது ஆவணத்தை பரிசீலனைக்கு ஏற்க முடியாது என்றும் அவர்களை திருச்சி ஜாயின்ட் I சார்பதிவாளர் அலுவலகத்திற்கு செல்லுங்கள் என்று திருப்பி அனுப்பி இருக்க வேண்டும்.

ஆனால் அப்படி செய்யாமல் திருச்சி பொன்னுசாமியின் 9 ஏக்கர் நிலத்தையும் காஞ்சிபுரத்தில் உள்ள 5 சென்ட் சுரேஷ்குமாரின் நிலத்தையும், அதாவது இரு வேறு நபர்களின் 2 வேறு சொத்துக்களை ஒன்றாக சேர்த்து வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகத்தில் மோகன் என்பவரின் பெயருக்கு பதிவு செய்ய தாக்கல் செய்யப்படும் பத்திரத்தை பரிசீலிக்க ஏற்கிறார் சார்பதிவாளர் இதுவே சட்டவிரோதமானது. பிறகு வாலாஜாபாத் சார்பதிவாளர் இந்த நிலம் சம்பந்தப்பட்ட விவரங்களை திருச்சி ஜாயின்ட் I சார்பதிவாளரிடம் கோருகிறார்.

திருச்சி ஜாயின்ட் I சார்பதிவாளர் பதில் இந்த நிலம் சம்பந்தமாக பொன்னுச்சாமி கணேசனுக்கு கொடுத்த பவர் ஆஃப் அட்டார்னியை 06-09-2019 அன்று ரத்து செய்துவிட்டார் என்றும் அதன் நகலையும் வாலாஜாபாத் சார் பதிவாளருக்கு அனுப்புகிறார் மேலும் மற்றொரு கடிதத்தில் அந்த நிலம் சம்பந்தமான வில்லங்க சான்றுகளையும் அனுப்புகிறார்.

உடனே வாலாஜாபாத் சார்பதிவாளர் மோகன் மற்றும் கணேசனிடம் அவர்கள் கொடுத்த ஆவணம் செல்லாது என்றும் ஏற்கனவே கணேசனிடம் இருந்த பவர் ஆஃப் அட்டார்னி ரத்து செய்யப்பட்டு விட்டது என்றும் திரு பொன்னுசாமி அவர் நிலத்தை ஜேஜே எஜுகேஷனல் ஹெல்த் அண்டு சாரிட்டபிள் டிரஸ்ட் க்கு செட்டில்மென்ட் செய்துவிட்டார் என்றும் கூறி, இந்த பதிவை ஏற்க முடியாது என்று கூறி பதிவு செய்யாமல் வைக்கப்பட்டு இருந்த முடிவுறா ஆவணம் P156/2019 ஐ திருப்பிக் கொடுக்கிறார்.

சார் பதிவாளரின் இந்த முடிவின் மீது மேல்முறையீடு செய்கிறார் மோகன். மேல்முறையீட்டை விசாரித்த அப்போதய காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் பாலசுப்பிரமணியம் ஒரு அதிர்ச்சிகரமான ஆணை பிறப்பிக்கிறார். அவர் பிறப்பித்துள்ள ஆணையில் 26-12-2019 இல் தான் வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகத்தில் வந்து பத்திரத்தை கொடுத்தாலும் 02-09-2019 அன்றே அதாவது கணேசனுக்கு பவர் ஆப் அட்டார்னி இருந்தபோதே ஒருவருக்கொருவர் அவர்கள் எழுதி கொடுத்துள்ளார்கள். எனவே இந்தப் பத்திரம் செல்லும் என்கிறார்.

இப்படிப் பார்த்தால் பவர் ஆஃப் அட்டார்னி ரத்து செய்யப்பட்ட அனைவரும் அதற்கு முன்தேதியிட்டு ஒரு ஆவணத்தை கொண்டு வந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் செல்லும் என்றால் நாட்டின் எந்த நிலமும் மிஞ்சாது. மேலும் பத்திரத்தில் 7 கோடியே 89 லட்சம் ரூபாய். முதல்வர் பொன்னுசாமி பெற்றுக் கொண்டதாக சொல்கிறார்கள்.

ஆனால் எந்த தேதியில் எந்த பரிவர்த்தனை மூலம் எவ்வளவு பணம் பொன்னுசாமிக்கு போனது என்ற விவரம் கூட இல்லை. உண்மையிலேயே பொன்னுசாமி பணம் பெற்றுக் கொண்டாரா என்பது கூட சரிபார்க்க வில்லை. மேலும் திருச்சி நிலத்திற்கும் வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு என்ன சம்பந்தம் வேண்டும் என்று மோசடி செய்வதற்காக மாவட்ட பதிவாளர் பாலசுப்பிரமணியம், மோகன் மற்றும் கணேசன் கூட்டுச்சதி செய்து இந்த நிலத்தை ஆட்டையை போட திட்டமிட்டுள்ளனர்.

மாவட்ட பதிவாளர் பாலசுப்ரமணியம் 30-01-2020 அன்று பிறப்பித்த ஆணை க்குப் பின் 04-02-2020 அன்று சார்பதிவாளர் சந்திரனால் டாக்குமெண்ட் நம்பர் 530/2020 மூலம் திருச்சி அம்மாபேட்டை 9 ஏக்கர் நிலம் வாலாஜா சார்பதிவாளர் அலுவலகத்தில். பதிவு செய்யப்படுகிறது. அதாவது ஏற்கனவே வேறு ஒருவர் பெயரில் செட்டில்மெண்ட் செய்யப்பட்ட நிலத்தை மாபியா போல செயல்பட்டு பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் மீண்டும் வேறு ஒருவர் பெயருக்கு டபுள் டாக்குமெண்ட் செய்கிறார்கள்.

எண்ணிப் பாருங்கள் இது போன்று தமிழகத்தில் எத்தனை எத்தனை நிலங்கள் டபுள் டாக்குமெண்ட் செய்யப்பட்டதோ? தற்பொழுது பாலசுப்பிரமணியம் கன்னியாகுமரி மாவட்ட பதிவாளர் நிர்வாகம் பொறுப்பில் இருக்கிறார். அறப்போர் ஏற்கனவே பள்ளிக்கரணை சதுப்புநிலம் முறைகேட்டில் அங்கயர்கன்னி என்பவர் எப்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ராயபுரத்தில் பத்திரப்பதிவு செய்தார் என்று வெளியிட்டோம் அதே பாணியைத்தான் நம் பாலசுப்பிரமணியம் அவர்களும் கடை பிடித்துள்ளார்.

இந்த அனைத்து ஆதாரங்களையும் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு இன்று அனுப்பி உள்ளது. அதே போல் தலைமை செயலருக்கும் அமைச்சர் மூர்த்தி மற்றும் செயலர் ஜோதிநிர்மளாசாமிக்கும் அனுப்பி உள்ளோம். உடனடியாக மாவட்ட பதிவாளர் திரு பாலசுப்ரமணியன் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் மீதும் FIR பதிவு செய்தும் துறை ரீதியான நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். அதே போல மோசடி பத்திரப்பதிவு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். இவ்வாறு அறப்போர் இயக்கம் அளித்துள்ள புகாரில் கூறக்கட்டுள்ளது.

 

இதையும் படிங்க.!