தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி மாற்றப்பட்டதற்கான காரணத்தையும் செல்வப் பெருந்தகை புதிய தலைவராக நியமிக்கப்பட்டதையும் 45 ஆண்டு காலத்திற்குப் பிறகு பட்டியல் இன சமூகத்தைச் சார்ந்த ஒருவர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டது அந்த கட்சியில் நடந்த அதிசயம் என்கின்றனர் கதர் சட்டைக்காரர்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அருகே அமைந்துள்ளது மணிமங்கலம் என்னும் கிராமம் இந்த கிராமத்தில் குப்புசாமி மற்றும் ராசம்மாள் தம்பதியருக்கு மகனாக 1964 ஆம் ஆண்டு செல்வப் பெருந்தகை பிறந்தார் சென்னை பல்கலைக்கழகத்தில் தன் முதுகலை பட்டப்படிப்பை முடித்து திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார்.
பிறகு சென்னை உயர்நீதிமன்ற பார் கவுன்சில் உறுப்பினராக பதிவு செய்தார் அதை தொடர்ந்து ரிசர்வ் வங்கியில் 16 ஆண்டுகள் பணியாற்றினார் பொது வாழ்வில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில் தனது வங்கி பணியை விடுவித்து அரசியலில் கால் பதித்தார் செல்வப் பெருந்தகை தனது அரசியல் வாழ்க்கையை பூவை மூர்த்தியின் தலைமையிலான அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணியில் அதாவது தற்போதைய புரட்சி பாரதம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் பின்பு அதிலிருந்து விலகி டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியில் இணைந்தார்.
அதன் பின் தொல் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார் விடுதலை சிறுத்தைகளின் பொதுச் செயலாளராகவும் சிறிது காலம் பதவி வகித்தார். பின்னர் விசிக சார்பாக 2006-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் இருந்து போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற வீசிக்காவின் தலைவராகவும் செயல்பட்டார். அதன் பின்பு திருமாவளவன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகினார்.
அதன் பிறகு 2008-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து அக்கட்சியின் மாநில தலைவரானார். கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து செல்வப் பெருந்தகை நீக்கப்பட்டார். பின்னர அந்த கட்சியிலிருந்து விலகி 2010-ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அதன் பிறகு காங்கிரஸ் கட்சியின் சார்பில் 2011-ம் ஆண்டு செங்கம் சட்டமன்றத் தொகுதியிலும் 2016-ம் ஆண்டு திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார்.
பின்னர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் குழு தலைவராகவும் இருந்தார். இந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப் பெருந்தகை நியமிக்கப்படுவதாக டெல்லி மேலிடம் அறிவித்தது. இதனை தொடர்ந்து செல்வப் பெருந்தகை வகித்து வந்த சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பு துணைத்தலைவராக இருந்த கன்னியாகுமரி மாவட்டம் கிளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமாரிடம் வழங்கப்பட்டது.
2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஐந்தாண்டு பணியாற்றிய கே.எஸ். அழகிரி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு புதிய முகத்திற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் செல்வப் பெருந்தகை;யை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1979-ம் ஆண்டு பட்டியலினத்தை சார்ந்த இளையபெருமாள் என்பவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்துள்ளார். அவருக்கு பிறகு திருப்பெரும்புதூர் எம்பியாக இருந்த மரகதம் சந்திரசேகர் மாநில தலைவராக இருந்துள்ளார். அதற்கு பிறகு 45 ஆண்டுகளாக பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் யாரும் மாநிலத்தலைவராக நியமிக்கப்படவில்லை. தற்போது தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பட்டியலினத்தை சார்ந்த செல்வப் பெருந்தகை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
செல்வப் பெருந்தகை தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி என்பது போராட்டங்களை முறையாக நடத்துவதன் மூலம் தான் வெற்றி அடையும். அண்மையில் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து ஆளுநர் மாளிகையை முற்றுகை செய்து போராட்டம் நடத்தினோம். அதன் பிறகு ஆளுநரிடம் நாங்கள் மனு கொடுத்தோம். இந்த செய்தியை ஆளுநர் மாளிகை பத்திரிகை செய்தி குறிப்பாக வெளியிடவில்லை. அது குறித்து நாங்கள் சமூக ஊடகங்களில் செய்தி வெளியிட்டோம். உடனே ஆளுநர் மாளிகையில் இருந்து எங்களை தொடர்பு கொண்டு தங்களின் சமூக ஊடகப் பதிவை நீக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். போராட்டம் ஒன்றின் மூலம் தான் கட்சி வளர்ச்சி பெறவும் எழுச்சி கொள்ளவும் முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன் என்று குறிப்பிட்டார்.