chennireporters.com

குடி போதையில் ஓசி பிரியாணி கேட்டு தகராறு செய்த போலீஸார். நடவடிக்கை எடுக்காத கமிஷ்னர்.

சென்னை தி நகர் சிவஞானம் தெருவில் காசிம் என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.  நேற்று மதியம் இவரது கடைக்கு சென்ற இரண்டு காவலர்கள் ஓசியில் பிரியாணி கேட்டுள்ளனர். அதற்கு ஓசியில் தர முடியாது, பணம் கொடுத்தால் பிரியாணி தருகிறேன் என்று காசிம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் காசிமிடம் தகராறு செய்து விட்டு சென்றுள்ளனர். 

அதன் பின்னர் இரவு  எட்டு மணியளவில் அந்த இரண்டு காவலர்கள் மதுபோதையில் மீண்டும் அந்த பிரியாணி கடைக்கு வந்தனர். பிரியாணி கேட்டு சாப்பிட்டு விட்டு கடை உரிமையாளர் காசிமிடம், பணம் தரமுடியாது உன்னால் என்ன செய்யமுடியுமோ செய்து கொள் என்று சொல்லி மிரட்டியுள்ளனர்.  சாப்பிட்ட  பிரியாணிக்கு காசு கொடுக்க மாட்டோம் என வாடிக்கையாளர்களின் முன்னிலையில்  மிரட்டியுள்ளனர்.  அது தவிர முஸ்லீம் மதத்தை பற்றியும் அவதூராக பேசியுள்ளனர். 

இவர்கள் குடி போதையில் பேசுவதை கேட்டு அங்கு  பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த சிலர், வீடியோ எடுத்துள்ளனர். இதைப் பார்த்த காவலர்கள் பொது மக்களையும் மிரட்டியுள்ளனர். பொது மக்கள் பதிலுக்கு கேள்வி கேட்டதும்  உடனே தங்களது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு  ஓட்டம் பிடித்தனர்.

இதனால் கடை உரிமையாளர் நடந்த சம்பவம் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் அங்கு சென்ற மாம்பலம் போலீஸார் பிரியாணி கடை உரிமையாளரிடம் புகாரை பெற்று கொண்டு  அந்த பகுதியில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அப்போது ஓசி பிரியாணி கேட்டு ரகளையில் ஈடுபட்டவர்கள் மாம்பலம் காவல் நிலையத்தில் பணியாற்றும்காவலர்கள் ஆனந்த் மற்றும் ஜெயபால் என்பது தெரிய வந்தது. 

நேற்று சுதந்திர தினம் என்பதால் மதுக்கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் இரு காவலர்களும் மதுபோதையில் ஓசி பிரியாணி கேட்டு தகராறு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து உயர் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

சென்னை புறநகரங்களில் குறிப்பாக தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் ஆவடி போலீஸ் கமிஷனர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தொடர் இதுபோன்ற அடாவடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  தாம்பரம் கமிஷனர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை நான்கு இன்ஸ்பெக்டர்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் ஆவடியில் பகல் நேரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட போலீசாரம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் . சென்னை மாநகர காவல் துறையில் இது போன்ற பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  எனவே, இது போன்று சமூக விரோத செயல்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து மக்கள் மத்தியில் காவல்துறையினருக்கு இருக்கும் நற்பெயரை காக்க வேண்டியது காவல்துறையின் கடமையாக இருக்கும்.

இதையும் படிங்க.!