முன்னாள் அமைச்சரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஆர் எம் வீரப்பன் அவர்கள் தனது 98 வது வயதில் இயற்கை எய்தி உள்ளார். அவருக்கு ஆழ்ந்த இரங்கலும் புகழ் வணக்கங்களும்.
கே எஸ் ராதாகிருஷ்ணன்
அவர் குறித்த நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்வது பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று வழக்கறிஞர் கே எஸ் ராதாகிருஷ்ணன் இரங்கல் அறிக்கை வெளியிட்டார்.
மறைந்த எம்ஜிஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் இருந்து ஆர் எம் வீரப்பன் அவர்களுக்கும் எனக்கும் தொடர்பு இருந்தது. ஒருமுறை அவர் என்னை அழைத்து பேசினார். எதற்கென்றால் திரு பழ நெடுமாறன் அவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலின் வேல் காணாமல் போய்விட்டது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அதன் பின்னணியில் சுப்பிரமணியசாமி பிள்ளை கொலை செய்யப்பட்ட விவகாரங்களைத் தொட்டு தன்னை அதிகமாக குற்றம் சாட்டி பழ நெடுமாறன் தாக்கி ஏன் விமரசனம் செய்கிறார் என்று என்னிடமும் மறைந்த எம் கே டி.சுப்பிரமணியம் இருவரிடம் முறையிட்டார்.
எம் கே டி சுப்பிரமணியம் யார் என்றால் திமுகவை 1957 இல் ராபிட்சன் பூங்காவில் வைத்து தொடங்கும்போது அழைப்பிழ் அண்ணாவுடன் எம் கே டி சுப்பிரமணியம் பெயர் எல்லாம் அன்று முன்னிலையில் இருந்தது .கலைஞர் பெயரெல்லாம் கடைசியில் இருந்தது என்பது வேறு விஷயம்.
காங்கிரஸ் சேர்ந்து காமராஜர் காலத்தில் அவருடன் நெருக்கமாக இருந்த எம் கே டி சுப்பிரமணியம் திராவிட கழகம் வழியாகத் திமுகவிற்கு வந்து சேர்ந்தவர்.
திரு ஆர் எம் வீரப்பன் அவர்கள் அவரையும் என்னையும் அழைத்து திருமலை பிள்ளை ரோட்டில் உள்ள அவரது வீட்டில் வைத்து இது குறித்து பேசினார் அப்போதுதான் வீரப்பன் எனக்கு நேரடியான அறிமுகம் .
அதற்குப் பிறகு வீரப்பன் 1977கள் தொடங்கி நான் தினமணியில் எழுதும் கட்டுரைகளை எல்லாம் அதில் வெளி வந்தவுடன் முதன்முதலில் வாசித்து விட்டு என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அது குறித்து விவாதிப்பார்.
ஆர் எம் வீரப்பன் அவர்கள் நிறைய புத்தகங்களை ஆழ்ந்து வாசிப்பவரும் கூட. எம்ஜிஆரின் மறைவிற்குப் பின் அரசியலில் மிகுந்த சோர்வுற்றுப் போனார்.அக்காலங்களில் இடை இடையே தொலைபேசி என்னை அழைத்துப் பேசிக்கொண்டும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டும் இருந்திருக்கிறார்.
அதற்கு முன்பாக வீரப்பன் அவர்களை நினைக்கும்போதெல்லாம் ஈரோடு மறைந்த கணேச மூர்த்தி எம்பி அவர்கள் என் நினைவிற்கு வருவார். ஏனெனில் 1990- 1995 ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் அப்போது திமுகவின் ஈரோடு மாவட்டச் செயலாளர் கணேச மூர்த்தி அவர் உதயசூரியன் சின்னத்தைப் பெறுவதற்கான ஏ ஃபார்ம் பி ஃபார்ம் ஆகியவற்றை காங்கேயம் சட்டமன்ற இடைத்தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுவிட கலைஞர் அதற்கு மிக மோசமாக அவரை அழைத்து தன் கோபத்தை என் முன்னால் வெளிப்படுத்தினார். அந்தத் தொகுதியில் ஆர் எம் வீரப்பன் அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நின்றார். திருநெல்வேலி இடைத்தேர்தலிலும் போட்டியிட்டார்
அத்தகைய மூத்த அரசியல்வாதி திரைப்படத் தயாரிப்பாளர் எம் ஜி ஆர் அவர்களின் ஆழ்ந்த அன்பிற்கு உரியவர் தனது முதிர்ந்த வயதில் உலகை விட்டு விடை பெற்றுக் கொண்டிருக்கிறார் அவருக்கு ஆழ்ந்த அஞ்சலியும் வணக்கங்களும்.