Chennai Reporters

பெங்களூரில் முன்னாள் திமுக மத்திய அமைச்சரின் உதவியாளருக்கு அரிவாள் வெட்டு..

திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் உதவியாளர் பெங்களூரில் ஹோட்டல் ஒன்றில் பட்டப் பகலில்  கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் மதுரை மு.க.அழகிரியின் உதவியாளர் குருசாமி பெங்களூருவில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை வெறி தாக்குதல் நடந்ததை நேரில் பார்த்தவர்கள் இது போல ஒரு சம்பவம் பெங்களூரில் இது வரை நடந்ததே இல்லை என்கின்றனர். அந்த அளவிற்கு கொடுரமான முறையில் இந்த தாக்குதல்  சம்பவம் நடந்துள்ளது. 

                                                                                  குருசாமி

திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி. இவர் மதுரையில் வசித்து வருகிறார். இவர் மத்திய அமைச்சராக இருந்தவர் தற்போது அரசியலிலிருந்து விலகி மதுரையில் தொழில் செய்து வருகிறார். இவரிடம் உதவியாயளராக வி.கே.குருசாமி  என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

மு.க.அழகிரி

இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் செப்டம்பர் 3 தேதி மதுரையிலிருந்து  சென்ற விமானம் மூலம் பெங்களூருக்கு  சென்றுள்ளார். அங்கு ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த அவர், பெங்களூருவின் உள்ள பானஸ்வாடி பகுதியில்  வீடு ஒன்றை பார்ப்பதற்காக ஒரு தரகருடன் பேசியுள்ளார். பனஸ்வாடி அருகே உள்ள சுக் சாகர் ஹோட்டல் ஒன்றில் தனது நண்பரான ரியல் எஸ்டேட் புரோக்கருடன் தேநீர் குடித்துக்கொண்டிருந்தார்.அப்போது திடீரென அந்த ஹோட்டலில் புகுந்த மர்ம நபர்கள் 5 பேர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குருசாமியை சராமாரியாக வெட்டியுள்ளனர். இதில் குருசுவாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இந்நிலையில் அவருடன் இருந்த  நண்பருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருப்பினும் இருவரும்  பலத்த காயங்களுடன்  உயிர் தப்பினார்கள். ஆனாலும் அவரது நிலை கவலைக்கிடமாக  இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                                                                               ‘ராஜ பாண்டி’

மேலும் இந்தத் தாக்குதல் சம்பவம் முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என  போலீசார் கருதுகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம்குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் குருசாமி மதுரையில் ஒரு பிரபலமான நபராக இருந்துள்ளார். “ரவுடி ஷீட்டர்” என்ற பெயருடன், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மதுரையை கலக்கிய  ‘ராஜ பாண்டி’ என்ற எம்.ராஜபாண்டியனுடன் இவருக்குப் முன்பகை இருந்து வந்துள்ளது. அதே சமயம் குருசாமி மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

குருசாமி சென்ற விமானத்திலேயே மதுரையை சேர்ந்த ஒருவர் அவரை பின் தொடர்ந்து பெங்களூர் சென்றுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  முன்னதாக மதுரையிலிருந்து பெங்களூருக்கு சென்ற கூலிப்படையினர் குருசாமியுடன்  சென்றவர் கொடுத்த தகவல்களின் பேரில் அவர் ஹோட்டலில் டீ குடித்து கொண்டிருக்கிறார் என்பதை தனது கூட்டாளிகளுக்கு கூறியுள்ளார். அதனை தொடர்ந்து மதுரையில் இருந்து பெங்களூரில் தங்கியிருந்த கூலிப்படையினர் கத்திகளுடன் ஹோட்டலுக்குள் சென்று குருசாமியை திட்டமிட்டு  வெட்டியுள்ளனர்.பெங்களூரில் இதுபோன்ற கொலை வெறி தாக்குதல்  சம்பவம் இதுவரை நடந்ததே இல்லை என்கின்றனர் காவல்துறையினர். ஹோட்டலில் சாப்பிட வந்தவர்கள் எல்லாம் அவர்களின் நெஞ்சம்  பதைக்கும் வகையில் வெட்டிய காட்சி அவர்களை மிரட்சி அடைய செய்துள்ளது .ஹோட்டலில் உள்ள சிசிடிவி யில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளிகளை அடையாளம் காணும்  பணியில் ஈடுபட்டுள்ளனர். குருசாமி  மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதல்  சம்பவம் அழகிரிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!