chennireporters.com

குடும்பத்தை பிரிந்து கள்ள காதலனுடன் சென்ற மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவர் கைது.

கணவன் மற்றும் குழந்தைகளை பிரிந்து கள்ள காதலனுடன் சென்று குடும்பம் நடத்தும்  மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவனை நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவர் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் சிவக்குமார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இவரது மனைவி கவிதா இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கணவர் மற்றும் மனைவி மீது பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டு பெண் பயணியிடம் நகை திருடியதாக கவிதா மீது ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.   இவ்வழக்கு  கோவை  குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது .

இந்நிலையில் கவிதா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார்.  இந்த சூழ்நிலையில் கவிதா தனக்கு அறிமுகமான வேறொரு இளைஞருடன் வசித்து வருவதாக கணவர் சிவகுமாருக்கு தகவல் கிடைத்தது.

மேலும் 23ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக ஜெ.எம்.  ஒன்றாவது நீதிமன்றத்திற்கு கவிதா வர உள்ள தகவல் சிவகுமாருக்கு கிடைத்தது.  வழக்கு விசாரணைக்காக கவிதா  23ஆம் தேதி  நீதிமன்ற வளாகத்திற்கு வந்தார். அங்கு வந்த சிவக்குமார் கவிதாவை சந்தித்து தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு கேட்டார் அதற்கு கவிதா மறுப்பு தெரிவித்தார்.

 

அதன் பிறகு கவிதா நீதிமன்றத்திற்கு உள்ளே சென்றார் அவரை பின்தொடர்ந்து சென்ற சிவகுமார் தன்னுடன் வீட்டுக்கு வருமாறு மீண்டும் அழைத்தார். ஆனால் கவிதா கணவரின் பேச்சுக்கு பதில் எதுவும் சொல்லாமல் நீதிமன்றத்திற்கு உள்ளே சென்றார். பின்னர் நீதிமன்றம் முடிந்து வெளியே வந்தார்.

 

அங்கு நின்று கொண்டிருந்த சிவக்குமார் தான் எடுத்து வந்திருந்த ஆசிட்டை எடுத்து கவிதாவின் மீது ஊற்றினார். கவிதாவின் முகம் மற்றும் உடலின் முன் பகுதியில் ஆசிட் விழுந்தது. இதில் அவரது சேலை எரிந்து உடலில் தீக்காயம் ஏற்பட்டது . அருகே இருந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் தான் அணிந்திருந்த கருப்பு கோட்டை கழற்றி பெண்ணின் மீது போட்டார்.  அந்த உடையும் எரிந்து சேதம் அடைந்தது. கவிதாவின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கு வந்த வழக்கறிஞர்கள் தப்பி ஓடிய முயன்ற சிவக்குமாரை மடக்கிப் பிடித்தனர்.

 

பின்னர் வழக்கறிஞர்கள் ஒன்றாக சேர்ந்து சிவக்குமாரை அடித்து உதைத்தனர். கவிதாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவக்குமார் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் தன்னையும் தன் குழந்தைகளையும் விட்டு ,விட்டு மனைவி கவிதா வேறொருவருடன்  குடும்பம் நடத்தி  வருவதால் கோபமடைந்து அவர் மீது ஆசிட் ஊற்றியதாக கணவர் சிவக்குமார் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார் .பின்னர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க.!