தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாகவும் இந்திய சினிமாவில் வாழும் வரலாற்று கலைஞனாகவும் திகழ்பவர் மண்ணின் மைந்தர் நடிகர் நாசர் இவரைப் பற்றி சமூக வலைதளங்களில் ஒரு பதிவு கடந்த நான்கு நாட்களாக வைரலாகி வருகிறது. முகநூல் பக்கத்தில் அவர் பிறந்த நாள் குறித்து வெளியிடப்பட்டுள்ள பதிவு மிக சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது. அந்தப் பதிவை நாம் நமது வாசகர்களுக்கு அப்படியே வழங்கி இருக்கிறோம்
செங்கல்பட்டு அருகே உள்ள பாலூரில் 1958 மார்ச் 5 அன்று நகைபாலிஷ் தொழில் செய்து வந்த மெஹபூப் பாட்சா மற்றும் மும்தாஜ் தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் முஹம்மது ஹனிஃப் நாசர். செங்கல்பட்டில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியிலும் சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் படித்தார். வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் நாடகங்கள் நடிக்க செல்வதும் நடிப்பு கற்று தரும் பள்ளிகளில் படித்தார்.
திரைப்பட கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவர் இந்திய விமான படையில் வேலை பார்த்த போதிலும் தனக்கு பிடித்த நடிப்புக்கான வாய்ப்புகளையும் தேடிக்கொண்டே இருந்தார். 1985 காலகட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு என்பது அவ்வளவு எளிதல்ல. ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அது எதுவும் அவருக்கான முகவரியாக மாறவில்லை.
பின்னர் 1987 ல் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த நாயகன் திரைப்படத்தில் நாசர் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்தது திருப்பு முனையாக அவருக்கு அமைந்தது. அதன் பிறகு அவருடைய கிராஃப் இன்று வரை ஏறுமுகம் தான். கேரக்டர் ஆர்டிஸ்ட் என்று சொல்லப்படும் கேட்டகிரியில் இவருக்கு கிடைத்த வெரைட்டியான வேடங்கள் இவரை தனியாக கதாநாயகன் அளவுக்கு குறிப்பிட்டு பேச வைத்தது. மெலிந்த தேகம், நீண்ட உயர்ந்த மூக்கு, படர்ந்த நெற்றி என்று அவரிடம் இருந்த எதுவும் நடிகருக்கு பொருந்தாத விசயங்களை அவருக்கான அடையாளங்களாக பலப்படுத்திக் கொண்டார்.
ஆரம்ப காலத்தில் நிராகரிக்கப்பட்ட முகம் பல்வேறு மொழிகளில் தேடும் முகமாக மாறி விட்டது. அவரின் அர்ப்பணிப்போடு நடிக்கும் திறன் பல சவாலான கதாபாத்திரங்களை இழுத்து வந்தது. வில்லன், அதிகாரி,சாமானியன், பணக்காரன், ஏழை, உயர் அதிகாரி,காமெடியன், அப்பாவி என்று எந்த வேடத்துக்கும் பொருந்தும் உடல் மொழி. ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்காக மெனக்கெட்டு இப்போது வரை உழைக்கும் விசயங்கள் தான் இன்று வரை உயர்த்தி பிடிக்கிறது.
சினிமாவில் பெரிய இடத்தை தக்க வைத்திருக்கும் இந்த காலத்திலும் நவீன நாடகங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் கற்று கொண்ட நடிப்பை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்கிறார்.
எதிர் மறை, நேர்மறை கதாபாத்திரங்களுக்கேற்ப உணர்ந்து சரியான அளவுகோலில் நடிப்பை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி அசர வைப்பவர். இன்றும் அவர் பார்வை இல்லாதவராக நடித்த மின்சார கனவு, தேவர் மகன் படத்தில் மாயனாக வாழ்ந்தது, தேவராக ஆவாரம் பூ, பத்ரியாக குருதிப்புனல் என்று ஒவ்வொரு கதாபாத்திரமும் மாறுபட்டவை.
நாடகங்களும் தெருக்கூத்து நிகழ்வுகளும் அவருக்கு பிடித்தவை என்று கூறுவார்.அவர் இயக்கி வெளியான முதல் படமான அவதாரத்தில் அவருடைய ஆசையை குப்புசாமி என்ற கூத்துகலைஞனின் வாயிலாக காட்டி இருப்பார். தேவதை, மாயன், பாப்கார்ன், சன் சன் தாத்தா போன்ற வித்தியாசமான கதைகளை இயக்கிய படைப்பாளி.
இவர் மனைவி கமீலாநாசர் மிக சிறந்த சமூக செயற்பாட்டாளர். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். 1985ல் கல்யாண அகதிகள் என்ற படத்தில் கண்ணாயிரம் என்ற கதாபாத்திரத்தில் ஆரம்பித்த கலைப்பயணம் பாகுபலி, பொன்னியின் செல்வன் என்று நீண்டிருக்கிறது. மாற்றங்களை விரும்பும் கமல்ஹாசன் உடன் இன்று வரை பலபடங்களில் தொடர்கிறார். தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாள மொழி, கன்னடம், ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் என்று தனது பாதையை விசாலமாக்கி இருக்கிறார். தமிழக அரசு விருது கள், விகடன் விருது, ஆந்திர அரசின் நந்தி விருது, நார்வே திரைப்பட விழா விருதுகள் என்று பல விருதுகளை பெற்று உள்ளார்.
1985 ல் ஆரம்பித்த கலைப்பயணத்தில் இப்போது 40 வது மைல்கல் தொட்டிருக்கிறார். பல மொழிகளிலும் 700 க்கு மேற்பட்ட திரைப்படங்கள். நடிகராக வருவதற்கு போராடியவர் இப்போது தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக பொறுப்பு வகிக்கிறார் என்பது அவரது உழைப்பின் வெற்றி. இன்று வயதும் 66லிருந்து 67க்கு அடி வைக்கிறார்.
#அந்த பெரும் கலைஞன் நாசரை நீண்ட காலம் வாழ வாழ்த்துவோம். என்று முடிகிறது அந்த பதிவு.