chennireporters.com

பத்திரிகையாளர்களை பழிவாங்கும் போக்கை பா.ஜ.க அரசு கைவிடவேண்டும்.

பத்திரிகையாளர் முகம்மது சுபேர் மற்றும் செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் கைது நடவடிக்கையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

ஒன்றிய அரசு பத்திரிகையாளர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்.

முகம்மது சுபேர் மற்றும் டீஸ்டா செடல்வாட் ஆகியோரை உடடினயாக விடுதலை செய்ய வேண்டும்.

2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாகவும், அதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஷான் ஜஃப்ரியின் மனைவி சகியா ஜஃப்ரி வழக்கு தொடர்ந்திருந்தார். சகியா ஜஃப்ரிக்கு ஆதரவாக பத்திரிகையாளர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளரான டீஸ்டா செடல்வட்டும் அவர் தரப்பில் தனியாக மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுக்களில், கலவரம் நடந்த சமயத்தில் குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி உட்பட அமைச்சர்கள், அரசு அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளன.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி அந்த வழக்கை கடந்த வெள்ளிக்கிழமை (24.06.22) தள்ளுபடி செய்தது. அப்போது வழங்கப்பட்ட தீர்ப்பில் வழக்கை தொடர்ந்தவர்கள் உள்நோக்கத்துடனும், போலியான ஆதாரங்களையும் முன் வைத்ததாக உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

இதைத்தொடர்ந்து, பத்திரிகையாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான டீஸ்டா செடல்வாட், ஏமாற்றியது, சதி செய்தது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ், கடந்த சனிக்கிழமை மாலை குஜராத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பொதுவாக எந்த ஒரு நீதிமன்றத்திலும், போதுமான ஆதாரம் இல்லை என்பதை சுட்டிக்காட்டி ஒரு வழக்கு தள்ளுபடி செய்யப்படும்போது, அந்த வழக்கை தொடர்ந்தவர்களுக்கு எதிராக நீதிமன்றம் கருத்து தெரிவிப்பது இல்லை. ஆனால், இந்த வழக்கில் மட்டும் டீஸ்டா செடல்வாட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றம் காட்டமாக கருத்து தெரிவித்தது ஆச்சயர்த்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றம் தெரிவித்த அந்த கருத்தையே ஆதாரமாக வைத்து டீஸ்டா கைது செய்யப்பட்டுள்ளது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க, கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் டீஸ்டா செடல்வாட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பதும், அதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டிருப்பதும், அப்பட்டமான கருத்துச் சுதந்திர ஒடுக்குமுறையாகும். அத்துடன் நீதி வேண்டி உச்சநீதிமன்றத்தை நாடியவருக்கு கைது நடவடிக்கைதான் பரிசு என்றால், இதைவிட வேறு என்ன கொடுமை இருக்க முடியும் என்று எண்ணத் தோன்றுகிறது.

இதேபோல், ஆல்ட் நியூஸ் என்ற செய்திகளின் உண்மைத் தன்மையை சரிபார்க்கும் இணையதளத்தின் இணை நிறுவனரும் பத்திரிகையாளருமான முகம்மது சுபேர், டெல்லி காவல்துறையினரால் நேற்று (27.06.22) கைது செய்யப்பட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு அவர் மீது தொடரப்பட்ட வழக்கு குறித்து விசாரிப்பதற்காக அழைக்கப்பட்ட சுபேரை, 2018 ஆம் ஆண்டு டிவிட்டர் பக்கத்தில் சுபேர் பதிவிட்ட ஒரு கருத்திற்காக இரு பிரிவினருக்கிடையே மோதலை தூண்டுதல், குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. சுபேர் கைது செய்யப்பட்டது குறித்து டெல்லி காவல்துறை முறையாக தெரிவிக்கவில்லை என்றும், முதல் தகவல் அறிக்கையையும் வழங்கவில்லை என்று ஆல்ட் நியூஸ் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனரான பிரதிக் சின்ஹா தெரிவித்துள்ளார்.

எதற்கும் அஞ்சாமல் உண்மையை வெளியிடுபவர் என்ற வகையில் முகம்மது சுபேர் உலக அளவில் அறியப்பட்ட ஒரு பத்திரிகையாளர். அவர் கைது செய்யப்பட்டிருப்பதையும், அதற்கான காரணத்தையும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சிறுபான்மையினருக்கு எதிரான இந்துத்துவ அமைப்புகளின் நடவடிக்கைகளையும், வெறுப்புப் பேச்சுக்களையும் வெளியுலகத்திற்கு வெளிச்சம்போட்டுக் காட்டிய முகம்மது சுபேர், குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட சிறுபான்மையினருக்கு நீதி வேண்டி சட்டப்போராட்டம் நடத்திவரும் டீஸ்டா செடல்வாட் கைது செய்யப்பட்டிருப்பது, ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

மக்களுக்கு உண்மையை உரக்கச் சொல்லும் பத்திரிகையாளரும், உண்மையின் பக்கம் நின்று போராட்டம் நடத்தி வரும் பத்திரிகையாளரும் கைது செய்யப்பட்டிருப்பது இந்தியாவில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களையும் அச்சுறுத்தும் நடவடிக்கையாகவே மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கருதுகிறது.

டீஸ்டா செடல்வாட் மற்றும் முகம்மது சுபேர் கைது நடவடிக்கையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தலை உணர்ந்து, அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் ஒன்றிணைந்து முகம்மது சுபேர் மற்றும் டீஸ்டா செடல்வாட் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் மையம் அறைகூவல் விடுக்கிறது.

இதையும் படிங்க.!