ஒரு கார் வாங்குவதற்கே பலர் படாதபாடு படுகின்றனர். இங்கு ஒருவர் ரூ.4,000 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை மட்டுமே வைத்துள்ளார். இவர் வைத்திருக்கும் மற்ற கார்களின் கணக்கு தனி. அந்த நபர் நீங்க நினைக்கிற மாதிரி முகேஷ் அம்பானியோ, அதானியோ அல்லது ரத்தன் டாடாவோ அல்ல. பல ஆயிரம் கோடிகளில் புரளும் ஒரு மன்னர். புருனே நாட்டின் மன்னர் ஹசனல் போல்கியா தான் அவர்.
1967ல் புருனே மன்னராக ஹசனல் போல்கியா பொறுப்பேற்றார். 1984ல் இங்கிலாந்திடம் இருந்து புருனே விடுதலை பெற்று சுதந்திரம் அடைந்தது. அது முதல் அந்நாட்டின் மன்னர் மற்றும் பிரதமர் எல்லாமே அவர்தான். அந்நாட்டில் நாடாளுமன்றம் இருந்தாலும் மன்னராட்சிதான் நடைபெறுகிறது.
மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு பிறகு வரலாற்றில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் இவர்தான். மேலும் ஆடம்பர வாழ்வில் திளைக்கும் அவர் உலகின் மெகா கோடீஸ்வரர்களில் ஒருவரும் கூட. சுல்தான் மிகப்பெரிய கார் பிரியர்.
சந்தைக்கு புதிதாக எந்த சொகுசு கார்களும் வந்தாலும் உடனே வாங்கி விடுவார். அதிக ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருப்பவர் என்ற முறையில் இவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
இவரிடம் தற்சமயம் 604 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.4,000 கோடியாகும். 1990களில் நடுப்பகுதியில் வாங்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் பென்ட்லி கார்களில் கிட்டத்தட்ட பாதி சுல்தானுக்கும் அவரது குடும்பத்தினருக்கு சென்றது.
ஹசனல் போல்கியா வசிக்கும் இஸ்தானா நூருல் இமான் அரண்மனையும் சாதாரண அரண்மனை கிடையாது. கட்டப்பட்ட 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் உலகின் மிகப்பெரிய அரண்மனையாகும். ரூ.2,550 கோடி மதிப்பிலான 22 காரட் தங்கத்தில் அரண்மனையின் குவிமாடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவரிடம் ரூ.92 கோடி மதிப்பிலான வைரங்கள் உள்ளன. புருனே சுல்தானுக்கு 3 மனைவிகள் மூலம் 5 மகன்களும், 7 மகன்களும், 18 பேரப் பிள்ளைகளும் உள்ளனர்.