chennireporters.com

சமூக நீதிக்கு எதிரான தீர்ப்பு!

மறுசீராய்வு மனுவைத் தமிழக அரசு அளிக்கவேண்டும்
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள்.

சமுதாயத்தில் பொருளாதார அடிப்படையில் நலிந்தப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அளித்து ஒன்றிய அரசு பிறப்பித்த ஆணை செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றத்தின் அமர்வில் இருந்த மூன்று நீதிபதிகள் ஆதரவாகவும், தலைமை நீதிபதி உள்பட இருவர் எதிராகவும் தீர்ப்பளித்துள்ளனர். இத்தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானதாகும்.

உலகில் எந்தவொரு நாட்டிலும் பொருளாதார அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. பொருளாதார நிலை என்பது நிரந்தரமானது அல்ல. அடிக்கடி மாறக்கூடியது. அதைத் திட்டவட்டமாக முடிவு செய்வது என்பது இயலாத ஒன்றாகும். அவ்வாறு முடிவு செய்வதில் பல்வேறு தவறுகள் விளைவதற்கு இடமளித்துவிடும்.

காலங்காலமாக சமுதாயத்தில் கல்வி, பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றின் அடிப்படையில் பின்தங்கியோருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்திற்கு மாநிலம் இடஒதுக்கீட்டின் அளவு வேறுபடும். எனவே அந்தந்த மாநிலங்கள் இடஒதுக்கீடு பிரச்சனையில் முடிவு எடுப்பதுதான் சரியாக அமையும். ஒன்றிய அரசு இதில் தலையிடுவதும், சட்டம் இயற்றுவதும் எதிர்காலத்தில் பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுத்துவிடும்.

எனவே தமிழக அரசின் சார்பில் இத்தீர்ப்பை 7 அல்லது 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரிக்கவேண்டும் என மறுசீராய்வு மனுவை உடனடியாகத் தாக்கல் செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

இதையும் படிங்க.!