திருவெற்றியூரில் குப்பையில் கிடந்த 100 கிராம் தங்க நாணயத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மாநகராட்சி பெண் தூய்மை பணியாளருக்கு தலைமை செயலாளர் இறையன்பு பாராட்டு தெரிவித்துள்ளார்.
திருவெற்றியூர் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் கணேஷ் ராமன் இவர் பெருங்குடியில் உள்ள கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் 100 கிராம் தங்க நாணயத்தை வாங்கி வீட்டில் வைத்திருந்ததாகவும் பழைய பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீட்டில் வைத்திருக்கிறார்.
அதை குப்பை என நினைத்து குப்பைத் தொட்டியில் போட்டு விட்டதாகவும் அதை கண்டுபிடித்து தருமாறு கணேஷ் ராமன் சாத்தாங்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தநிலையில் திருவெற்றியூர் நகராட்சியில் குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மேரி என்கிற தூய்மைப் பணியாளர் ஒரு கவரில் தங்க நாணயம் இருப்பதை கண்டு அதை எடுத்து பிரித்துப் பார்த்தார்.
அதில் தங்க நாணயம் (லட்சுமி பொட்டு) இருப்பது தெரிய வந்தது.அதனை தொடர்ந்து அங்கு இருந்த மேற்பார்வையாளரிடம் தகவல் தெரிவித்தார்.
பின்னர் மேரி சாத்தாங்காடு காவல் நிலையத்தில் தங்க நாணயத்தை ஒப்படைத்தார்.
காணாமல்போன தங்க நாணயம் கிடைத்துவிட்டதாக கணேஷ் இராமனுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து கணேஷ் ராமன் சாத்தாங்காடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியிடம் தங்க நாணயத்தை பெற்றுக்கொண்டார்.
தனது நேர்மையான எண்ணத்தால் கடமை தவறாமல் நடந்துகொண்ட தூய்மைப் பணியாளர் மேரியை காவல்துறையினர் பாராட்டினர்.
இதனிடையே இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட தமிழக தலைமைச் செயலாளர் டாக்டர் இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் தூய்மை காவலராக பணியாற்றி வரும் மேரி அவர்களை தலைமைச் செயலகம் வர வைத்து அவருடைய நேர்மையை பாராட்டி கவுரவிக்கும் வகையில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அவருக்கு திருவள்ளுவர் சிலையை பரிசாக வழங்கினார்.அது தவிர அவர் மேரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் நீங்கள் தூய்மைப் பணியாளர் மட்டுமல்ல தூய்மையான பணியாளர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.