chennireporters.com

விலை உயர்த்தப்பட்ட ஆவின் ஆரஞ்சு பால் விற்பனை வீழ்ச்சி.

பால் கொள்முதல், பால் விற்பனை விலை, பால் விற்பனைக்கான லாப தொகை மூன்றையும் மாற்றியமைக்கக் கோரி  தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி தமிழக முதல்வர் தலைமைச் செயலாளர் என பலருக்கும்  கோரிக்கை மனு அளித்துள்ளார்.

 

 

                                                                            பொன்னுசாமி

ஆவின் நிறைகொழுப்பு (ஆரஞ்சு நிற பாக்கெட் FCM) பால் (மாதாந்திர அட்டைதாரர்களுக்கு தவிர்த்து) லிட்டருக்கு 12.00ரூபாய் மற்றும் டீமேட் பால் (சிவப்பு நிற பாக்கெட்) லிட்டருக்கு 16.00ரூபாய் விலை உயர்த்தப்பட்ட பிறகு அவற்றின் விற்பனை தற்போது கடுமையாக சரிவடையத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் விற்பனை சுமார் 30%வரை குறைந்துள்ளதோடு அந்த பாலினை பயன்படுத்திய பொதுமக்கள் தற்போது தனியார் பால் பாக்கெட்டுகளையும், ஆவின் நிலைப்படுத்தப்பட்ட (பச்சை) பால் பாக்கெட்டுகளையும் வாங்க தொடங்கியுள்ளனர்.

அதேசமயம் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டிற்குப் பதிலாக பச்சை நிற பாக்கெட்டுகளின் கொள்முதலை அதிகரிக்கக் கூடாது என ஆவின் நிர்வாகம் தரப்பில் இருந்து பால முகவர்களுக்கும், மொத்த விநியோகஸ்தர்களுக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது நிறைகொழுப்பு பால் விற்பனையை குறைக்கப்பதற்காகவே இந்த விலை உயர்வு நாடகத்தை பால்வளத்துறையும், ஆவின் நிர்வாகமும் கூட்டாக சேர்ந்து மேற்கொண்டுள்ளதோ..? என்கிற சந்தேகம் அழுத்தமாக எழுகிறது.

ஏனெனில் ஒவ்வொரு பால் பண்ணைகளிலும் நிறைகொழுப்பு பால் தயாரிப்பதற்கான பாலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் “கிரீம்” தேவையான அளவை விட எப்போதும் கூடுதலாகவே கையிருப்பில் இருந்து கொண்டிருக்கும். அப்போது தான் நிறைகொழுப்பு பால் உற்பத்தியை தட்டுப்பாடின்றி மேற்கொண்டு தங்குதடையின்றி விநியோகம் செய்ய முடியும்.

ஆனால் கடந்த 2019ம் ஆண்டுக்குப் பிறகு பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாதது, கொள்முதல் செய்த பாலுக்கான தொகையை குறித்த காலத்தில் பட்டுவாடா செய்யாமல் நிலுவையில் வைத்திருப்பது, கால்நடை தீவனங்களுக்கு சத்தமின்றி மானியத்தை நிறுத்தியது போன்ற பல்வேறு காரணிகளால் ஆவினுக்கான பால் வரத்து கடுமையாக குறைந்து பல மாதங்களாகவே ஆவினுக்கான பால் கொள்முதல் அளவு கடுமையாக வீழ்ச்சியடையத் தொடங்கியது.

இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய துறை சார்ந்த அமைச்சரோ, பால்வள ஆணையரோ, மாவட்ட ஒன்றிய பொதுமேலாளர்களோ அல்லது பால்வள பதிவாளர் உள்ளிட்ட பால்வளத்துறை சார்ந்த அதிகாரிகளோ ஆவினுக்கான பால் கொள்முதல் குறையாமலும், அதிகரிக்கவும் போதிய கவனம் செலுத்தாமல் மெத்தனப்போக்கோடு நடந்து கொண்டதால் ஒவ்வொரு பால் பண்ணைகளிலும் நிறைகொழுப்பு பால் தயாரிப்பதற்கான “கிரீம்” போதிய கையிருப்பு இல்லாமல் போனது.

அதனால் தற்போதைய தேவைக்கே “குஜராத் மாநில கூட்டுறவு நிறுவனமான அமுல்” உள்ளிட்ட அண்டை மாநில பால் நிறுவனங்களிடமிருந்து “பட்டர் ஆயில்” அதிக விலை கொடுத்து வாங்கி நிறைகொழுப்பு பால் தயாரிக்கும் சூழலும் அதனால் கூடுதல் இழப்பும் ஏற்பட விளைவு ஒவ்வொரு மாவட்ட ஒன்றியங்களிலும் நிறைகொழுப்பு பால் விற்பனையை குறைக்கச் சொல்லி ஆவின் உயரதிகாரிகள் தரப்பில் இருந்து கீழ்மட்ட அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தான் “ஈயம் பூசியது போன்றும் இருக்க வேண்டும், ஈயமும் செலவாகக் கூடாது” என்பது போல கடந்த 5ம் தேதி முதல் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு வெறும் 3.00ரூபாய் மட்டும் உயர்த்தி விட்டு பொது வணிகத்தின் மூலம் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அதிகளவில் வாங்கி பயன்படுத்தும் நிறைகொழுப்பு பாலினை (FCM ஆரஞ்சு நிற பாக்கெட்) வணிகரீதியாக பயன்படுத்துவதாக தவறான தகவல்களை கூறி மாதாந்திர அட்டைதாரர்களுக்கு விலையை உயர்த்தாமல் இதர தரப்பு மக்களுக்கான விற்பனை விலையை வரலாறு காணாத வகையில் லிட்டருக்கு 12.00ரூபாய் உயர்த்தியதோடு, 100% முற்றிலும் வணிக பயன்பாட்டிற்கான நிறைகொழுப்பு பாலான (சிவப்பு நிற பாக்கெட்) டீமேட் பாலிற்கும் லிட்டருக்கு 16.00ரூபாய் உயர்த்தியது.

பால் உற்பத்தியாளர்களுக்கு சொற்ப அளவில் கொள்முதல் விலையை கூடுதலாக வழங்கி விட்டு, பால் முகவர்களுக்கான பால் விற்பனைக்குரிய கமிஷன் தொகையை உயர்த்தி வழங்காமல் விற்பனை விலையை வரலாறு காணாத வகையில் உயர்த்தியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதோடு அரசுக்கு அவப்பெயரை உருவாக்கியுள்ளது.

ஒருவரின் உருவத்திற்கேற்ற வகையில் துணியை வெட்டி அவர்களுக்கு ஏற்ற வகையில் ஆடை தைக்க தையற்கலைஞர் முயற்சி செய்யாமல், ரெடிமேட் ஆடையை கொண்டு வந்து அதற்கேற்றவாறு ஒருவரது உடலை வெட்டி, செதுக்கி அதற்குள் திணிக்க முயற்சி செய்தால் எப்படி இருக்குமோ அது போல் செயல்பட்டு வரும் தமிழக பால்வளத்துறை அமைச்சரும், ஆவின் நிர்வாக இயக்குனரும் என்ன நினைத்து ஆவின் நிறைகொழுப்பு பால் விற்பனை விலை உயர்வை அமுல்படுத்த நினைத்தார்களோ அது தற்போது நிறைவேறத் தொடங்கி ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற பாக்கெட் கொண்ட நிறைகொழுப்பு பாலின் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது.

தனியாருக்கு சாதகமான இந்த நிலைப்பாடு ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், பால் உற்பத்தியாளர்கள், பால் முகவர்கள் தரப்பின் எதிர்காலத்திற்கும் நல்லதல்ல என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு விவகாரத்தில் தலையிட்டு பால்வளத்துறை மற்றும் ஆவின் நிர்வாகத்தின் தவறான அணுகுமுறையை சரிசெய்து பால் கொள்முதல், விற்பனை விலை மற்றும் ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகை இம்மூன்றையும் சீர்படுத்தி மறு அறிவிப்பு வெளியிடுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் அளித்த  மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க.!