தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். இன்று அவரது உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, நேரு, தங்கம் தென்னரசு,சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும், வைகோ, திருமாவளவன், சீமான், ரஜினிகாந்த் ,கமலஹாசன், நடிகர் விஜய், ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் உட்பட அனைத்து கட்சி தலைவர்களும்,சினிமா நடிகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
தீவுத்திடலில் பட்டிருந்த அவரது உடல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது குடும்ப வழக்குப்படி சம்பிரதாயங்கள் செய்யப்பட்டு அவரது உடல் சந்தனப்பேழையில் வைக்கப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது
தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொண்டர்கள் ரசிகர்கள் குவிந்தனர் தீவு திடலில் இருந்து கோயம்பேடு வரை மக்கள் வெள்ளத்தில் விஜயகாந்த் உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
தேமுதிக அலுவலகத்தில் ரசிகர்கள் பார்ப்பதற்காக பெரிய திரைகள் வைக்கப்பட்டிருந்தன. சாலைகளின் இருமருங்கிலும் ரசிகர்கள், தொண்டர்கள் ,மக்கள் வெள்ளம் சூழப்பட்டிருந்தது. பல தொண்டர்கள் விஜயகாந்த் படத்தைப் பார்த்து உருகி அழுத காட்சி நெஞ்சத்தை உருக்குவதாக இருந்தது.
தீவுத்திடலில் இருந்து கோயம்பேடுக்கு 10 கிலோமீட்டர் தூரம் அந்த 10 கிலோமீட்டர் தூரம் வரை ஏறக்குறைய 4 மணி நேரம் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் மக்கள் வெள்ளத்தில் விஜயகாந்த் உடல் கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது
டிசம்பர் மாதத்தில் நடிகர் விஜயகாந்த் இறந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் ஒரு பதிவு வைரல் ஆகி வருகிறது. அதாவது சினிமாவில் இருந்து தமிழக அரசியலில் நுழைந்து டிசம்பர் மாதத்தில் இறந்த தலைவர்கள் பட்டியலை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்
இணையவாசிகள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய மூவரும் டிசம்பர் மாதத்தில் இறந்துள்ளனர். இந்த அபூர்வ ஒற்றுமை ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் திலகம் டாக்டர் எம்ஜிஆர் டிசம்பர் 24ஆம் தேதி காலமானார். ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி காலமானார். இந்த நிலையில் டிசம்பர் 28ம் தேதி கேப்டன் விஜயகாந்த் காலமாகியுள்ளார்.
இந்த மூவரும் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் என்பதும் மூவரும் ஆளுமையில் உள்ள தலைவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி மூவருமே ஏழை எளிய மக்களுக்காக பாடுபட்டவர்கள் என்றும் கூறி வருகின்றனர். இந்த மூவரும் ஏழை மக்களின் பசியை தீர்க்க பாடுபட்டவர்கள் என்று கூறி வருகின்றனர்.