chennireporters.com

முப்பது ரூபாய்க்கு முழு சாப்பாடு கோவையில் ஒரு அட்சய பாத்திரம்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்                                                                                        பெற்றான் பொருள்வைப் புழி.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை.

இவையெல்லாம் வள்ளுவர் வாக்கு.

அவர்தம் வாக்கை மெய்ப்பிக்க RVS குழுமத்தின் பத்மாவதி சோஷியல் சர்வீஸ் மையம் கோயம்புத்தூரில் சூலூர் குமரன் கோட்டத்தில்  புதிய உணவகம் ஒன்றை திறந்துள்ளனர்.  அங்கு 30 ரூபாய்க்கு  ருசியான கூட்டு பொரியலுடன் சைவச் சாப்பாடு தருகிறார்கள்.

இன்று திறக்கப்பட்ட இந்த சேவை நோக்கத்திற்காக திறக்கப்பட்ட  உணவகத்தில் காலை , மதியம் , இரவு மூன்று வேளையும் இதேபோல மிகக்குறைவான விலையில் வெரைட்டியான சைவ உணவுகள் மிகத் தரமாகக் கிடைக்கின்றன.

நூற்றுக்கணக்கான பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து உண்ணக்கூடிய மிகப்பெரிய அறை , மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்படும் ஒட்டுமொத்த வளாகம், பெரிய கார் பார்க்கிங் வசதி , தூய்மையான கழிப்பறை வசதி , அடர்ந்த மரங்களடங்கிய குளுமையான, பசுமையான சூழல் என இந்த சேவை மையம் கம்பீரமாக நிற்கிறது .

இன்றைய மதிய உணவு சோறு , சாம்பார் ,புளிக்குழம்பு, ரசம் , பாயசம் , கூட்டு , பொரியல் , ஊறுகாய் , மோர் என மிகச்சுவையாக இருந்தது. காலை மாலை இடைப்பட்ட நேரங்களில் டீ, காஃபி, ஸ்நாக்ஸும் உண்டு.

ஏற்கெனவே 2007 இல் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு ரூபாய் கூட வாங்காமல் அன்னலட்சுமி உணவகத்தில் முழு சாப்பாடு வழங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் வருபவர்கள் அனைவரும் விருப்பம்போல ஏதாவது தொகை கொடுத்துத்தான் சாப்பிட்டோம் .

ஒருவேளை உணவவையாவது வயிறார உண்ண எத்தனையோ பேருக்கு அது உதவும் என்று பெரும்பாலும் அதிகமாகவே கொடுத்து வந்தோம் . கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் 20 ரூபாய்க்கு மதியசாப்பாடு இன்றும் கொடுத்துவரும் சாந்தி சோஷியல் சர்வீஸின் சேவையை இந்த நூற்றாண்டின் புரட்சி எனலாம் .

இப்பொழுது RVS PADMAVATHI SOCIAL SERVICE .

நல்லாராக உள இவர்பொருட்டு எல்லார்க்கும் மழை பெய்யட்டும், வளம் பெருகட்டும் , வாழ்வு செழிக்கட்டும் , மனிதம் தழைக்கட்டும்.

இதையும் படிங்க.!