chennireporters.com

ஆவடி போக்குவரத்து பணி மனையில் சாதிய பாகுபாடு திமுக நிர்வாகிக்கு எதிராக போராட்டம்.

ஆவடி போக்குவரத்து பணிமனையில் ஊழியர்களிடம் சாதிய பாகுபாடு நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக நிர்வகிக்கு எதிராக போராட்டம் நடத்தி தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். 

ராஜ்குமார்

ஆவடி போக்குவரத்து பணிமனையில் தொ.மு.ச. மத்திய இணைச் செயலாளராக  இருப்பவர் ராஜ்குமார். இவர் கடந்த 27 வருடங்களாக மெக்கானிக்காக  ஆவடி டெப்போவில் பணியாற்றி வருகிறார் . கடந்த ஆட்சியில் வாலை சுருட்டி கொண்டிருந்த ராஜ்குமார் தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் வாலாட்ட தொடங்கிவிட்டார் . அதாவது தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருவதாக தொழிலாளர்கள் இடையே  குற்றசாட்டு எழுந்துள்ளது. ஆவடி கிளை மேலாளராக யுவராஜ் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தான் மாற்றலாகி ஆவடி பணிமனைக்கு வந்தார். ராஜ்குமார் சொல்வதை தான் ஆவடி பணிமனையின் கிளை மேலாளர் யுவராஜ் கேட்டு நடக்கிறார். வந்த சில நாட்களில் 60 பேருக்கு  போஸ்டிங்கை மாற்றி உத்தரவிட்டார். இதுவரை எந்த  கிளை மேலாளரும் பதவிக்கு வந்தவுடன் இது போன்ற செயல்களில் செய்ததில்லை.  யுவராஜின் பேச்சைக் கேட்டுத்தான்  போஸ்டிங்கை மாத்தினார் என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் அதே தொமுசவில் அங்கம் வகிக்கும் சில ஊழியர்கள்.

          கிளை மேலாளர் யுவராஜ்

கடந்த அதிமுக ஆட்சியில் கிளை மேலாளர் யுவராஜ் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள டீசல் திருட்டில் சிக்கி மாட்டிக்கொண்டார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.  இந்த நிலையில் தொமுசவின் பொருளாளர் நடராஜன் என்பவர் எங்கள் கட்சியைச் சேர்ந்த சங்க நிர்வாகி ராஜ்குமார் சொல்வதைக் கேட்டு நீங்கள் பணியாற்ற வேண்டும் என்று மிரட்டி வைத்துள்ளார். இல்லை என்று சொன்னால் ஏற்கனவே உங்கள் மீது உள்ள டீசல் திருட்டு வழக்கை நாங்கள் தூசி தட்டி  உன்னை சிக்கி வைத்து வேலையில்லாமல் செய்து விடுவோம் என்று மிரட்டி வைத்ததாக கூறப்படுகிறது.அதன் அடிப்படையில் ராஜ்குமார் சொல்லும் வேலைகளை தட்டாமல் யுவராஜ் செய்து வருவதாக சொல்கிறார்கள் சக ஊழியர்கள். அதாவது ஒரு டிரைவர் அல்லது நடத்துனர் ஒரு ரூட்டில் பல வருடங்களாக பணியாற்றி வருபவர்களை திடீரென வேறு ஒரு  ரூட்டிற்கு மாற்றி  ராஜ்குமார் உத்தரவிடுகிறார். அதை  செய்யவில்லை என்றால் அவர்களுக்கு பணி வழங்கக் கூடாது என்று கிளை மேலாளர் யுவராஜுக்கு உத்தரவிடுகிறார். அவரும் அதையே பின்பற்றி வருகிறார். மேற்கண்ட வழித்தடத்தில் ஏற்கனவே பணியாற்றியவர்களுக்கு  ரூட் தர வேண்டும் என்றால் ராஜ்குமார் கேட்கும் பணத்தை கப்பமாக கட்டினால் அவர்களுக்கு அந்த வழித்தடத்தில் மீண்டும் பேருந்து இயக்க அனுமதி வழங்கப்படும்.ராஜ்குமார் சொல்லும் நபர்களுக்கும்  தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு இந்த வழித்தடத்தில் வண்டி இயக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதை பார்த்துக் கொள்ள கன்ட்ரோல் ரூமில் உள்ள ராஜ்குமாரின் புரோக்கர்களாக ரமேஷ் பாபு, கிருஷ்ணமூர்த்தி, ரவிச்சந்திரன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இதில் ரமேஷ் பாபு சில ஊழியர்களிடம் நாமெல்லாம் உசந்த சாதி நீ ஏன் அவர்களிடம் பேசுகிறீர்கள் அவர்கள் சாதி என்ன என்று உங்களுக்கு தெரியாதா என்று நாக்கில் வன்மம் வைத்து பேசி வருகிறாராம் ரமேஷ் பாபு. ராஜ்குமார் பட்டியல் சமுகத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்ற குற்றசாட்டை முன் வைக்கின்றனர் ஊழியர்கள். அது தவிர வார ஓய்வு நாளான விடுமுறையை சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு தெரியாமல் அதை வேறு ஒரு நாளுக்கு மாற்றி உத்திரவிடப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட நபர் ஒருவருக்கு திங்கள்கிழமை வாரமிடு விடுமுறை என்றால் அவருக்கு புதன்கிழமை மாற்றி உத்தரவிடப்படும் அவர் தனக்கு திங்கள்கிழமை வார விடுமுறை என்று வீட்டில் இருப்பார் ஆனால் அவர் அன்று பணிக்கு வரவில்லை என்று ஆப்சன்ட் போடுகிறார்கள் இதனால் பல ஊழியர்களின் சம்பளம் பாதிக்கப்பட்டுள்ளது.  இதுபோன்ற அராஜகமான வேலைகளை ஊழியர்களின் அனுமதியில்லாமல் ராஜ்குமார் தரப்பு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

         அருள் செல்வம்

அருள் செல்வம் என்ற ஓட்டுநர் தனக்கு காலை பணி வழங்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளை சந்தித்து உத்தரவு பெற்று வந்தார். ஆனால் அந்த உத்தரவை மதிக்காமல் அவருக்கு பணி வழங்காமல் ராஜகுமாரும் கிளை மேலாளர் யுவராஜும் காலம் தாழ்த்தி அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினர்.  இதனால் அருள் செல்வம் விருப்ப ஓய்வு பெற மனு கொடுத்துள்ளார். அந்த மனுவின் மீது கூட இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் அதிகாரிகள் சொல்லியும் ராஜ்குமார் யுவராஜ் கூட்டணி ஊழியர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள் என்கின்றனர் சில உடன் பிறப்புக்கள். இந்த நிலையில் ஆனந்தகுமார் என்கிற நடத்துனர் கடந்த ஒன்றரை வருடங்களாக விபத்து ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார் அவருக்கு கடந்த அதிமுக ஆட்சியிலேயே எளிமையான வேலை வழங்கப்பட்டு வந்தது. அதாவது சீசன் டிக்கெட் கொடுக்கும் பணி வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி வந்ததும்  ஆனந்த குமாருக்கு அந்த பணியை தொடர ராஜ்குமார் பணம் பெற்றுக் கொண்டு தான் அந்த வேலையை தந்தார் என்கிறார்கள்.

திமுக தொ.மு.ச நிர்வாகி ராஜ்குமாருக்கு எதிராக தனது சொந்த கட்சிகாரர்களே ஆர்பாட்டம் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது தவிற பதவி சண்டையில் அடித்துக்கொண்டு அசிங்கப்படுகிறார்கள் என்று எதிர்கட்சியினர் ஏளனம் செய்து வருகின்றனர்.

இது குறித்து நான் ராஜகுமாரிடம் கருத்து கேட்க முயன்றோம் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ராஜ்குமாரும் கிளை மேலாளர் யுவராஜும் அவர்கள் தரப்பு விளக்கத்தை தெரிவித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!