செங்குன்றம் அடுத்த பாடிய நல்லூர் பகுதியை சேர்ந்த செம்மர கடத்தல் வியாபாரி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார். இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திலகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் இவர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளராக செயல்பட்டு வந்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்து வந்தார். இவர் நேற்று காலை பாடியநல்லூர் அங்காள பரமேஸ்வரி கோயில் மைதானம் அருகே நடை பயிற்ச்சி ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட கும்பல் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பார்த்திபனை சரமாரியாக வெட்டி சாய்த்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினார்கள்.இதில் சம்பவ இடத்திலேயே பார்த்திபன் ரத்த வெள்ளத்தில் விழுந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தகவலறிந்ததும் போலீசார் சம்பவத்திற்கு சென்று பார்த்திபன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டாண்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெகநாதன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.இந்த விவரம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி காவல் இணை ஆணையர் விஜயகுமார் மற்றும் செங்குன்றம் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.
கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது மேலும் கொலை செய்யப்பட்ட அதிமுகவை சேர்ந்த பார்த்திபன் செம்மர கடத்தல் வழக்குகளில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன கொலைக்கான காரணம் என்ன என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பாடியநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான பார்த்திபன் கொலை செய்யப்பட்ட சம்பவம் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பார்த்திபன் மீது ஆந்திர மாநிலம் கடப்பா காவல் நிலையத்தில் பல புகார்கள் நிலுவையில் உள்ளன அது தவிர இவர் தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அதனால் விரோதம் ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். பைக்குகளில் வந்த கொலையாளிகள் அனைவரும் இளைஞர்களாக இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து உள்ளனர். அவர்கள் ஓட்டி வந்த பைக்குகளின் பதிவு எண்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.