கீழடி அகழாய்வை அமர்நாத் இராமகிருட்டிணனிடம் ஒப்படைக்கவேண்டும். தமிழக முதல்வருக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்.

August 11, 2022

By இரா. தேவேந்திரன்.

கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வுக்குச் சரியான இடத்தை தேர்வு செய்து நடத்தவில்லை என இந்தியத் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருட்டிணன் கூறியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

1924ஆம் ஆண்டு சிந்துவெளி நாகரிக அகழாய்வுக்குப் பிறகு இந்திய வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தினை கீழடி அகழாய்வு ஏற்படுத்தியது. இந்த அகழாய்வை மேற்கொண்ட அமர்நாத் இராமகிருட்டிணன் அவர்களே இவ்வாறு கூறியுள்ளதை தமிழக முதல்வர் தனது கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.

கீழடிப் பகுதியில் 110 ஏக்கரில் தொல்லியல் மேடு அமைந்துள்ளது. அதில் ஒரு சிறு பகுதியை மட்டுமே அமர்நாத் இராமகிருட்டிணன் குழுவினர் அகழாய்வு செய்து, தமிழரின் நாகரிகம் கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பதை கண்டறிந்தனர். எனவே அந்த 110 ஏக்கரிலும் தொடர்ந்து அகழாய்வு நடத்தப்பட்டால் மேலும் பல வரலாற்றுத் தொன்மையான தடயங்கள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

கீழடியில் முதன்முதல் அகழாய்வு செய்து தமிழரின் மிகத் தொன்மையான வரலாற்றுச் சுவடுகளை உலகிற்கு வெளிப்படுத்திய அமர்நாத் இராமகிருட்டிணன் அவர்கள் தற்போது ஒன்றிய அரசில் பணியாற்றுகிறார்.

அவரை தமிழகத் தொல்லாய்வுத் துறைக்கு அனுப்பும்படி ஒன்றிய அரசிடம் கேட்டுப்பெற்று கீழடி அகழாய்வில் அவரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என தமிழக முதல்வரை வேண்டிக்கொள்கிறேன்.

Share:

இரா. தேவேந்திரன்.

August 11, 2022

Leave a Comment