ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாநகராட்சியில் கணவனால் கைவிடப்பட்ட இளம் பெண் ஆஷா என்பவர் அரசு தேர்வில் படித்து வெற்றி பெற்று சப் கலெக்டராக பணியாற்ற இருக்கிறார் என்கிற செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அவருக்கு பல பேர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
ஜோத்பூர் மாநகராட்சியின் பெண் துப்புரவாளர் ஆஷா கந்தாரா சமீபத்தில் ராஜஸ்தான் நிர்வாகச் சேவை தேர்வில் தேர்ச்சி பெற்று அம்மாநில துணை கலெக்டராக பணியாற்ற இருக்கிறார்.
ஆஷா வயது 40. இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டவர். ஆஷாவின் திருமண வாழ்வில் சில வருடங்கள் நன்றாக சென்றது இந்நிலையில், இவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. இந்த நிலையில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவரின் கணவர் கைவிட இரண்டு குழந்தைகளுடன் போராட்டத்தை எதிர்கொள்ள தயாரானார் ஆஷா.
ஆஷாவின் தந்தை அரசுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணவன் கைவிட்ட நிலையில் தனது தந்தையுடன் வசித்து வந்தார் ஆஷா. அப்போது அவரின் தந்தை மீண்டும் படிப்பை தொடங்குமாறு ஆஷாவை அறிவுறுத்த அதன்படி, அவரும் பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார்.
கல்லூரி படிப்பை முடித்தவர் அரசுப்பணிக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார். 2018ம் ஆண்டு நடந்த ராஜஸ்தான் மாநில அரசுப்பணி தேர்வில் கலந்துகொண்டார்.இரண்டு கட்டங்களாக அந்த தேர்வில் கலந்துகொண்டிருக்கிறார். இந்தநிலையில் தான் கொரோனா தொற்றுநோய் ஏற்பட தேர்வு முடிவுகள் தாமதமாகி இருக்கிறது. அதேநேரம், தொற்றுநோய் அவரின் வருவாய் நிலையையும் கேள்விக்குறியாக்கியது. இதையடுத்து ஒரு தீர்க்கமான முடிவெடுத்த ஆஷா அவரின் தாயுடன் சேர்ந்து துப்பரவுப் பணி செய்ய முடிவெடுத்தார். அதன் படி ஜோத்பூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார் .
இந்தநிலையில் சில தினங்கள் முன் 2018ல் அவர் எழுதிய தேர்வின் முடிவுகள் வெளியாகியது. இதில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆஷா தற்போது துணை கலெக்டராக பணியாற்ற இருக்கிறார். முன்னதாக, சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராக திட்டமிட்டு இருந்துள்ளார் ஆஷா. ஆனால் அவரின் வயது வரம்பு அதிகமாக இருக்க, அந்த முடிவை விடுத்து மாநில அரசுத் தேர்வுகளில் கலந்துகொண்டுள்ளார். சிங்கிள் மதராகவும், தூய்மை பணியாளராகவும், நிறைய கேலி கிண்டல்களை சமூதாயத்தில் எதிர்கொண்டவர் ஆஷா.
தனக்கு நேர்ந்த விமர்சனங்களையும், கேலிகளையும் உந்துதலாக மாற்றி, அந்த விஷயங்கள் எதுவும் வெற்றிக்கு தடையல்ல என்பதை தற்போது நிரூபித்து இருக்கிறார். இந்த வெற்றிப்பயணம் தொடர்பாக ஆஷா பேசுகையில்,
“இது ஒரு கடினமான பயணம். இதில் நான் நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளேன். இப்போது நான் ஒரு நிலையில் இருப்பதாகக் கருதுகிறேன், அங்கு வறியவர்களுக்கும் அநீதிக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கும் ஏதாவது செய்ய விரும்புகிறேன்,” என்று கூறியுள்ளார்.
ஆஷா கணவனால் கைவிடப்பட்ட ஒரு இளம் பெண். பெண் சமூதாயத்திற்கு உத்வேகம் தான். ஆனால் ஆஷா அர்ப்பணிப்பு தன்மையுடனும் மற்றும் மன உறுதியுடன் பணிபுரிந்தால் எந்த சவாலையும் எளிதில் ஜெயித்து விடலாம். ஒரு பெண் நினைத்தால் உலகத்தில் எதையும் செய்து காட்டி வெற்றி பெற முடியும் என்பதற்கு ஆஷா ஒரு சாட்சி .