Chennai Reporters

அரசியல் நாகரீகம் தெரியாத அண்ணாமலை.

பாஜக தலைவர் அண்ணாமலையின் அநாகரிக மற்றும் அடாவடித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்! பத்திரிகையாளர்களின் சுயமரியாதையை பாதுகாப்போம்!

அனைத்து பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர் அமைப்புகள் மற்றும் பத்திரிகை நிறுவனங்களுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் அழைப்பு!

இங்கிலாந்துக்கு சென்றிருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று (28.06.23) இரவு சென்னை திரும்பிய நிலையில், சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மீண்டும் பத்திரிகையாளர்களிடம் அடிப்படை நாகரிகம் கூட இல்லாமல் மிகவும் கீழ்த்தரமாக அண்ணாமலை நடந்துகொண்டுள்ளார்.

“8 ஆம் வகுப்பு படித்தவன் போல்” நடந்துகொள்வதாகவும், “தெருவில் டீ குடிப்பவன் போல்” நடந்துகொள்வதாகவும் பத்திரிகையாளர்களை நோக்கி அண்ணாமலை பேசியுள்ளார். தெருவில் டீ குடிப்பதும், 8 ஆம் வகுப்பே படித்திருப்பதும் சமூகத்தில் அவமானகரமான செயல் என்பதைப்போல் அண்ணாமலை தெரிவித்துள்ள இந்த கருத்து, எளிய உழைக்கும் மக்கள் குறித்து அவர் எத்தகைய சிந்தனையை கொண்டுள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

3 ஆம் வகுப்பே படித்தவரையும், பள்ளிப்படிப்பையே தாண்டாதவர்களையும் தமிழ்நாட்டு மக்கள் முதலமைச்சராக்கி அழகுபார்த்துள்ளனர். மெத்தப் படித்த மேதாவிகள் கூட செய்ய முடியாத பல செயற்கரிய செயல்களை அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்காக செய்துள்ளனர் என்பதை கொஞ்சமாவது அரசியல் அறிவுள்ள நபராக இருந்தால் அண்ணாமலைக்கு புரிந்திருக்கும்.

அடுத்ததாக, ரோட்டில் நின்று டீ குடிப்பதை ஒரு கேவலமான செயல் என்பதுபோல பேசியுள்ள அண்ணாமலை, தெருவில் டீ விற்றவர்தான் இன்று இந்தியாவின் பிரதமராக உள்ளார் என்பதை அறியாமலா உள்ளார்? அதை தெரிந்துகொண்டும் இப்படி பேசியிருப்பது அவர் கட்சியை சேர்ந்த பிரதமர் குறித்து அவர் எப்படிப்பட்ட எண்ணத்தைக் கொண்டுள்ளார் என்பதும் இன்று வெளிப்படையாக தெரிந்துள்ளது.

கேள்வி கேட்பது பத்திரிகையாளர்களின் கடமை என்பதைப்போல், அந்த கேள்விக்கு பதில் சொல்ல திராணி இல்லையென்றால், அதற்கு பதில் சொல்லாமல் கடந்து செல்வதும், பதில் சொல்ல விருப்பம் இல்லை என்று கூறுவதும் அவரவர் உரிமை. அதை விடுத்து, என்னைப் பார்த்து நீ எப்படி கேள்வி கேட்கலாம் என்று பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவதும், அப்படி பேசுவதற்கு ஆதரவாக அங்குள்ள தொண்டர்கள் கை தட்டுவதும் அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறை மட்டுமல்லாமல் மனிதஉரிமை மீறலும் ஆகும்.

அண்ணாமலை இதுபோல் பத்திரிகையாளர்களிடம் கீழ்த்தரமாக நடந்துகொள்வது இது முதல்முறையல்ல. ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் இதுபோல் அவர் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக நடத்தியது மற்றும் அச்சுறுத்தல் விடுத்ததற்கு எதிராக இந்திய பிரஸ் கவுன்சிலில் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் புகார் அளித்துள்ளது. இந்த புகார் மீது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர் மீண்டும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துள்ளதை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் பிரஸ் கவுன்சிலின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும்.

இந்நிலையில், கேள்வி எழுப்பிய பத்திரிகையாளருக்கு தந்தி டிவி நிர்வாகம் நெருக்கடி கொடுப்பதாக தகவல் தெரிகிறது. அது உண்மை என்றால், காமராஜர் உட்பட, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்திய அண்ணாமலையின் கருத்தை தந்தி தொலைக்காட்சியும் ஆதரிப்பது போல் ஆகிவிடும். அண்ணாமலையின் மிரட்டலுக்கு பாரம்பரியம் மிக்க தந்தி நிறுவனம் பணிந்ததாகிவிடும். அத்துடன், தன் பணியைச் செய்த பத்திரகையாளரை வேலையை விட்டு நீக்குவதோ அல்லது பிற தண்டனையை கொடுப்பதோ தொழிலாளர் நலச் சட்டங்களுக்குப் புறம்பானது என்பதையும் இந்த இடத்தில் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

பத்திரிகையாளர்களிடம் மீண்டும், மீண்டும் தரக்குறைவாக நடந்துகொள்ளும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. அண்ணாமலையின் இந்த அடாவடி செயலால் எந்த ஒரு பத்திரிகையாளரும் பாதிக்கப்பட்டால், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் அவர்களுக்கு நீதி கிடைக்கும்வரை துணை நிற்கும் என்றும் உறுதியளிக்கிறது.

கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையிலும், பத்திரிகையாளர்களை, பத்திரிகை ஆசிரியர்களை மற்றும் பத்திரிகை நிறுவனங்களை அச்சுறுத்தும் வகையிலும் தொடர்ந்து நடந்து வரும் அண்ணாமலைக்கு அனைத்து பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர் அமைப்புகள், பத்திரிகை நிறுவனங்கள் ஒன்றிணைந்து பாடம் புகட்ட வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

ஜனநாயகத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும், தமிழ்நாட்டின் அரசியல் பாரம்பரியத்தையும், நாகரிகத்தையும் பாதுகாக்கும் வகையில், அண்ணாமலையின் இந்த அநாகரிக நடவடிக்கையை அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக அமைப்புகளும் கண்டிக்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் அழைப்பு விடுக்கிறது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!