பிரபல தாதாக்களுக்கு சல்யூட் அடித்து விட்டு சுல்லான்களை சுட்டுத் தள்ளும் காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் மீது கடும் விமர்சனங்கள் வைக்கின்றனர் பொதுமக்கள். இரண்டு தினங்களுக்கு முன்பு விஷ்வா என்கிற விசுவநாதன் என்கிற ரவுடியை போலீசார் திட்டமிட்டு வேனில் வைத்து மார்பில் சுட்டு கொலை செய்தனர். அது தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றனர் விஷ்வாவின் உறவினர்கள். என்ன நடந்தது என்று விரிவாக பார்போம். கடந்த 16-ம்தேதி மதியம் ரவுடி விஷ்வா மப்பேடு அருகே உள்ள திருப்பந்தியூர் கிராமத்தில் ஐடியல் பார்ம்லேண்டில் பதுங்கி இருந்த போது போலீசார் இடையே நடந்த தாக்குதலில் ரவுடி விஷ்வா சுட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ரவுடி விஷ்வா மீது ஐந்து கொலை மற்றும் கொலை முயற்சி என மொத்தம் 24 வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஒரு வழக்கு தொடர்பாக கடந்த மாதம் சில தினங்கள் திருப்பெரும்புதூர் காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் கையெழுத்து போட்டு வந்துள்ளார்.அப்போது கடந்த 28ஆம் தேதி அதாவது ( 28.8.2023 ) அன்று காவல் நிலையத்திற்கு கையெழுத்து போடச் சென்ற விஸ்வா நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டுள்ளார். அவரை உட்கார விடாமல் இரண்டரை மணி நேரம் நிற்க வைத்துள்ளனர். நீண்ட நேரமானதால் விஷ்வா தரப்பு வழக்கறிஞர்கள் போலிசாரிடம் கையெழுத்து போட ஏன் காலதாமதம் செய்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.
அப்போது இன்ஸ்பெக்டர் பரந்தாமனிடம் பேசிய சப் இன்ஸ்பெக்டர் தயாளன் விஸ்வாவை சுட்டு கொன்று விடுகிறேன் என்று சொல்லி உள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இது குறித்து அப்போதே ரவுடி விஷ்வா உள்துறை செயலாளர், காஞ்சிபுரம் எஸ்பி மற்றும் திருப்பெரும்புதூர் டிஎஸ்பி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு ஆகியோர்களுக்கு விஷ்வா கடிதம் எழுதி இருக்கிறார் .அந்த கடிதத்தில் தன்னை போலீசார் என்கவுண்டரில் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அப்படி நான் கொல்லப்பட்டால் அதற்கு இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் தயாளனே பொறுப்பு என ஒரு மாதத்திற்கு முன்பே புகார் அனுப்பி இருக்கிறார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் சொன்னதைப் போலவே போலீசார் திட்டமிட்டு கடந்த 16ஆம் தேதி சனிக்கிழமை மாலை போலீசார் அவரை சுட்டு கொலை செய்துள்ளனர் . போலீசார் விஸ்வா சுட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை விரிவாக குறிப்பிடவில்லை. இந்த என்கவுண்டர் விவகாரத்தில் காஞ்சிபுரம் எஸ் பி சுதாகர் அவர்களுக்கு சொல்லாமலேயே உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் என் கவுன்டர் நடை பெற்றதாக விசுவா தரப்பு உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.அது தவிர போலீசார் என்கவுண்டர் செய்யும் போது மார்பில் தான் சுட வேண்டும் என்று போலீஸ் உத்தரவு ஏதாவது இருக்கிறதா ? கை மற்றும் காலில் சுடாமல் மார்பில் சுட்டதற்கான காரணம் என்ன? என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறார்கள் விசுவா தரப்பு உறவினர்கள்.விஷ்வா போலிசாரை வெட்ட முயன்றபோது காவலர்கள் வாசுவையும் ராஜேஷையும் தலையில் வெட்டாமல் ஏன் லேசாக வலது கையை வெட்டினார். இந்த என் கவுண்டரில் பல சந்தேகங்களும் பல முக்கிய செய்திகளும் மறைக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக விரைவில் சட்ட ரீதியாக நாங்கள் இந்த போலி என்கவுண்டர் விஷயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வோம் என்கின்றனர் அவரது உறவினர்கள். இந்த என்கவுண்டர் கொலை தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகரிடம் நடந்த விவரம் தொடர்பாகவும் ரவுடி விஸ்வாவின் உறவினர்கள் எழுப்பிய சந்தேகத்தை நாம் அவருக்கு கேள்விகளாக வாட்ஸ் அப்பில் அனுப்பி அவரது கருத்தை அறிய முயன்றோம்.
அவர் நாம் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை எனவே இந்த என்கவுண்டரில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது என்பதை தெளிவாகிறது. என்கவுண்டர் தொடர்பாக போலீஸ் தரப்பில் விளக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.