பட்டா மாற்றம் செய்து தரக்கூடிய மனுவை ஆறு மாதங்களாக பரிசிலிக்காத திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜன். இவர் தனது விவசாய நிலத்தை பட்டா மாற்றம் செய்து தரக் கோரி கடந்த மே மாதம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கு கோரிக்கை மனு அளித்திருந்தார். தனது மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவிந்தராஜன் வழக்கு தொடர்ந்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் T.பிரபுசங்கர்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் பட்டா மாற்றம் செய்யக்கோரிய மனுவை ஆறு மாதங்களாக பரிசிலிக்காததை சுட்டிக்காட்டி இரண்டு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் வருவாய்த் துறையில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மனுக்கள் மேல்முறையீடு மனுக்கள் மறு ஆய்வு மனுக்கள் மீது உரிய காலத்தில் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதன் அடிப்படையில் நில நிர்வாக ஆணையர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு இருந்தார். அந்த சுற்றறிக்கையை வருவாய்த்துறையினர் முறையாக பின்பற்றவில்லை என நீதிபதி தனது கண்டனத்தை பதிவு செய்தார். இந்த வழக்கில் மனுதாரரின் மனு மீது குறித்த காலத்தில் நடவடிக்கை எடுக்காத போக்கு ஒரு மெத்தன போக்கு என்றும் நீதிபதி தனது கண்டனத்தில் பதிவு செய்துள்ளார்.
மனு மீது குறித்த காலத்தில் நடவடிக்கை எடுக்காத திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கு எதிராக இரண்டு மாத காலத்திற்குள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு நீதிபதி மேல்முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை வரும் ஜனவரி மாதம் 30ஆம் தேதி நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியருக்கும் திருவள்ளூர் வட்டாட்சியருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது வருவாய்த்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கும்மிடிப்பூண்டி, பொன்னேரி போன்ற இடங்களில் இது போன்ற பல்வேறு புகார்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இன்னும் நிலுவையில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.