chennireporters.com

அவ்வை நடராசன் மரணம். அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் முதல்வர் உத்தரவு.

“தமிழுக்கு அமுதென்று பேர்” என்றாலே அவ்வை திரு. நடராசன் நினைவில் வருவார். தமிழின் மேன்மையை தாங்கிப் பிடித்தவர்களில் முதல் வரிசையில் நினைவு கூறத் தக்கவர்.

திரு. நடராசன். பட்டிமன்றத்தின் பிதாமகன் எனுமளவில் அது பொழுதுபோக்கு அம்சத்தில் சேராமல் அறிவைப் பகிரும் அளவில் மேம்பட்டிருக்க வழி வகுத்தவர் அவர். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

கடந்த 2003 -ஆம் ஆண்டில் ‘இதயக்கனி’ நடத்திய எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் ஆர். எம். வீரப்பன், எஸ். ஜெகத்ரட்சகன், நடிகர்கள் சிவகுமார், சத்யராஜ்,
டி. ராஜேந்தர் (முதல் எம்.ஜி.ஆர். மேடை), ராஜேஷ், ஆர். பாண்டியராஜன், எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் எம்.ஜி.சி. சுகுமார், டாக்டர் எஸ் .எம். பாலாஜி (இலவச பல் மருத்துவ முகாம் நடத்தியவர்), கமலா திரையரங்கு அதிபர் வி.என்.சிதம்பரம் இவர்களுடன்,
அவ்வை நடராசன் அவர்களும் பங்கேற்று எம்‌‌.ஜி.ஆரின் சிறப்பியல்புகளைப் பற்றி, அவரது ஆட்சியில் பணிபுரிந்த அனுபவங்களை குறிப்பிட்டார்.

திரு. அவ்வை நடராசன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணிபுரிந்த சமயம் (1992 என்று நினைவு), ‘தேவி’ வார இதழில் பல்கலைக்கழகம் பற்றி எழுதுவதற்காக தஞ்சை சென்றேன்.

தஞ்சையில் விடுதியொன்றில் தங்கிய நான், துணை வேந்தர் அவ்வை நடராசன் அவர்களைச் சந்தித்த போது, நான் தங்கியிருக்கும் விவரங்கள் கேட்டறிந்தார். “எனது (துணை வேந்தருக்கானது) மாளிகையிலேயே தங்கிக் கொள்ளுங்களேன்” என்று அழைத்து தங்கும்படி செய்தார்.

மறுநாள் காலை அவரோடு சிற்றுண்டி அருந்தி, அவருடன் தமிழ் பல்கலைக்கழகத்திற்கு காரிலேயே சென்றேன். அங்கு அவருடன் இரண்டு மணி நேர நேர்காணல் முடிந்த பின், பல்கலைக் கழகம் முழுவதும் சுற்றிப் பார்க்கச் செய்தார்.

அந்த வகையில் எம்.ஜி.ஆர்., ஆட்சி கால அற்புதங்களை அறிய முடிந்தது. ஜெயலலிதா ஆட்சியிலும் திரு. நடராசன் துணை வேந்தராக இருந்தபோது பல்கலைக்கழகம் சிறப்புடன் செயல்படச் செய்தார்.

நேற்று (21.11.22) இயற்கை எய்திய தமிழ் பெருமகன் நடராசன் அவர்களுடன் பழகிப் பேசிய தருணங்கள் நினைவில் நிலைத்திருப்பவை.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழக அமைச்சர்கள், எம்பி ஜெகத்ரட்சகன், கவிஞர் வைரமுத்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் பலர் அவை நடராசன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க.!