chennireporters.com

#Karate பள்ளி மாணவர்களை மெய் சிலிர்க்க வைத்த நீதிபதியின் பேச்சு. அதிர்ந்த அரங்கம்.

கோவையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில்  கலந்து கொண்டு பேசிய  நீதிபதி  “மனிதர்களின் உண்மையான வாழுமிடம் அவர்களது உடம்பு தான்”!   என்று நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேசினார்.மேனாள் மாவட்ட நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் 

கோவை பெர்க்ஸ் பள்ளி வளாகத்தில் உள்ள பெர்க்ஸ் ஸபோர்ட்ஸ் அகாடமி வளாகத்தில்அட்வென்சர் அகாடமி ஆஃப் மார்சியல் ஆர்ட்ஸ் அமைப்பின் சார்பில் கராத்தே சம்மிட் சாம்பியன்சிப் 2024 என்ற தலைப்பில் மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான கராத்தே போட்டிகள் 28.01.2024 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

 

இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சி காலை 9.00 மணிக்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அட்வென்சர் அகாடமி ஆஃப் மார்சியல் ஆர்ட்ஸ் அமைப்பின் தலைவர் டி. அறிவழகன் தலைமை தாங்கினார். ஆர். ராஜேஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில கராத்தே சங்கத்தின் தலைவர் எஸ். சாய் புரூஸ் கலந்து கொண்டார். மேனாள் மாவட்ட நீதிபதியும், தமிழ்நாடு அரசின் மாநில சட்ட ஆட்சி மொழிகள் ஆணையத்தின் உறுப்பினருமான அ. முகமது ஜியாவுதீன்,
முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து போட்டிகளை தொடங்கி வைத்து, பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது மனிதர்களின் உண்மையான வாழும் இடம் அவர்களது உடம்பு தான் என்று கூறினார்.
மேலும் அவர் பேசியதாவது:-

பணம் சம்பாதிக்கும் ஆசையாலோ, அல்லது வேலைப்பளுவின் காரணமாகவோ உடல் நலத்தை பாதுகாப்பதில் இருந்து நாம் தவறி வருகிறோம். நுகர்வு கலாச்சாரம் நுகர்வு வெளியாக மாறி எல்லாவற்றையும் வாங்கி அனுபவிக்க வேண்டும் என்கிற வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறோம். இறுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கு பிறகுதான் உண்மையாக நாம் இழந்தது எவ்வளவு என்று தெரிய வருகிறது.ஒரு மனிதனுக்கு ஊட்டியில் எஸ்டேட், கொடைக்கானலில் பங்களா, சென்னை இசிஆர் ரோட்டில் ஃபார்ம் ஹவுஸ் என்று பல இடங்களிலும் சொத்துகள் இருக்கலாம். ஆனால் உண்மையில் அவன் வசிக்கிற இடம் அவன் உடம்பு மட்டும் தான்.உடல் நலம் இல்லாமல் போனால் வாழ்வில் அர்த்தம் இல்லாமல் போய்விடும். எனவே, உடல் ஆரோக்கியமாக பாதுகாத்துக் கொள்கிற அக்கறை ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.முதலில் “காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா”என்று உடம்பைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள். ஆனால், திருமூலரோ “உடலைப் பாதுகாக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

“உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே’
என்றும்,

“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே…’

என்றும் பாடி உடல் நலம் பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தி உள்ளார். அதே போல உடலைப் பாதுகாத்தலே உயிரைப் பாதுகாக்கும் வழி என்று திரு அருட்பிரகாச வள்ளலார் அவர்கள்.

“உயிருறும் உடலையும், உடலுறும் உயிரையும்
அயர்வறக் காத்தருள் அருட்பெரும் ஜோதி…’
என்று வேண்டுவதன் மூலம் நமக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கே 500 க்கு மேல் மாணவர்கள் கராத்தே பயிற்சிக்காகவும் போட்டியில் பங்கேற்கவும் வந்திருக்கிறார்கள் என்பதும்; மாணவர்களின் பெற்றோர்கள் அவர்களை அழைத்து வந்திருக்கிறீர்கள் என்பதும் உடல் நலத்தில் உங்களுக்கு இருக்கிற ஆர்வமும் மகிழ்ச்சி தருகிறது. உடல் உறுதி மிக்க இளைய சமுதாயம் நம் நாட்டில் எதிர்காலத்தில் உண்டாகும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது. அதிக எண்ணிக்கையில் பெண் குழந்தைகளும், அரசு பள்ளி மாணவர்களும் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கோவையில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி வழங்குகிற ஒரு முயற்சியை நீங்கள் முன்னெடுக்க வேண்டும். அதன் மூலம் ஆரோக்கியமிக்க ஒரு இளைய சமுதாயம் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இன்றி எல்லோருக்கும் அமையும்.கராத்தே, டேக்வாண்டோ, சிலம்பம் போன்றவை வெறுமர விளையாட்டு மட்டுமின்றி ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், சுய கட்டுப்பாட்டை வளர்க்கவும், கூடிய தற்காப்புக் கலையாகும்.போட்டிகளில் கலந்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும்,
அழைத்து வந்த பெற்றோர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு, தமிழ்நாடு கராத்தே விளையாட்டு பயிற்சி அமைப்பின் தலைவராகவும் அகில இந்திய தலைவராகவும் விளங்குகிற நண்பர் சாய்புரூஸ் அட்வென்சர் அகாடமி ஆஃப் மார்சியல் ஆர்ட்ஸ் அமைப்பின் தலைவர் அறிவழகன், மற்றும் பயிற்சியளிக்கும் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.

 

இதையும் படிங்க.!