chennireporters.com

அரசு மருத்துவ மனையில் திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. திடீர் ஆய்வு.

jayakumar.MP
எம்.பி. ஜெயகுமார்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு பொது மருத்துவ மனையில் திருவள்ளூர் காங்கிரஸ் கட்சி எம்.பி. ஜெயக்குமார் ஆய்வு நடத்தினார்.இந்த மருத்துவ மனையில் உரிய வசதிகள் இல்லை என்று எம்.பி ஜெயக்குமாருக்கு பொதுமக்கள் பலர் புகார் அளித்தனர்.

அதனை தொடர்ந்து, எம்.பி ஜெயக்குமார், மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜனுடன் கும்மிடிப்பூண்டி அரசு பொதுமருத்துவமனையில், திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பகுதி, உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பகுதி, மகப்பேறு பகுதி, ஆய்வகம் போன்றவற்றை ஆய்வு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் , மருத்துவமனையில் பொது மக்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்ய உரிய நபர் பணியில் இருக்க வேண்டும் என்றும், கொரோனா பரிசோதனை செய்ய வரும் மக்களை காக்க வைக்க கூடாது, அவர்களிடம் கடுமையாக நடக்க கூடாது என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறைபாடுகள் குறித்தும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 40 படுக்கை வசதி மருத்துவமனையில் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார்.மேலும், ஆய்வின் போது பொதுமக்கள் இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதில்லை என்றும், மருத்துவமனையில் பகல் நேரத்தில் எக்ஸ்ரே உள்ளிட்ட சோதனைகள் செய்ய உரிய நபர்கள் இருப்பதில்லை என குற்றம் சாட்டினர்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி ஜெயக்குமார் திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து அரசுமருத்துவமனைகளில் 630 படுக்கை வசதிகள் உள்ளது.பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் உரிய பராமரிப்பு இல்லாத நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய சிகிச்சையை மாவட்ட நிர்வாகம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க.!