chennireporters.com

ஓ.பிஎஸ், இ.பிஎஸ். இருவருக்கும் செக் வைத்த வருமான வரித்துறை.

திமுக அரசு பதவியேற்றதும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.

2016ம் ஆண்டு சேகர் ரெட்டியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்க்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள் 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஓபிஎஸ், ஈபிஎஸ், ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர், வைத்தியலிங்கம்,ரமணா, தங்கமணி, செல்லூர் ராஜு, எம்.சி.சம்பத் தற்போதைய (திமுக) அமைச்சர் செந்தில் பாலாஜி, உள்ளிட்டவர்களும் அது தவிர முன்னாள் அதிமுக சபாநாயகர் தனபால் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ பாப்பா சுந்தரம் புதிய தமிழகம் எம்எல்ஏ கிருஷ்ணசாமி          முன்னாள் எம்எல்ஏ கருணாஸ் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணம் செல்லாது என்று மோடி அறிவித்தபோது சட்டவிரோதமாக புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பதுக்கியதாகவும் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் சேகர் ரெட்டி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்தது.

சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டபோது வீடு மற்றும் அலுவலகங்களில் ரூபாய் 166 கோடி பணமும் 179 கிலோ தங்கம் உட்பட ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

9 கோடி ரூபாய்க்கும் அதிகமான புதிய 2,000 ரூபாய் நோட்டுகளும் அதில் கைப்பற்றப்பட்டன.

இவருக்கு நெருக்கமாக இருந்த தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீட்டிலும் தலைமைச் செயலகத்திலும் அப்போது சிபிஐ சோதனை செய்தது.

தமிழ்நாடு தலைமை செயலகத்தில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது தமிழக அரசின் தலைவர்களுக்கும் அமைச்சர்களுக்கும் சேகர் ரெட்டி நெருக்கமாக இருந்ததாக புகார் கூறப்பட்டது.இந்த நிலையில் இவருக்கு எதிரான புகாரை சிபிஐ விசாரித்து வந்தது.

இவருக்கு எதிராக பதியப்பட்ட சிபிஐ அமைப்பின் 3 வழக்குகளில் இரண்டு வழக்குகள் ரத்து செய்யப்பட்டது.

சமீபத்தில் இன்னொரு வழக்கில் முறைகேடுக்காண எந்த ஆதாரங்களும் இல்லை என்று கூறி சிபிஐ வழக்கை முடித்து வைத்தது.

இந்த நிலையில் சேகர் ரெட்டி முறைகேடு தொடர்பாக எழுப்பப்பட்ட புகார்கள் முடித்து வைக்கப் பட்டாலும், அதிமுகவிற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது‌.

சேகர் ரெட்டி வீட்டில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.அதில் சிவப்பு நிற டைரி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.அதில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,
ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரின் பெயர்களும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

பணம் பரிமாற்றம் செய்யப்பட்டபோது இவர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது.இந்த டைரியில் யாருக்கெல்லாம் சேகர் ரெட்டி பணம் கொடுத்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சேகர்ரெட்டிக்கு நெருக்கமானவர்களாக அதிமுகவில் பல தலைவர்கள் இருந்தனர்.இதைத்தான் தற்போது வருமான வரித்துறை கையில் எடுத்துள்ளது.

சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோருக்கு வருமான வரித்துறை வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அது தவிர 13 முன்னாள் அமைச்சர்களும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த டைரியில் இவர்களின் பெயர் இருந்த காரணத்தால் தற்போது அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப பட்டுள்ளது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விரைவில் வருமானவரித்துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆஜராகி தங்களது விளக்கத்தை அளிப்பார்கள் என்று தெரிகிறது.

இதையும் படிங்க.!