சேரியில் ஒருநாள் வந்து தங்கிப்பார் என்று குஷ்புவுக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் துனைப்பொதுச்செயலாளர் வன்னியரசு சவால் விட்டு அழைப்பு விடுத்திருக்கிறார்.

நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக  பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக முன்னாள் நிர்வாகியான காயத்ரி ரகுராம் ஏற்கனவே எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் திரைப்படை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடிகை குஷ்பு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க எனவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  துனைப்பொதுச்செயலாளர் வன்னி அரசும் நடிகை குஷ்புவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடிகை திரிஷா குறித்து பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு  தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜக  நிர்வாகியுமான குஷ்பு  கண்டனம் தெரிவித்தார். மேலும் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இதனை பார்த்த திமுக நிர்வாகி ஒருவர், மணிப்பூர் விவாகரம் குறித்து எதையும் பேசாமல் இருந்த குஷ்பு திரிஷா பிரச்சினைக்கு மட்டும் பேசுகிறார் என தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பதிவிட்டிருந்தார்.அதற்கு குஷ்பு, திமுகவினர் தான் இதை செய்கிறார்கள். பெண்களை இப்படி தான் அவமதிக்க தவறான மொழியை பயன்படுத்துகிறார்கள். உங்களைப் போல் சேரி மொழியில் என்னால் பேச முடியாது என்று பதிலளித்தார்.  குஷ்புவின் இந்த பதிவு பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது.

Mansoor Ali Khan skips police summons over derogatory remarks against Trisha.திரைப்பட  இயக்குநரான பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடிகை குஷ்புவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நீலம் பண்பாட்டு மையம் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், “குஷ்புவின் ‘சேரி மொழி’ என்ற சொல்லை வன்மையாகக் கண்டிக்கிறோம். குஷ்பு  பதிலளித்ததில், பெண்களை இழிவுபடுத்தும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதை ‘சேரி மொழி’ என்று முத்திரை குத்தியுள்ளார். சேரி என்பது தலித்துகளுக்கான தமிழ் வார்த்தை.

சேரி என்பது சாதி, பாலினம் மற்றும் பிற ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தலித் பெண்களின் தலைமுறைகளுக்கு இடையேயான எதிர்ப்பைக் கண்ட இடம். அவதூறு மற்றும் அவமரியாதையைக் குறிக்க இந்த வார்த்தையின் ‘பேச்சு வழக்கில்’ சாதாரணமாக்குவது ஒரு சமூகத்தின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையை புறக்கணிப்பதாகும். இது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. குஷ்பு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  வன்னி அரசு வெளியிட்டுள்ள பதிவில்  “சேரி என்றால் சேர்ந்து வாழும் இடம். காடும்,காடும் சார்ந்த முல்லை திணைக்களத்தில் வாழ்ந்த நிலப்பகுதியே சேரி என அழைக்கப்பட்டது. தொல்குடிகள் வசிக்கும் பகுதி பறச்சேரி எனவும் அழைக்கப்பட்டது. பின்னாளில் அந்தந்த சாதிப்பெயரிலேயே சேரி அழைக்கப்பட்டது.

இன்றைக்கும் பல கிராமங்களுக்குப்பெயரில் சேரி தொக்கி நிற்கும். பார்ப்பனச்சேரி கூட இருந்துள்ளது. இவையெல்லாம் குடியிறுப்புகளுக்கு பெயர் தான். நாகரிகங்களின் தொட்டிலே பறச்சேரிகள் தான். இன்றைக்கும் தமிழர் நாகரிகம் மிச்சமிருப்பது சேரிகளில் தான்.

கீழே யாராவது விழுந்து கிடந்தால், அவர்களை ஓடோடி போய் காப்பாற்றும் மனிதநேயம் சேரிகளில் தான் இன்றைக்கும் இருக்கிறது. நக்சலைட்களுக்கு அடைக்கலம் கொடுத்ததும் சேரிகள் தான். இன்றைக்கும் ‘சோறு”கஞ்சி’ என பழஞ்சொற்கள் மிச்சமிருப்பதும் சேரிகளில் தான்.

கூட்டுக்குடித்தனம் கொண்டு கூட்டாஞ்சோறு உண்டு வாழ்வதும் சேரிகளில் தான். கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய ஆதி தமிழ்க்குடி பேசிய தமிழும் மிச்சமிருப்பது சேரிகளில் தான். நீங்கள் (குஷ்பு) ஒரே ஒரு நாள் சேரிகளில் வந்து தங்கி பாருங்கள். உங்களுக்கு மானுட நாகரிகத்தை சேரிகள் கற்றுக்கொடுக்கும்” என காட்டமாக பதிவிட்டுள்ளார் வன்னி அரசு.