chennireporters.com

ஐஏஎஸ் அதிகாரியின் அம்மாவுக்காக நீதிமன்ற உத்தரவை மீறிய ஆர்.டி.ஓ

திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு ஒன்றியத்தை சேர்ந்த பகுதி தொழுதாவூர். இந்த கிராமத்தில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளில்  ஐஏஎஸ் அதிகாரி அபூர்வாவின் அம்மா வீட்டை அதிகாரிகள் இடிக்காமல் சென்றதால் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் திமுக ஊராட்சி மன்றத் தலைவர் வீடு, ரேஷன் கடை, ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம இ-சேவை மைய கட்டிடம் உள்ளிட்டவற்றையும் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தள்ளியதால் பொதுமக்கள் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது தொழுதாவூர் ஊராட்சி. இப்பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளிக்கு எதிரே வெள்ளை குட்டை ஒன்று உள்ளது. இந்த வெள்ளை குட்டையின் பரப்பளவு ஆறு ஏக்கர் ஆகும்.

இந்த குட்டை அருகே உள்ள இடத்தை அதே கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வி, அருணோதயா, அருள்முருகன், உட்பட 7 பேர் குட்டையை ஆக்கிரமித்து 8 வீடுகள் ஒரு கடை உட்பட 9 கட்டிடங்களை கட்டி உள்ளனர்.

அதனை அகற்றக் கோரி  அதே கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்‌. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் உடனடியகாக ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்தாண்டு செப்டம்பர் மற்றும் டிசம்பரில் திருத்தணி  வருவாய்த்துறையினர் இரு முறை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீர்நிலையில் குடியிருந்தவர்களுக்கு நோட்டீஸ் அளித்தனர்.

ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் அருள்முருகன், ஷம்ஷத் பேகம்  உட்பட நான்கு பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். குடியிருப்பு பகுதி நீர்நிலையாக இருப்பதாக கூறி கடந்த ஏப்ரல் மாதம் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து இன்று திருத்தணி ஆர்.டி.ஓ. அசரத்பேகம், தாசில்தார் வெண்ணிலா ஆகியோர் தலைமையில் வருவாய் துறையினர் 3 ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றினர்.

நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளில்  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறையின் முதன்மை செயலாளர் அபூர்வா  ஐஏஎஸ்  அவர்களின் தாயார் வீடும் உள்ளது.  தொழுதாவூர் திமுக ஊராட்சி மன்றத் தலைவர் அருள் முருகன் வீடு, ரேஷன் கடை, ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம இ-சேவை மைய கட்டிடம் உள்ளிட்டவற்றையும் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தள்ளினர்.

இந்நிலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி அபூர்வாவின் தாயார் கட்டியுள்ள இரண்டு வீட்டில் ஒரு வீட்டை மட்டும்  லேசாக இடித்து விட்டு மற்றொரு வீட்டை அதிகாரிகள் இடிக்காமல் சென்றதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அபூர்வா ஐஏஎஸ் அதிகாரியின் அம்மா வீடு என்பதால் திருத்தணி ஆர்டிஓ அசரத் பேகம் அபூர்வா ஐஏஎஸ் அதிகாரியின் அம்மா வீட்டை மட்டும் இடிக்காமல் சென்று விட்டனர்.

ஐஏஎஸ் அதிகாரியின் அம்மா என்பதால் நீதிமன்ற உத்தரவை முழுமையாக அமல்படுத்தாமல் இருக்கலாமா என்று கேள்வி எழுப்பினர் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள்.

பொதுமக்களின் வீடுகளை மட்டும் இடித்து தரைமட்டம் ஆக்கியதால் கிராம மக்கள் தங்க இடமின்றி தவித்து வருவதால் மாற்று இடம் வழங்க கோரி தொழுதாவூரில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல் துறையினர் அவர்களை மீட்டு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல ஆண்டுகளாக வீடு கட்டி வாழ்ந்து வரும் நிலையில் திடீரென வீட்டை இடித்து தள்ளியதால் தங்குவதற்கு வழியின்றி தவிப்பதால் மாற்று இடம் வழங்கும் வரை செல்லமாட்டோம் என பொதுமக்கள் கூறிவருகின்றனர்.

அதிகாரிகள் வந்தார்கள் , இடித்தார்கள்,  சென்றார்கள்.  பொதுமக்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர்.

இதையும் படிங்க.!