chennireporters.com

ஐஜி முருகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு ஒப்புதல்.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை – ஐ.ஜி. முருகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு ஒப்புதல்;  தமிழக காவல் துறையில் ஈரோடு அதிரடிப்படை ஐ.ஜி.யாக பணியாற்றி வருபவர் ஐபிஎஸ் அதிகாரி முருகன் (59). இவர் சென்னையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியாக பணியாற்றியபோது இவருக்கு கீழ் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரியான பெண் எஸ்.பி ஒருவர், இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார்.

அதில், அவர் ‘செல்போனில் ஆபாச தகவல்களை அனுப்பினார் என்றும், அறைக்கு தனியாக அழைத்து அத்துமீறியதாகவும், சம்மதம் இல்லாமல் செல்போனில் புகைப்படம் எடுத்ததாகவும், பாலியல் ரீதியிலான வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தினார்.

செல்போனில் ஐஜி அனுப்பிய தகவலும் ஆதாரமாக கொடுக்கப்பட்டு, ஆதாரமாக இணைத்து முருகன் மீது புகார் கொடுக்கப்பட்டது. குறிப்பாக 2017 ஜூலை முதல் 2018 ஆகஸ்ட் வரை பலமுறை தனக்கு ஐ.ஜி முருகன், பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் அதிகாரி 2018-ல் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக விசாகா கமிட்டி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில் ஐ.ஜி முருகன் மீது சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 3 சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவானது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஐ.ஜி முருகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து நிலுவையில் உள்ள வழக்கில் ஒப்புதல் வழங்கப்பட்டதை அடுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க.!