chennireporters.com

பிறந்தநாளில் சதம் அடித்து சாதனை படைத்த விராட் கோலி. ஜடேஜாவின் சுழல் பந்தில் வீழ்ந்த தென்னாப்பிரிக்கா..

கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 37-வது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடின. இதில் தென் ஆப்பிரிக்க அணியை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி  இந்திய அணி வெற்றி பெற்றது. பேட்டிங்கில் கோலி சதம் விளாசி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார். ஜடேஜா அற்புதமாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணியை தலைதெறிக்க ஒட விட்டார்.

கொல்கத்தா நகரில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்தது இந்தியா. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து 62 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரோகித் 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார். தென் ஆப்பிரிக்க வீரர் கேஷவ் மகாராஜ் வீசிய அற்புதமான பந்தில் க்ளீன் போல்ட் ஆனார் கில்.

தொடர்ந்து ஸ்ரேயஸ் ஐயருடன் இணைந்து பலமான கூட்டணி அமைத்தார் கோலி. தொடக்கத்தில் இருவரும் நிதானமாக ரன் சேர்த்தனர். அவர்களது ஆட்டம் அருமையாக இருந்தது. இருவரும் 134 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஸ்ரேயஸ், 77 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 17 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் 14 பந்துகளில் 22 ரன்கள் விளாசினார். ஜடேஜா 15 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.

மறுபக்கம் கோலி நிலையாக ஆடி ரன் சேர்த்தார். இந்தப் போட்டியில் 121 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார் அவர். மொத்தம் 10 பவுண்டரிகளை ஸ்கோர் செய்தார். இது ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அவர் பதிவு செய்துள்ள 49-வது சதம் ஆகும். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் சமன் செய்தார். இன்று அவரது பிறந்தநாள் என்பது கூடுதல் சிறப்பு.

327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டியது. அந்த அணி தொடக்கம் முதலே விக்கெட்களை சீரான இடைவெளியில் இழந்தது. அதன் காரணமாக அந்த அணியால் பெரிய அளவில் பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை.

டிகாக், பவுமா, மார்க்ரம், கிளாசன், வான்டர் டுசன், மில்லர், கேஷவ் மகாராஜ், யான்சன், ரபாடா, இங்கிடி ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 27.1 ஓவர்களில் 83 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது தென் ஆப்பிரிக்கா. அதன் மூலம் 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஜடேஜா 9 ஓவர்கள் வீசி 5 விக்கெட்களை கைப்பற்றினார். பவுமா, கிளாசன், மில்லர், கேஷவ் மகாராஜ் மற்றும் ரபாடா ஆகியோரது விக்கெட்களை அவர் வீழ்த்தினார். ஷமி மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். சிராஜ் ஒரு விக்கெட் கைப்பற்றினார். விராட் கோலி, ஆட்ட நாயகன் விருதை வென்றார். ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இய்திய ஆணி உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கிரிகெட் ரசிகர்கள் இப்போதே ஆரூடம் சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

இதையும் படிங்க.!