chennireporters.com

கப்பல் கேப்டனிடம் ரூபாய் 2.26 பண மோசடி கணவன் மனைவி தலைமறைவு.

சென்னையைச் சேர்ந்த கப்பல் கேப்டனிடம் ரூ. 2.26 கோடி பண மோசடி செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த தம்பதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தாம்பரம் அடுத்த மணிமங்கலம், கீழ்ப்படப்பை சாலையைச் சேர்ந்தவர் முகம்மது அஷ்ரப் புஹாரி (61). வெளிநாட்டில் உள்ள தனியார் கப்பல் நிறுவனத்தில் கேப்டனாக பணிபுரிந்து வருகிறார்.

இவர் சென்னை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் சென்னை, மதுரவாயலைச் சேர்ந்த யாஸ்மின் பானு, அவரது கணவர் எஸ்எம்பி சாதிக் இருவரும் தாங்கள் நடத்தும் ரியல் எஸ்டேட் தொழிலில் என்னை முதலீடு செய்யும்படியும், அதில் வரும் லாபத்தில் சரிபாதி எடுத்துக் கொள்ளலாம் எனவும் ஆசை வார்த்தை கூறினர். நானும் அதை நம்பி கடந்த 2012ம் ஆண்டு முதல், 2021ம் ஆண்டு வரை  ரூ. 2 கோடியே 26 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளேன்.

நான் பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்ததால் என்னிடம் வாங்கிய பணத்திற்கு நிலங்களை அவர்கள் தங்கள் இருவர் பெயரிலேயே வாங்கிக் கொள்வதாகவும், அவற்றை விற்ற பின்னர் அதன் முதலீட்டையும், லாபத்தையும் எனக்கு முறையாக கணக்குக் காட்டி ஒப்படைத்து விடுவதாகவும் உறுதியளித்தனர். அதன் பேரில் என்னிடம் பெற்ற பணத்தில் தமிழகம் முழுவதும் பல நிலங்களை வாங்கி வைத்துள்ளனர்.

அது தவிற  10 லட்சம் ரூபாய்க்கு கார் ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். பணம் கொடுத்து பல ஆண்டுகளாகியும் லாபத்திலும் பங்கு தராமல் எனது அசலையும் தராமல் இழுத்தடித்தனர். இந்த நிலையில் நான் கடந்த 2022ம் ஆண்டு சென்னைக்கு திரும்பி வந்து அவர்களிடம் பணத்தை கேட்ட போது உங்களிடம் வாங்கிய பணத்தை நாங்கள் திரும்பத்தந்து விட்டோம் என்று சில பத்திரங்களை காண்பித்தனர்.

அதில் நான் கையெழுத்திட்டது போல போலியாக ஆவணம் தயாரிக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நான் அந்த பத்திரங்களின் உண்மைத்தன்மையை அரசு கருவூலத்துக்கு அனுப்பி ஆய்வு செய்த போது அவை அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது. ஆகவே இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும்’’ இவ்வாறு அந்த புகார் மனுவில் முகமது அஸ்ரப் புகாரி கூறியிருந்தார்.

இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தும்படி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணைக்கமிஷனர் சுப்புலட்சுமிக்கு உத்தரவிட்டார். உதவிக்கமிஷனர் கொடிலிங்கம், இன்ஸ்பெக்டர் தயாளன் ஆகியோர் நடத்திய விசாரணையில் எஸ்எம்பி சாதிக் மற்றும் அவரது மனைவி யாஸ்மின் பானு இருவரும் சேர்ந்து அஸ்ரப் புகாரியிடம் ரூ. 2. 26 கோடி பணம் பெற்று அதனை திரும்பக் கொடுத்து விட்டது போலி ஆவணம் தயாரித்தது தெரியவந்தது.

அதனையடுத்து இருவர் மீதும் தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 464, 465, 406, 420 உள்பட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடிவந்தனர். போலீசார் தேடுவது தெரியவந்ததும் எஸ்எம்பி சாதிக்கும், யாஸ்மின் பானுவும் தலைமறைவாகி உள்ளனர். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க.!