chennireporters.com

தலைவர் ஆகி நின்ற தத்துவம் நம்மை வழி நடத்தட்டும்! தமிழீழம் என்கின்ற மாவீரர்களின் புனிதக்கனவு ஈடேறட்டும்! – சீமான் அறிக்கை.

உலகமே வியந்து பார்த்த உத்தம தலைவன் விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த நாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

image credit ஓவியர் இதயதூரிகா

அந்த வகையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.உலக வரலாறு என்பதே சில தனி மனிதர்களின் வரலாறுதான்’ என்கிறார் இரசியப்புரட்சியாளர் லெனின்.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடியான தமிழர் என்கிற தேசிய இனத்தின் வரலாறு என்பது ஒப்பாரும் மிக்காரும் இல்லாது மறத்தின்வழி நின்று அறத்தின் மொழியெடுத்து பேசிய சில தனி மனிதர்களின் இரத்தமும், தசையும் நிரம்பிய வாழ்வியலாலே எழுதப்பட்டு இருக்கிறது.

சூழ்ந்து நிற்கும் வன்பகை நடுங்க, வேலெடுத்து பாய்ந்து, தாய் நிலம் காத்து நின்ற முப்பாட்டன் முருகன் பாரினுக்கே தெய்வம் ஆனான்.

அலைமிகுந்து ஓடும் நீரை ஓரிடத்தில் தேக்கி வேளாண்மை கண்டு விளைச்சல் அடைய முடியும் என்று என உலகத்திற்கு கற்பித்தான் நமது பாட்டன் கரிகால்
பெருவளத்தான்.

பாறைகளே கிடைக்காத வண்டல் நிலத்தில் எங்கிருந்தோ கரும்பாறைகளை தூக்கிவந்து, எழில்மிகு சிற்பங்களாக செதுக்கி வைத்து, வானை முத்தமிடும் அளவிற்கு அடுக்கி வைத்து, தஞ்சை பெருவுடையாரால் வான்புகழ் கொண்டான் நமது பாட்டன் அருண்மொழிச்சோழன்.

இப்படி கணக்கற்றவர் தமிழின வரலாற்றுப் பெருமிதப்பக்கங்களில் தங்க எழுத்துக்களில் மிளிர்ந்தாலும், அவர்கள் அனைவரையும் தாண்டி ஒரு மடங்குமேலாக உயர்ந்து நின்று, தமிழின பெருமிதச்சிகரத்தில் வைரமாய் ஒளிர்பவர் நமது தேசியத்தலைவர் அன்பு அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மட்டும்தான்.

தாய் நிலம் மீட்க, தங்கள் உரிமை காக்கப் பொங்கியெழுந்து போராடப் புறப்பட்ட எத்தனையோ புரட்சிகர இயக்கங்கள் இந்த புவியில் உண்டு.

எப்படியேனும் எதிரியை வீழ்த்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி, களத்தில் நின்ற போராளிகள் எங்கும் உண்டு.

ஆனால், மானம் காக்க, மண்ணை மீட்க களத்தில் நின்றாலும், ஒரு துளி அளவிலும் அறத்தை இழக்காத மானமறவர் கூட்டம் உலகில் உண்டென்றால் அது எங்கள் தாய்நிலம் காக்கப் போராடிய தமிழீழத்தேசிய இராணுவமான விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும் தான்.

அறம் வழி நின்ற ஆன்றோனாய், மறம் பாடும் வீர களத்தில் கூட ஈர இதயம் கொண்ட சான்றோனாய் எங்கள் முன்னால் வாழ்ந்தார் தலைவர் பிரபாகரன் அவர்கள்.

இந்த உலகத்தில் வாழ்கிற எல்லா தேசிய இனங்களையும் போல தன்மானத்தோடு, தன்னுரிமையோடு வாழ, எங்களுக்கென்று உள்ளங்கை அளவு கொண்ட ஒரு நாடு என்கின்ற அடிப்படை மனித உரிமையை கோரித்தான் அடிமை மக்களின் ஆவேசக்குரலாய் எங்கள் தலைவர் களத்தில் நின்றார்.

ஈழம் என்பது அந்தத் தீவில் வசிக்கும் பூர்வக்குடி தமிழினத்திற்கான நாடு மட்டுமல்ல இந்தப்பூமிப்பந்தில் வசிக்கும் 12 கோடி தமிழர் என்கின்ற தேசிய இனத்திற்கான தாய் வீடு என்பதை உலகத்திற்குக் காட்டவே தலைவர் பிரபாகரன் அவர்கள் வரலாறு காணாத வீரம் செறிந்த ஒரு மாபெரும் போராட்டத்தை உலக வல்லாதிக்கங்களுக்கெதிராக ஒற்றை மனிதராக நின்று நிகழ்த்தினார்.

இரண்டு விழிகள் தான் ஆனால் எத்தனை கனவுகளோ என்பது போல, பிரபாகரன் என்கின்ற ஒற்றை மனிதன் ஆற்றலும், அறிவும் கொண்ட கற்றை மனிதர்களை புனித இலக்கிற்காக படையாகக் கட்டி நிமிர்ந்து நின்றார். உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன்.

ஆனால் அந்த உயிரைவிட உன்னதமானது எமது மதிப்பு எமது உரிமை; எமது விடுதலை’ என முழங்கி, காலம் காலமாய் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழர்களை மீட்க, தாய்நிலம் காக்க, தமிழ்மொழி போற்ற, தன் உயிரை விதையாக விதைக்கும் இலட்சக்கணக்கான மாவீரர்களை தன் சமரசமில்லாத வாழ்வியலால், அறம் போற்றியப் போர்க்குணத்தால், பெற்றெடுத்த ஆண் தாயாக எங்கள் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் திகழ்ந்தார்.

தன் குடும்பம், தன் வீடு, தன் சொத்து என வாழ்ந்து வரும் தலைவர்களுக்கு மத்தியில் இன விடுதலைக்காக தன் இல்லத்தில் உதித்த மூன்று தலைமுறையையும் களத்தில் பலிகொடுத்து நாடு போற்றும் நாட்டார் தெய்வமாகவே மாறிப்போனவர் எங்கள் தலைவர்.

யாராலும் கனவில் கூட கட்டமுடியாத ஒரு நாட்டினை கட்டி, தமிழரின் காலந்தொட்ட களங்கமான சாதித்து துயர் போக்கி, அடுக்களையில் முடங்கிக் கிடந்த பெண்ணை துவக்கேந்த வைத்துக் களத்தில் முன்னிறுத்தி பெண்ணிய விடுதலையைச் சாத்தியப்படுத்தி, வீதி எங்கும் முழங்கட்டும் நற்றமிழ் என தாய்த்தமிழ் காத்து, ஒழுக்கமும், விடுதலையும் ஒருங்கே நிறைந்த ஒரு தேசத்தை கட்டி, இப்படியும் ஒரு ஆட்சி நடக்குமா என்ற வகையில் அறம் வழுவாத புகழ் ஆட்சிசெய்து உலகத்தைத் திரும்பிப்பார்க்க வைத்தவர் எங்கள் தலைவர்.

உலகில் எல்லோராலும் கைவிடப்பட்ட எம் தமிழ் இனத்தை அழிக்க புறப்பட்ட சிங்கள இனவாதப்படைகளுக்கு முன்னால் நிலம், நீர், வானம் என முப்படை கட்டி , காட்டுக்குள் இருந்தாலும் கணப்பொழுதில் விமானம்கட்டி விண்ணில் பறக்க வைத்து தமிழர் என்ற தொன்மை தேசிய இனத்திற்கு அடையாளமாக மாறிப்போனவர் எங்கள் தலைவர்.

எங்கள் நெஞ்சங்களில் நிறைந்து நின்று, எதனாலும் அடங்கிவிடாத ஆற்றலை, எதிரிகளை கலங்கச்செய்யும் மன உறுதியை, தாயக விடுதலை என்கிற புனித இலட்சியக்கனவை எங்களுக்குள் விதைத்துத் தத்துவமாக நிறைந்து , தலைவராக நின்று எங்களை வழிநடத்துபவர் என் உயிர் அண்ணன் எங்கள் தலைவர்.

அவர் தான் எங்களது அடையாளம்! முகம்; முகவரி என அனைத்துமே! எந்தப்புனிதக் கனவுக்காக என்னுயிர் அண்ணன் அவர்கள் இறுதிவரை களத்தில் அசைக்க முடியாத மனவுறுதியோடு நின்றாரோ, அந்த தாயக விடுதலை என்கின்ற புனிதக்கனவு நம் ஒவ்வொருவருக்கும் கையளிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழீழத் தேசிய இராணுவமான விடுதலைப்புலிகள் என்கின்ற புனிதப்போராளிகளின் உயிரில் நிறைந்திருந்த தமிழீழம் என்ற இலட்சியநோக்கு உலகத்தமிழர்களின் உள்ளங்களுக்கு தலைவர் பிரபாகரன் அவர்களது அறமும், வீரமும் நிறைந்தப் புனித வாழ்வின் மூலம் நகர்த்தப்பட்டு இருக்கிறது.

உலகத்தமிழர்கள் அனைவருக்கும் நமது தேசியத்தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 67 வது பிறந்த நாளில் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் அளப்பெரும் பெருமிதமும், உள்ளநெகிழ்ச்சியும் அடைகிறேன்.

தலைவர் ஆகி நின்ற தத்துவம் நம்மை வழி நடத்தட்டும்!
தமிழீழம் என்கின்ற மாவீரர்களின் புனிதக்கனவு ஈடேறட்டும்!

வாழ்க தலைவர் பிரபாகரன்! வெல்க தமிழீழம்!
தமிழர்களின் தாகம்! தமிழீழத்தாயகம்!

என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் இதுதவிர பாவலர் அறிவுமதி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உலகத் தமிழர்களின் தலைவர் பழநெடுமாறன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைவர்.

வைகோ தமிழ் ஆர்வலர்கள் மூத்த எழுத்தாளர்கள் படைப்பாளிகள் அனைவரும் தங்களது முகநூல் பக்கங்களிலும் ட்விட்டர் மற்றும் சமூக வலைதளங்களில் விடுதலைப்புலிகளின் கட்சித் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க.!