தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் பொழுது திருவேற்காடு நகராட்சியில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் டெங்கு பணியாளர்களுக்கு மட்டன் பக்கெட் பிரியாணி வழங்கப்பட்டது அரசியல் கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த புதன்கிழமை மூன்றாம் தேதி (3.4.24) திருவேற்காடு நகராட்சியில் சிவன் கோயில் சாலையில் உள்ள பிரேம் தாஸ் திருமண மண்டபத்தில் அங்கேயே சமைத்து திருவேற்காடு நகராட்சி ஊழியர்கள் மற்றும் அங்கு வேலை செய்யும் டெங்கு பணியாளர்களுக்கு மட்டன் பக்கெட் பிரியாணி வழங்கப்பட்டதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வெளியானது.
இது குறித்து நாம் திருவேற்காடு நகராட்சி ஆணையாளர் கணேசன் அவர்களை தொடர்பு கொண்டு இது தொடர்பாக விளக்கம் கேட்டோம். அதற்கு அவர் அது போன்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. நான் எந்த உத்தரவும் அதற்காக அளிக்கவில்லை. அதற்காக நான் எந்த நிதியையும் ஒதுக்கவில்லை. எனது தலைமையில் அது போன்ற நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.
திருவேற்காடு நகராட்சி ஆணையாளர் கணேசன்.
உங்கள் அலுவலகத்தில் உள்ள வருவாய் அலுவலர் நாகராஜ் என்பவர் அந்தப் பணிகளை செய்தார் என்றும் டெங்கு பணியாளர் கோமதி என்பவர் தலைமையில் அவரது டீமில் வேலை பார்க்கும் பெண்கள் பிரியாணியை வாங்கிச் சென்றார்கள் என்று கேட்டதற்கு அது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது என்று மறுப்பு தெரிவித்தார்.
இது குறித்து திருவேற்காடு பகுதியில் உள்ள பாஜகவை சேர்ந்தவர்கள் திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சி ஒன்றுக்கு ஆதரவாக டெங்கு பணியாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று திருவேற்காடு நகராட்சி தலைவரும் துணைத் தலைவர்களின் ஏற்பாட்டில் பிரியாணி வழங்கப்பட்டது என்று சொல்கின்றனர் வேறு ஒரு தரப்பினர்.
உண்மை என்னவென்று என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்தால் தான் தேர்தல் பிரச்சாரத்திற்காக வழங்கப்பட்டதா இல்லையா என்பது தெரிய வரும்.
கூடுதல் தகவல் ஏற்கனவே நான்கு முறை சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை மட்டன் பிரியாணியும் பிரட் அல்வாவும் வழங்கப்பட்டது. அதிகாரிகளுக்கு மட்டும் கறி தொக்கு உடன் கூடிய கிரேவியும் சேர்த்து வழங்கப்பட்டது.
இந்த பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியில் வருவாய்த் துறை ஊழியர்கள் பில் கலெக்டர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஜீப்பில் எடுத்து வந்து பிரேம் தாஸ் மண்டபத்தில் வைத்து டோக்கன் கொடுத்து வழங்கப்பட்டது.
திருவேற்காடு நகராட்சி நிர்வாகத்திற்கு மட்டன் பிரியாணி வழங்கப்பட்டதில் சம்பந்தமில்லை என்றால் அரசு ஜீப்பில் மட்டன் பிரியாணி எடுத்துச் செல்வதற்கு உத்தரவிட்டது யார்? பிரேம் தாஸ் திருமண மண்டபத்தில் இருந்து மீதி இருந்த மட்டன் பிரியாணி பக்கெட்டுகளை ஜீப்பில் யாருக்கு எடுத்துச் சென்றார்கள் என்ற கேள்வியை முன் வைக்கிறார்கள் திருவேற்காடு நகர நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் திருவேற்காடு நகராட்சியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தால் உண்மை நிலை தெரிய வரும் என்கின்றனர் நாம் தமிழர் கட்சி