எட்டு நாள்கள் தீவிர தேடுதல் பணிகளுக்குப் பின்னர் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் ஒரே மகனான வெற்றி துரைசாமியின் உடல் சட்லஜ் நதியின் பாறைக்கடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி அ.தி.மு.க முன்னாள் மேயரும், மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தின் நிறுவனருமான சைதை துரைசாமியின் ஒரே மகன் வெற்றி துரைசாமி. தந்தையின் ஐஏஎஸ் பயிற்சி மையத்தை நடத்தி வந்தார். சினிமா மீது கொண்ட அதீத ஆர்வத்தால் `என்றாவது ஒரு நாள்’ என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குநராகவும் பெயரெடுத்தார். இந்த நிலையில், தனது மற்றொரு படத்துக்கான லொக்கேஷன் பார்ப்பதற்காக, திருப்பூரைச் சேர்ந்த தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சலப் பிரதேசத்திற்குச் சென்றிருக்கிறார். அங்கு வாடகை கார் ஓட்டுநர் தன்ஜிங்குடன் சிம்லா பகுதியை சுற்றி பார்த்து முடித்துவிட்டு இருவரும், மீண்டும் சென்னை திரும்புவதற்காக பிப்ரவரி 4-ம் தேதி மாலை விமான நிலையம் நோக்கி காரில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, கசாங் நலா என்ற மலைப்பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஒரு பாறை மலையிலிருந்து உருண்டு வந்து வெற்றி துரைசாமி பயணித்த காரின்மீது மோதியதாகக் கூறப்படுகிறது. அதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையிலிருந்து விலகி அருகிலிருந்த 200 மீட்டர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து, அங்கிருந்த சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. உடனடியாக இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல்துறை மற்றும் மீட்பு படையினர் காரை கயிறுகட்டி வெளியில் கொண்டுவந்தனர். அந்த காரில் சடலமாக உள்ளூர் ஓட்டுநர் தன்ஜிங்கின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட கோபிநாத் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், வெற்றி துரைசாமியின் நிலை என்ன ஆனது என்பது குறித்து தெரியாமல் போனது.
இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்து கடும் துக்கத்துக்காளான தந்தை சைதை துரைசாமி, தனது மகனின் நிலைகுறித்து தகவல் சொல்பவருக்கு ரூ.1 கோடி வழங்குவதாக தெரிவித்தார். தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. காவல்துறை, ராணுவம், விமானப் படை வீரர்கள் ஒருபுறமும், ஸ்கூபா டைவிங் செய்யும் நீர்மூழ்கி வீரர்கள் ஆற்றில் நீந்தியும் வெற்றி துரைசாமியைத் தேடும் பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து வெற்றி துரைசாமியின் உடல் எடை கொண்ட உருவ பொம்மையை விபத்து நடந்த பகுதியில் உள்ள ஆற்றில் விட்டு, அதன் போக்கை மீட்புப்படை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர். அந்தநிலையில், சட்லஜ் நதிக்கரையோர ஒரு பாறையில் ரத்தக்கறை படிந்த மனித மூளையின் திசுக்கள் ஒட்டியிருந்தது கண்டறியப்பட்டது.
அந்த திசுக்கள் சேகரிக்கப்பட்டு, அது வெற்றி துரைசாமியினுடையாதா என்பதை உறுதிபடுத்துவதற்காக, டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல, சேகரிக்கப்பட்ட திசுக்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்காக, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துனையில் வெற்றி துரைசாமியின் தந்தை மற்றும் தாயாரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், ஆய்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே வெற்றியின் உடல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
கார் விபத்து நடந்த பகுதியிலிருந்து 6 கி.மீ தூரத்தில், சட்லெஜ் நதியிலிருந்து வெற்றி துரைசாமியின் உடலை தேடுதல் பணிகளில் ஈடுபட்டுவந்த ஸ்கூபா டைவிங் நீர்மூழ்கி வீரர்கள் மீட்டெடுத்திருக்கின்றனர். மீட்கப்பட்ட உடலை உடற்கூராய்வுக்காக அருகிலுள்ள மருத்துமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் வெற்றி துரைசாமியின் உடல் சென்னைக்கு கொண்டுவரப்படும். இந்த கோர சம்பவத்தால் உயிரிழந்த வெற்றிக்கு ஆழ்ந்த இரங்கலையும், சொல்லவொண்ணா துயறிலிருக்கும் சைதை துரைசாமி குடும்பத்தினருக்கு ஆறுதலையும் பல்வேறு அரசியல் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சைதை துரைசாமிக்கு மல்லிகா என்ற மனைவியும் வெற்றி துரைசாமி என்ற மகனும் உள்ளனர். 2012 ஆம் ஆண்டு வெற்றிக்கு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார். அது போல் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் கலந்து கொண்டார். 2016ம் ஆண்டு வருமான வரித் துறை 40 இடங்களில் சோதனை நடத்தியதில் வெற்றியின் வீடும் ஒன்று. அவர் வசிக்கும் சிஐடி நகர் வீடு, தாம்பரத்தில் உள்ள செம்பாக்கம் பண்ணை வீட்டிலும் ரெய்டு நடந்தது குறிப்பிட தக்கது.