அடுத்தமாதம் நடைபெறவுள்ள கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் இந்திய குடியரசு கட்சி வேட்பாளருக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் நேரில் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் தகவல்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநரான பா.ரஞ்சித் சினிமா பணிகளோடு, சமூக, கலை, பண்பாட்டு பணிகளையும் முன்னெடுத்து வருகிறார். எந்த பணியில் ஈடுபட்டாலும் தன்னுடைய அரசியல் பார்வையை பிரதிபலிக்கும் அவர் கர்நாடக தேர்தல் குறித்து பேசியுள்ளார்.
அப்படியுள்ள நிலையில் மே 10ஆம் தேதி நடைபெறும் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் கே.ஜி.எப் தொகுதியில் எஸ்.ராஜேந்திரன் என்பவர் போட்டியிடுகிறார்.
தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கோலார் தங்கவயல் தொகுதியில் இந்தியக் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் போட்டியிடுகிறார். அவருக்கு தனது ஆதரவைத் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கோலார் தங்க வயல் சட்டமன்றத் தொகுதி தனித் தொகுதி ஆகும் இந்த தொகுதியில் மொத்தம் இரண்டரை லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 234 வாக்கு மையங்கள் உள்ளன. தற்போது களத்தில் உள்ள இந்திய குடியரசு கட்சி வேட்பாளர் ராஜேந்திரன் ஏற்கனவே மூன்று முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.