chennireporters.com

அமித்ஷாவிடம் அரசியல் பேசவில்லை; எடப்பாடி ஸ்டேட்மென்ட்.

அடுத்தடுத்து வழக்குகளால் திணறல் மோடியை சந்திக்க டெல்லி சென்றார் எடப்பாடி: 3 நாள் முகாமிட்டு பஞ்சாயத்தை தீர்க்க திட்டம்; பிரதமரை சந்திக்க ஓபிஎஸ்சும் அனுமதி கேட்டுள்ளதால் பரபரப்பு;

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு மூன்று நாட்கள் தங்கியிருக்கும் அவர் தேர்தல் ஆணையரை இன்று சந்திக்கிறார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டு அனுமதி கேட்டுள்ளார். இதுவரை அவருக்கு அனுமதி கிடைக்காத நிலையில், ஓ.பன்னீர்செல்வமும் அனுமதி கேட்டுள்ளதால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு எழுந்துள்ளது. எடப்பாடி – ஓபிஎஸ் இடையே மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

இந்த நிலையில், அதிமுகவின் சிறப்பு பொதுக்குழுவை எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 11ம் தேதி நடத்தினார். இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றம் சென்றார். நீதிமன்றமும் பொதுக்குழு நடத்தியது செல்லும் என்று தீர்ப்பு அளித்தது. அதேபோல் அதிமுக தலைமை அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் எடப்பாடி அணிக்கு சாதகமாகவே உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானது. தற்போது, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி உள்ளதாகவே கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரும் சென்றுள்ளனர். அவர்கள் 3 நாட்கள் டெல்லியில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளனர். அதிமுக பொதுக்குழுவில் அதன் உறுப்பினர்களிடம் 6 பக்கத்துக்கு அபிடவிட் தயாரித்து அதில் கையெழுத்து வாங்கியிருந்தனர். அதை தேர்தல் ஆணையத்தில் இன்று தாக்கல் செய்கின்றனர். இதற்காக தேர்தல் ஆணையரிடம் அனுமதி கேட்டுள்ளனர். இன்று பகல் 12 மணிக்கு தேர்தல் ஆணையத்தில், மனு அளிக்கின்றனர்.

அதில் பொதுக்குழுவை, நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை ஏற்றுக் கொண்டு அதிமுகவில் எங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வமும் மனு அளித்துள்ளதால் அதில் தேர்தல் ஆணையம்தான் இறுதி முடிவு எடுக்க முடியும். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க திட்டமிட்டுள்ளார். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிச்சாமி கடந்த மாதம் டெல்லி சென்றிருந்தார். அப்போது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க நேரம் கேட்டும், வழங்கப்படவில்லை.

இதனால், சுற்றுப்பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பினார். அதேபோல செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்தார். அப்போது தனியாக சந்திக்க எடப்பாடி பழனிசாமி அனுமதி கேட்டார். வழங்கவில்லை. ஆனால் வரவேற்பு கொடுக்க எடப்பாடி பழனிசாமிக்கும், வழியனுப்பி வைக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அனுமதி அளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் விரக்தியடைந்தனர்.

அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான சில தொழிலதிபர்கள், கான்ட்ராக்டர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி, பல கோடி ரூபாய் வரி முறைகேட்டை கண்டுபிடித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். எடப்பாடியை குறி வைத்துத்தான் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் பெங்களூரில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் எடப்பாடியின் உறவினர் சந்திரகாந்த் ராமலிங்கம் மீது லோக் ஆயுக்தா போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி மற்றும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபர் மூலம் சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தங்கள் அணியை சந்திக்க மறுப்பது குறித்து பேசியுள்ளனர். அப்போது பியூஷ் கோயல், தான் சந்திக்க ஏற்பாடு செய்வதாக கூறியதோடு, சென்னையில் இருந்தால் எப்படி. டெல்லியில் வந்து தங்கியிருந்தால், இருவரையும் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்று உறுதியளித்துள்ளார்.

இதை ஏற்றுத்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். அதில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுப்பதற்காக சி.வி.சண்முகத்தையும், மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க வேலுமணியையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். பியூஷ் கோயல் சொன்னதால் அமித்ஷா மட்டும் சந்திக்க சம்மதித்துள்ளார். ஆனால் நாளும், நேரமும் பின்னர் சொல்வதாக கூறியுள்ளனர். ஆனால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து இதுவரை எந்த அனுமதியும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. எடப்பாடி டெல்லியில் முகாமிட்டு தனக்கு ஆதரவு திரட்டும் தகவல் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தெரியவந்தது. இதனால் வாரணாசியில் முகாமிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், அங்கிருந்தபடியே பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்திக்க அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளார்.

வாரணாசியில் 3 நாட்கள் பன்னீர்செல்வம் தங்கியிருக்கிறார். அதற்குள் இருவரையும் பார்க்க விரும்புகிறார். அனுமதி கிடைத்தால் வாரணாசியில் இருந்து அப்படியே டெல்லி செல்வார். இல்லாவிட்டால் சென்னை திரும்புவார். சந்திக்க நேரம் கிடைக்கும் போது டெல்லி செல்வார் என்று கூறப்படுகிறது. இருவரும் ஒரே நேரத்தில் அனுமதி கேட்டுள்ளதால், பாஜ தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இருவரும் டெல்லி வரை சென்று தங்களது கோஷ்டி சண்டையை காட்டி வருவதால் அதிமுக தொண்டர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பெங்களூரில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் எடப்பாடியின் உறவினர் சந்திரகாந்த் ராமலிங்கம் மீது லோக் ஆயுக்தா போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பா.ஜ திட்டம் பலிக்குமா?

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தலை எடப்பாடி தலைமையில்தான் அதிமுக சந்தித்தது. இந்த மூன்று தேர்தலிலும் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதன்படி, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, டி.டி.வி.தினகரனை மீண்டும் சேர்ப்பதுடன், இபிஎஸ் – ஓபிஎஸ் இணைந்து செயல்பட வேண்டும் என்று பா.ஜ திட்டமிடுகிறது. ஓ.பன்னீர்செல்வமும் இதே கருத்தை வலியுறுத்தி வருவதுடன், சசிகலாவுடன் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாகி வருகிறார். ஆனால், இதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லை. எனது (எடப்பாடி) தலைமையின் கீழ் தான் அதிமுக செயல்பட வேண்டும் என்று உறுதியாக உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால்தான், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கி உள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வது முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.

இதையும் படிங்க.!